வியாழன், 19 ஜனவரி, 2012

ஜலதோஷம், தும்மல் என்றாலும் சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு டெஸ்ட்டுகளை

இன்றோ, மருத்துவம் வணிகமாகிவிட்டதுகடவுள் மாதிரி வந்து என் புள்ளை உயிரை காப்பாத்துனீங்க டாக்டர்...’’

- ஒரு காலத்தில் டாக்டர்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு நோயாளிகளின் உறவினர்கள் சிந்தும் கண்ணீர் கலந்த வார்த்தைகள் இவை!
இன்றோ, மருத்துவம் வணிகமாகிவிட்டது; நோயாளிகளின் நாடியைப் பிடித்து சிகிச்சை செய்த மருத்துவர்கள் இப்போது கரன்சியின் வாசத்தைப் பார்த்தே நோயாளிகளைப் பார்க்கிறார்கள். அன்று டாக்டர்களின் கையில் இருந்த ஆபரேஷன் கத்தி உயிரைக் காப்பாற்றியது; இன்றோ அந்தக் கத்திகள் கசாப்புக்காரனின் கைகளுக்கு மாறிவிட்டன. இந்த ‘ஆரோக்கிய மாற்றம்(!?)’தான் நமது ஸ்பெஷல் ஸ்டோரியின் கரு... தனியார்களின் தனி ஆவர்த்தனம்!
அன்று அரசு மருத்துவமனைகள்தான் கோயில்; டாக்டர்களே தெய்வம். நோயாளிகளுக்கு அவர்களது கனிவான பேச்சுக்களே முதல் மருந்து. இப்போது அந்த அரசு மரு த்துவமனைகளைப் பாருங்கள்... ரத்த வாந்திதான் நம்மைக் குமட்டும். உண்மையில், அந்த மருத்துவமனைகளே நோயாளிகளாக பல்லிளித்துக் கொண்டிருக்கின்றன. நோயாளிகள் படுத்திருக்கும் படுக்கைகள் முதல் கழிப்பறை வரை அங்கு சுகாதாரமே எமனாக பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. மக்களின் அசையாத நம்பிக்கையில் விரிசல் விழ... தனியார் மருத்துவமனைகளை நோக்கி சாரிசாரியாகப் போகிறார்கள் மக்கள்.

பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகள் பல கோடி ரூபாய் முதலீடு செய்கின்றன. ஏகப்பட்ட நவீன இயந்திரங்களை வைத்துக்கொள்கிறார்கள். அவற்றின் அசலை எப்படி எடுக்க முடியும்? உதாரணமாக, காஸ்ட்லியான ஒரு இயந்திரத்தை வரும் நோயாளிகளுக்கு எல்லாம் பயன்படுத்தினால்தான் போட்ட காசை எடுக்க முடியும். இதனால்தான் ஜலதோஷம், தும்மல் என்றாலும் சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு டெஸ்ட்டுகளை எடுத்து நோயாளிகளின் பாக்கெட்டைக் காலி செய்கிறார்கள்.

இது ஒரு புறமிருக்க, டாக்டர்களின் அலட்சியப் போக்கால் ஒரு கட்டத்தில் நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும் சம்பவங்களும் நடப்பதுண்டு. மகப்பேறு மருத் துவரையோ, மயக்க மருந்து நிபுணரையோ வைத்துக்கொள்ளாமல் அறுவை சிகிச்சைகள் மூலம் பிரசவங்களை செய்தார் மணப்பாறையின் பிரபலமான டாக்டர் முருகேசன். ஒரு கட்டத்தில் பள்ளியில் படிக்கும் தனது மகனுக்கும் ‘ட்ரெயினிங்’ கொடுத்து அவன் அறுவை சிகிச்சை செய்வதை வீடியோ எடுத்தார். அதோடு மணப்பாறையில் நடந்த இந்திய மருத்துவ சங்கத்தின் மாதாந்திர கூட்டத்தில் போட்டுக் காட்டி தம்பட்டம் வேறு அடித்தார். பின்னர், அவர் மீது வழக்கு போடப்பட்டது. இன்று அதே முருகேசன் பிரமாண்டமான மருத்துவமனையைக் கட்டி அன்றைய தி.மு.க. அமைச்சர் மூலம் திறப்பு விழா நடத்தினார். சட்டம் தண்டனை கொடுக்கிறதோ இல்லையோ குறைந்தபட்சம் தனது மனசாட்சிக்காவது பயம் வந்திருக்க வேண்டும். நோ... மனசாட்சியைத்தான் ஆபரேஷன் தியேட்டரில் போட்டுவிட்டாரே!

ஆபத்பாந்தவர்களா இல்லை அடியாட்களா?

சேலத்தில் ஒரு தினசரி பத்திரிகையில் புகைப்படக்காரராக வேலை செய்த நாகராஜ், இரு சக்கர வாகனம் மோதி படுகாயமடைந்தார். பறந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவரை அரசு மருத்துவமனையில் சேர்ப்பதற்குப் பதிலாக, சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கே முன் பணம் கட்டினால்தான் வைத்தியம் செய்வோம் என்று கறாராகச் சொல்லிவிட்டார்கள். பணம் கட்டிய பிறகு, ‘இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது; வேறு மருத்து வமனையில் கொண்டுபோய் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கைவிரித்தனர். அப்படியும் பாக்கிப் பணம் கட்டிய பிறகுதான் நோயாளியை வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அனுமதித்தார்கள். வேறு ஒரு மருத்துவமனைக்குக் கொண்டுபோனபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று சொன்னார்கள்.

நாகராஜின் உடலுறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி விரும்பியபோது, அந்த தனியார் மருத்துவமனை ‘டெத் சர்ட்டிஃபிகேட்’ தர மறுத்துவிட்டது. ‘நாங்கள் வெளிநோயாளியாகத்தான் ‘ட்ரீட்’ செய்தோம்’ என்றனர். இதற்குள் விரைந்து வந்த சக பத்திரிகையாளர்கள், அப்படி என்றால் ‘உள்நோயாளி’ அட்டை எப்படிக் கொடுத் தீர்கள்?’ என்று கேட்டார்கள்.

விபத்தில் சிக்கி ‘அட்மிட்’ ஆகும் நோயாளிகள் குறித்து முறையாக போலீஸுக்குத் தகவல் கொடுப்பதில்லை என்பது அப்போதுதான் தெரிய வந்திருக்கிறது. இந்தப் பிரச்னையை முன்னெடுத்து கேள்வி கேட்ட ஒவ்வொரு பத்திரிகையாளரின் அலுவலகத்துக்கும் மிரட்டல் கடிதம் அனுப்பியது அந்தத் தனியார் மருத்துவமனை நிர்வாகம்.

தந்தை கெஞ்சினார்... நர்ஸ் கழற்றினார்!

பணம் கட்ட தாமதம் ஆனதால்தான் இவ்வளவு பிரச்னை என்றால், பணம் கட்டியும் வேதனையைத் திணிக்கும் சில தனியார் மருத்துவமனைகளும் உண்டு.

ஆறு மாதங்களுக்கு முன் திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு மெடிக்கல் சென்டரில் ஒன்றேகால் வயது மகனை காய்ச்சலுக்காக ‘அட்மிட்’ செய்தார் கர்ணா என்ற காங்கிரஸ் பிரமுகர். காலையில் ‘அட்மிட்’ செய்யும்போது குழந்தையைப் பரிசோதித்தார் ஒரு டாக்டர். அதற்குப் பிறகு, யாருமே குழந்தையைக் கண்டுகொள்ளவில்லை. காய்ச்சல் அதிகமானதும் பயந்து போன கர்ணா, ‘பையனை டிஸ்சார்ஜ் செய்யுங்கள். வேறு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்கிறேன்’ என்று கெஞ்சினார். ‘டாக்டர் வந்து பார்த்துச் சொன்னால்தான் டிஸ்சார்ஜ் செய்ய முடியும்’ என்று கறாராகச் சொல்லிவிட்டார்கள் ஊழியர்கள்.

ஒருவழியாக டாக்டரின் வீட்டில் போய் போராடி ‘டிஸ்சார்ஜ்’ செய்ய அனுமதி வாங்கி வந்தார் கர்ணா. பணத்தைக் கட்டிவிட்டு டிஸ்சார்ஜ் ஆகும்போது ஓடி வந்த நர்ஸு கள், ‘கையில் போட்டிருக்கும் வென்ப்ளானை(சலையின் மற்றும் ஊசி மருந்துகளை செலுத்துவதற்காக நரம்பில் போடப்படும் ஊசி) கழற்ற வேண்டும்’ என்று மல்லுக்கட் டினார்கள்.

கர்ணா, ‘‘முதல் நாள் மூன்று பேர் குழந்தையை அமுக்கிப் பிடித்துக்கொண்டு இந்த ஊசியைப் போட்டார்கள். ட்ரீட்மெண்ட் முடியும் வரை கையில் அது இருக்க வேண் டும். ஆனால், அடுத்த ஆஸ்பத்திரிக்குப் போகிறார்கள் என்பதால் மனிதாபிமானம் இல்லாமல் ஊசியை திரும்பவும் பிடுங்க முயற்சி பண்ணினாங்க. அவங்களோட அரக்க த்தனத்தை என்னன்னு சொல்றது’’ என்று கலங்கினார்.

சரி, இனி அரசு மருத்துவமனைகளுக்கு சாம்பிள் பார்ப்போமா?

அடுக்குமா அரசு மருத்துவமனைகளுக்கு?

வேலூரை அடுத்த அடுக்கம்பாறை அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் சுமார் 20 டாக்டர்கள், சென்னையில் காலை 5.45 மணிக்கு கிளம்பும் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி காட்பாடியில் 7.55-க்கு இறங்குவார்கள். அங்கேயே டிபனையும் முடித்துவிட்டு தயாராகக் காத்திருக்கும் நான்கு ஆட்டோக்கள் அவர்களை ஏற்றிக்கொண்டு 20 கி.மீ. தூரத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குப் பறக்கும். அங்கே போய் கையெழுத்துப் போட்டுவிட்டு மருத்துவமனையை ரெண்டு ரவுண்டு அடிப்பார்கள்.

மீண்டும் காட்பாடிக்கு வந்து 11 மணிக்கு வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடித்து சென்னைக்கு வருவார்கள். நேரே தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று அயராது உழைத்து ‘காசு’ பார்ப்பார்கள். ஒரு நாள் மருத்துவமனையில் கையெழுத்துப் போட்டுவிட்டு மீண்டும் காட்பாடி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து சென்னை ரயி லுக்காகக் காத்திருந்தபோது இவர்களை பொதுமக்களே மடக்கிப் பிடித்தனர். ஆகவே, ‘துறைரீதியான விசாரணை’ என்ற கண்துடைப்புடன் அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது. தற்போது ரயிலில் வராமல் சென்னையில் இருந்து காரில் அதே அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு வந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள் அந்த டாக்டர்கள்.

சட்டங்கள என்னதான் செய்கின்றன?

அதற்கு சட்டரீதியான தீர்வு ஏதாவது இருக்கிறதா? திருச்சி சேவை அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவர் சேகரனிடம் கேட்டோம். ‘‘இன்றைய சட்டங்களை வைத் துக்கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவே முடியாது. இன்று பாதிக்கப்படுவர்களில் 90 சதவிகிதம் பேர் விதி என்று பேசாமல் போய்விடுவார்கள். சிலர் டாக்டர்க ளால் ‘சமரசம்’ செய்யப்படுகிறார்கள். சமயத்தில் பணம் கொடுத்து ஆஃப் செய்கிறார்கள். இதையும் மீறி கோர்ட்டுக்குப் போனால், தீர்ப்பு வருவதற்குள் சம்பந்தப்பட்டவரின் ஆயுளே முடிந்துவிடும். என் மகள் கர்ப்பமாக இருந்தபோது, டாக்டர்கள் சொன்னதுபோல் அவ்வப்போது ஸ்கேன்கள் எடுத்தோம். குழந்தையின் மூளை, இதயம் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று ரிப்போர்ட் கொடுத்தார். ஆனால், குழந்தை பிறந்த பின்புதான் அதற்கு இதயத்தில் பெரிய பிரச்னை. இந்தக் கொடுமையை எதிர்த்து ஆதாரங்களோடு கோர்ட்டுக்குப் போனேன். ஆனால், என்னால் வெற்றி பெற முடியவில்லை’’ என்கிறார் கவலையோடு.

ஆனால் நுகர்வோர் வழக்குகளை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் வக்கீல் மார்ட்டினோ, ‘‘சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம். அல்லது நுகர்வோர் கோர்ட்டில் வழக்குத் தொடரலாம். காவல் துறை அதிகாரி ஒரு மருத்துவ நிபுணரின் அறிவுரையைப் பெற்று அதன் பின்னரே நடவடிக்கை எடுக்க முடியும். இடது கைக்குப் பதிலாக வலது கையை ஆபரேஷன் செய்தால் நுகர்வோர் நீதிமன்றங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பி ருக்கிறது. ஒரு பெட்டிக்கடை வைப்பதற்கும், சலூன் கடை வைப்பதற்கும்கூட அரசிடம் அனுமதி பெற வேண்டியிருக்கிறது. ஆனால், மருத்துவமனைகளுக்கு அப்படி இல் லை. ‘1997-ம் ஆண்டு தனியார் மருத்துவமனைகள் ஒழுங்காற்றுச் சட்டம்’ இன்றுவரை அமல்படுத்தப்படவே இல்லை. உடனே நடவடிக்கை எடுத்தால் பல பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்’’ என்கிறார்.

தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் டாக்டர் குமரன் கூறும்போது, “மருத்துவத் தொழிலைப் பொறுத்தவரை சிகிச்சை பெற வரும் நோயாளிகள் இறந்துபோவது தவிர்க்க முடியாததுதான். டாக்டர்களின் குடும்பத்தினருக்கும் இது பொருந்தும். அதே நேரத்தில் உயிரை இழக்கும் நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் டாக்டர்கள் மீது கோபப்படுவதும் நியாயமானதுதான். அதற்காக பழிக்குப் பழி என்று டாக்டர்களை யாரும் கொல்லத் துணிந்தது இல்லை. தமிழ்நாட்டில் முத ல்முறையாக டாக்டர் சேதுலட்சுமி கொல்லப்பட்டிருக்கிறார். சில சமயங்களில் மருத்துவமனையில் கிட்னி திருடியதாகவும் புகார் தருகிறார்கள். அருகருகே இரண்டு பேரையும் வைத்துக்கொண்டு ஒரே நேரத்தில் இவரிடம் இருந்து எடுத்து, அவருக்குப் பொருத்த வேண்டும். இதுபற்றிய விழிப்புணர்வு நமது மக்களுக்கு இல்லாததே இத் தகைய புகார்கள் எழக் காரணம்.’’ என்று தங்கள் தரப்பு நியாயத்தை அடுக்கினார்.

‘‘முன்பெல்லாம் சிகிச்சை தந்தும் பயன் இல்லை என்ற நிலை ஏற்பட்டால், கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள்’’ என்று ஆறுதல் சொல்வார்கள் டாக்டர்கள். இன்று..?

இதுதான் உயிர் விளையாட்டின் மாபெரும் கேள்விக்குறி!

ரெண்டு ரூபா டாக்டர்
மயிலாடுதுறையில் ‘க்ளினிக்’ நடத்தும் டாக்டர் ராமமூர்த்தியை ‘ரெண்டு ரூபா டாக்டர்’ என்று சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும். அவரிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் சிகிச்சை முடிந்ததும் அவரது மேஜையில் ஒரு ரூபாயை வைத்து விட்டுப் போவார்கள். ஒருகட்டத்தில் விலைவாசி உயர்ந்த நிலையில் பொதுமக்களே அதனை ரெண்டு ரூபாய்க்கு உயர்த்தினர். தற்போது 78 வயதாகும் ராமமூர்த்திக்கு அதனை ஐந்து ரூபாயாக உயர்த்திக் கொடுத்துவிட்டுப் போகிறார்கள் பொதுமக்கள். ஒரு டீயின் விலையைவிட குறைந்த கட்டணத்தில் வைத்தியம் பார்க்கும் இது போன்ற டாக்டர்கள் இருப்பதால் புனிதமான மருத்துவத் தொழில் இன்னும் போற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
thanks kumudam + mani chennai

கருத்துகள் இல்லை: