புதன், 28 செப்டம்பர், 2011

தீவகபெண்கள் அவமதிப்பு அமெரிக்காவுக்கு கண்டனம்

woman victimதீவகப் பெண்களை அவமதிக்கும் விதத்தில் கருத்து வெளியிட்ட அமெரிக்கப் பிரதிநிதிக்கு பெண்கள், சிறுவர்களின் உரிமைக்கான சிறகுகள் அமைப்பு கண்டனம்
அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த றொபேட் ஒ பிளேக்குக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது, அமெரிக்கப் பிரதிநிதியை அவமரியாதை செய்யும் வகையில் அரச ஆதரவு பெற்ற ஒரு குழுவின் செயலுக்காக அமெரிக்க அரசிடமும், மக்களிடம் மன்னிப்புக் கோரி நிற்பதாக தீவக உரிமைகளுக்கான மக்கள் மன்றம் என்னும் அமைப்பின் பெயரால் சேது சரவணப்பிள்ளை என்பவர் அறிக்கை விடுத்துள்ளார்
ந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை சரிவரப் புரிந்து கொள்ளாமல் அதில் ஈடுபட்ட பெண்களை அவமானப்படுத்தும் வகையில், “பிளேக்கின் வருகையை எதிர்த்து யாழ்.நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் அழைத்து வரப்பட்டவர்கள் ஏமாற்றம்” என முன்னரும் ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அப்பாவிப் பெண்களை அழைத்து வந்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் எனக் கூறும் அந்நிய நாட்டின் அடிவருடிகள், தீவகப் பெண்கள் குறித்து, முன்பு இலங்கைக்கான அமெரிக்கத் தூதராக இருந்த பிளேக் தனது நாட்டுக்கு அனுப்பிய கேபிள் செய்திகளை அண்மையில் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியதை அறிந்திருந்தும், இத்தகைய அபத்தமான கருத்துக்களைத் தெரிவிப்பது தீவகப் பெண்களின் உணர்வுகளை மேலும் சிறுமைப்படுத்துவதாகவே அமைகின்றது.

அமெரிக்காவும், அவர்களது அடிவருடிகளும் தங்களது நலன்களைப் பாதுகாப்பதற்காக அப்பாவித் தீவகப் பெண்களை இழிபடுத்துவதை எமது அமைப்பு எந்த விதத்திலும் அனுமதிக்காது என்பதுடன், கடந்த மூன்று தசாப்த காலத்தின் பின்னர் மீண்டும் தன்னிச்சையாக மக்கள் எழுச்சி கொண்டு போராட முற்பட்டுள்ளதை வரவேற்கும் எமது பெண்கள் அமைப்பு, தமது அரசியல் அபிலாசைகளுக்காக, பெண்களைக் கேவலப் படுத்த முற்பட்ட மனிதஉரிமைகள் மன்றத்திற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதேவேளை, அண்மையில் நாவாந்துறைக்குச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் “தீவகத்திற்;கு ஏன் கிறீஸ் பூதம் போகவில்லை” என்று கேட்கிறார்கள். இது கூட தீவக மக்களின் நிம்மதியை இழக்க வைக்கும் குரூர சிந்தனையின் வெளிப்பாடுதான்.

யுத்தத்தின் போது இறந்த இசையரசி போன்ற அநேக பெண்களின் நிர்வாண உடல்களை வீடியோ காட்சிகளாக்கி சர்வதேச மட்டத்தில் விற்று அரசியல் பிழைப்பு நடாத்தும் பிற்போக்கு அரசியல் தமிழ் தலைமைகளுக்கு வக்காலத்து வாங்கும் இத்தகைய அமைப்புக்கள்தான், தமிழ் மக்களின் விரோதிகள் என்பதை மக்கள் இனம் காண வேண்டும்.

உலகெங்குமுள்ள மக்களை போருக்குள் தள்ளி, அந்த நாடுகளின் இளம் சமுதாயத்தினரின் கையில் துப்பாக்கிகளைக் கொடுத்து, அந்த நாடுகளை சீரழித்து வரும் அமெரிக்கப் பிரதிநிதிக்கு ஆலவட்டம் பிடிக்கும் மனித உரிமைக்கான மக்கள் மன்றம், தீவக மக்கள் அமெரிக்காவை அவமதித்துவிட்டதாக கூக்குரலிடுவது கண்டனத்திற்குரியதாகும்.

பெண்கள் தமது உரிமைகளை நிலை நாட்டுவதற்காக இத்தகைய போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடாத்துவதை வரவேற்கும் எமது அமைப்பு, தீவகப் பெண்கள் குறித்த அமெரிக்கப் பிரதிநிதியின் கூற்றுக்கு எங்களது வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.


செயலாளர்
சிறகுகள்
பெண்கள் சிறுவர்கள் உரிமைக்கான அமைப்பு

கருத்துகள் இல்லை: