சனி, 1 அக்டோபர், 2011

என்னை NLFT இயக்கத்தின் ‘அன்ரன் பாலசிங்கம்’ ஆக்கிய புலிகள்!

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (16)
LTTE torture camp-6காந்தியும் உதயனும் என்னைக் குறுக்கு விசாரணை செய்து கொண்டிருக்கையில், இரவு 7 மணியளவில் ஒரு சிறிய மினிவான் அங்கு வந்து நின்றது. அதைத் தொடர்ந்து அங்கு நின்ற புலிகள் எல்லோரும் சுறுசுறுப்பானார்கள். அதன்பின் காந்தி எழுந்து எங்கோ சென்றுவிட்டான். அவனுடைய கூட்டாளி உதயன் தொடர்ந்து என்னிடம் விசாரணை நடாத்திக் கொண்டு இருந்தான். அவனுடைய விசாரணைகள் பெரும்பாலும் என்.எல்.எப்.ரி (NLFT – தமிழீழ தேசிய விடுதலை முன்னணி) இயக்கத்தைப் பற்றியதாகவே இருந்தன.
எனக்கும் என்.எல்.எப்.ரி இயக்கத்துக்கும் அரசியல் ரீதியாகவோ அல்லது ஸ்தாபன ரீதியாகவோ எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அவனுக்கு திரும்பத்திருப்ப விளக்க முயன்றேன். அவன் எனது விளக்கத்தை ஏற்கும் நிலையில் இல்லை. என்.எல்.எப்.ரி இயக்கத்தின் முன்னோடி அமைப்பான ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ என்ற அமைப்பை எமது இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியே உருவாக்கியிருந்ததால், நாம் தான் என்.எல்.எப்.ரி இயக்கத்தையும் பின்னணியில் இருந்து இயக்குகிறோம் என்பதே புலிகளின் கருத்து என்பதை, அவனது உரையாடலிலிருந்து விளங்கிக் கொள்ள முடிந்தது.
தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 1954ல் நிறைவேற்றிய, தமிழ் மக்கள் பிரச்சினைக்கு அவர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கில் அமையும் பிராந்திய சுயாட்சியே தீர்வு என்ற, மிகச் சரியான தீர்வின் அடிப்படையில் (இன்று வரையும் அதுதான் பிசகற்ற தீர்வு), ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு என்ற கொள்கையுடன் உருவாக்கப்பட்ட ஒர் அமைப்பாகும். ஆனால் என்.எல்.எப்.ரி என்ற அமைப்போ தனது பெயரிலேயே ‘தமிழீழ’ என்ற சொல்லைக் கொண்டு, நாட்டுப் பிரிவினையை வலியுறுத்தும் விதத்தில் இருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளான நாம் ஒருபோதும் நாடு பிரிவதை ஏற்கமாட்டோம். எனவே என்.எல்.எப்.ரி இயக்கத்தை நாம் ஆதரிப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்பதை உதயன் என்பவனுக்கு விளக்க முயன்றேன். என்.எல்.எப்.ரி தோழர்களுடனான எனது உறவு மற்றைய இயக்கங்கள் (புலிகள் உட்பட) பலவற்றுடன் உள்ளது போன்ற நட்பு அடிப்படையிலானது எனக் குறிப்பிட்டேன்.
அத்துடன் என்.எல்.எப்.ரி இயக்கம் மட்டுமின்றி, பின்னர் கருத்து முரண்பாடுகளால் அந்த இயக்கம் பிளவுபட்டு தோழர் விசுவானந்ததேவன் தலைமையில் உருவான பி.எல்.எப்.ரி (PLFT - தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம்) இயக்கமும் கூட தனது பெயரின் முன்னால் ‘தமிழீழ’ என்ற சொல்லையே கொண்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டேன். (என்னைக் கைதுசெய்வதற்கு சில வருடங்களுக்கு முன்னர் தோழர் விசுவானந்த தேவனின் அழைப்பில் பேரில் நான் தமிழகம் சென்று, என்.எல்எப்.ரி இயக்கத்தின் கடந்தகாலத் தவறுகள் சம்பந்தமாக விரிவாகக் கலந்துரையாடி இருந்தேன். பின்னர் அவர் யாழ்ப்பாணம் திரும்பியவுடன் அதன் தொடர்ச்சியாக மேலும் சில நாட்கள் கல்லுவம் கிராமத்திலுள்ள அவரது வீட்டில் கூடி ஆராய்ந்து, எதிர்காலத்தில் எமது கட்சியையும், தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியையும் எவ்வாறு மீண்டும் சரியான முறையில் புனரமைத்து முன்னெடுத்துச் செல்வது என நாம் எடுத்த தீர்மானங்கள் குறித்து நான் இந்த உதயனிடம் எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை)
இதுதவிர, உதயன் என்.எல்.எப்.ரி – பி.எல்.எப்.ரி இயக்கங்களில் அங்கம் வகித்த பல்வேறு நபர்களைப் பற்றியும் என்னிடம் துருவித்துருவிக் கேட்டான். ஆனால், உண்மையில் அந்த இயக்கங்களின் உறுப்பினர்களில் முக்கியமான ஓரிருவரைத் தவிர, அநேகமானோரை எனக்குத் தெரியாது. எங்கள் கட்சி, தேசிய இனப்பிரச்சினை ‘கொதி’ நிலையை அடைந்திருந்த அன்றைய சூழலுக்குப் பொருத்தமான முறையில் செயற்படக் கூடிய அளவுக்குத் திறனுள்ள கட்சி அல்ல என்று கருதியதினாலேயே, விசுவானந்ததேவன் எமது கட்சியை விட்டு ஒதுங்கித் தனியான அமைப்பொன்றை உருவாக்கினார் என்பதை அவனுக்கு விளக்க முயன்றேன்.
அத்துடன் விசுவானந்ததேவன் எம்மீதான நம்பிக்கையையும் இழந்திருந்தார். அத்துடன் அவர்களது இயக்கம் தமிழீழ தேசியத்தை ஒரு தந்திரோபாய அணுகுமுறையாகப் பயன்படுத்தி, வடக்குக் கிழக்குப் பகுதிகளில் விடுதலைப் பிரதேசங்களை நிறுவி, அதைப் பின்தளமாகக் கொண்டு தென்னிலங்கை மக்களின் போராட்டத்துக்கு உதவி, முழு இலங்கையிலும் புதிய ஜனநாயக மக்கள் அரசாங்கம் ஒன்றை நிறுவுவதைக் குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டதால், தமது பாதுகாப்பு, தனித்துவம் என்பன கருதி, பழைய கட்சியினராகிய எமக்கு தமது உறுப்பினர்களை அறிமுகம் செய்வது இல்லை என்பதையும் உதயனுக்கு சுட்டிக் காட்டினேன்.
விசுவானந்ததேவனின் இயக்கத்தினர் இந்தியாவைப் பின்தளமாகக் கொண்டு செயற்பட்டாலும், இந்திய பெரு முதலாளித்துவத்தின் எதேச்சாதிகாரம், தேச விஸ்தரிப்புக் கொள்கைகள் பற்றி தெளிவாக இருந்ததுடன், இந்திய உளவு அமைப்பான றோ உடன் தொடர்பு வைக்கவோ அல்லது இந்திய அரசு மற்றைய இயக்கங்களுக்கு வழங்கிய நேரடியான ஆயுதப் பயிற்சியையோ வேறு உதவிகளையோ பெறவில்லை என்பதையும் சொன்னேன். அத்துடன் ஏனைய இயக்கங்கள் செய்தது போல தமிழ் நாட்டின் திராவிடப் பிழைப்புவாத கட்சிகளுடன் தொடர்பு வைப்பதை விடுத்து, இந்தியாவின் மார்க்சிச – லெனினிச இயக்கங்களுடன் தொடர்பு வைப்பதில் அவர்கள் அதிக அக்கறையுடன் செயற்பட்டதாகவும் குறிப்பிட்டேன்.
அதுமட்டுமின்றி, தோழர் விசுவானந்ததேவன் தனிப்பட்ட முறையில் முயற்சி எடுத்து, இந்தியாவின் வடக்கு கிழக்கிலுள்ள ஏழு மாநிலங்களில் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடும் அமைப்புகளுடன் - குறிப்பாக மணிப்பூர் மக்கள் விடுதலைப் படையுடன் தொடர்புகளை ஏற்படுத்த முயன்றதையும், அதன் எல்லையிலுள்ள பர்மாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொள்வதற்கு முயற்சிகள் எடுத்துள்ளதையும், பாகிஸ்தானின் ஆப்கானிஸ்தான் எல்லை மாகாண நகரான பெசவாருக்கச் சென்று, அன்று ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத் சமூக ஏகாதிபதியத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த ஆப்கான் விடுதலை இயக்கங்கள் சிலவற்றுடன்  தொடர்புகளை ஏற்படுத்தியதையும் நான் அறிந்திருந்தேன். (இவை பற்றி நான் உதயனுக்கு எதுவும் கூறவில்லை)
அதாவது தோழர் விசுவானந்ததேவன் தனது இயக்கத்தின் பெயரில் ‘தமிழீழ’ என்ற சொல்லை தந்திரோபாயமாகச் சேர்ந்திருந்தாரேயோழிய, அவரது நோக்கம் குறுகிய தமிழீழ அரசொன்றை அமைப்பது அல்ல என்பதை நான் நன்கறிவேன். ஆனால் தந்திரோபாயமாகத் தன்னும் ஒரு தவறான கொள்கையைப் பினபற்றுவது என்பது, பின்னர் பல தவறான நிலைமைகளை உருவாக்கும் என்பதை நாம் பலதடவை விசுவானந்ததேவனுக்கு எடுத்துக் கூறினோம். ‘தமிழீழக்கோரிக்கையை தந்திரோபாயமாகப் பயன்படுத்தல்’ என்ற தவறான கொள்கையால். அந்த இயக்கம் பிளவுபட்ட பின்னர் சரியான தத்துவார்த்த வளர்ச்சியின்றி அரைவேக்காடுகளாக அதில் சேர்ந்திருந்த பல உறுப்பினர்கள், தமிழ் தேசியவாதச் சேற்றில் புதைந்து போன என்எல்.எப்.ரி அணியுடன் சேர்ந்து நின்றதுடன், பின்னாளில் அவர்களில் பலர் புலிகளின் விசுவாசிகளாகவும் சீரழிந்து போன நிலைமை ஏற்பட்டதை நாம் இன்றும் கண்கூடாகக் காண்கின்றோம்.
இந்த விடயங்கள் முழுவதையும் நான் உதயன் என்பவனுக்கு விளக்கிச் சொல்லாவிடினும், முக்கியமான சிலவற்றை எடுத்துச் சொன்னேன். ஆனால் அவனுக்கு இவைபற்றி அதிகம் அக்கறை இருக்கவில்லை. அவனுக்கு அரசியல்ரீதியான விடயங்களைவிட, ஏதாவது துப்பறியும் நாவலில் வருவது போன்ற தகவல்களே தேவைப்பட்டன. எனக்கும் என்.எல்.எப்.ரி இயக்கத்துக்குமான அந்நியமான நிலையையும் அவன் ஒருபோதும ஏற்கவுமில்லை, நம்பவுமில்லை. புலிகள் ஒரு விடயத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், பின்னர் அதை ருசுப்படுத்தவே இறுதிவரை விடாப்பிடியாக இருப்பர் என்பதை பின்னர் போகப் போகத் தெரிந்து கொண்டேன்.
புலிகளைப் பொறுத்தவரை என்.எல்.எப்.ரி – பி.எல்.எப்.ரி இயக்கங்களைப் பற்றி என்னிடமிருந்துதான் அறிய வேண்டுமென்றில்லை. ஏனெனில் அந்த இயக்கங்களைச் சேர்ந்த முக்கியமான உறுப்பினர்களான அன்ரன், ரமணி, ஞானம் உட்பட பலரை அவர்கள் கைதுசெய்து தமது சித்திரவதை முகாம்களில் வைத்திருந்தனர். (அவர்கள் அனைவரும் பின்னர் புலிகளால் கொலை செய்யப்பட்டு விட்டனர்)
நிச்சயம் அவர்களிடமிருந்து பல விடயங்களைக் கறந்திருப்பார்கள். ஆனால் அவர்களில் ஒருவனல்லாத என்னைக் கைதுசெய்ததும், குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதும் வேறு நோக்கத்துக்காக. ஏனெனில் சில இயக்க உறுப்பினர்களை அழிப்பதால் மட்டும் அந்த இயக்கம் அழிந்துவிடாது. இது வரலாறு சொல்லும் பாடம். எனவே அந்த இயக்கங்களை மீண்டும் மீணடும் உருவாக்கும் சக்திகளை அழிப்பதன் மூலமே, வருங்காலத்தில் அது தோன்றிவிடாதபடி அழிக்க முடியும். அதற்காகவே அவர்கள் என்னைப் போன்றவர்களையும் கைதுசெய்கிறாhகள்.
அந்த வகையில் நான் என்.எல்.எப்.ரி இயக்கத்தின் முக்கியமான ஒரு வழிகாட்டி என்ற புலிகளது கருத்து, எவ்வளவு தூரம் பாரதூரமாக இருந்திருக்கிறது என்பதை, பின்னைய நாட்களில் அந்த முகாமுக்கு வரும் முக்கியமான புலி உறுப்பினர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தும் போது, “இவாதான் என்.எல்.எப்.ரி இயக்கத்தின் அன்ரன் பாலசிங்கம்” என்று அவர்கள் வர்ணித்ததிலிருந்து தெரிந்து கொண்டேன்.
உதயனுடன் நான் கதைத்துக்; கொண்டு இருக்கையில், சிறைக்குள்ளிருந்த பல கைதிகள் கண்கள் கறுப்புத் துணிகளால் கட்டப்பட்டு, ஒருவர் தோளை ஒருவர் பற்றிப் பிடித்தபடி ஒரு புகையிரதத்தின் பெட்டிகள் அணி வகுப்பப் போல அழைத்து வரப்பட்டு, அந்த மினிவானின் பின்பக்கத்தில் ஏற்றப்பட்டனர். அவர்களில் தில்லையும் இருப்பதை அவதானித்தேன். பல்கலைக்கழக மாணவனான தில்லையின் நண்பன் மனோகரனும் அதில் இருந்ததாகப் பின்னர் அறிந்து கொண்டேன்.
சிறிது நேரத்தில் திடீரெனக் காணாமல் போன காந்தியும் அங்கு வந்து சேர்ந்தான். காந்தியின் புலி வேட்டை நாய்கள் அந்த வாகனத்தைச் சுற்றிக் கைகளில் துப்பாக்கிச் சனியன்களுடன் காவல் நின்றன. பின்னர் ஒரு கறுப்புத் துணி கொண்டுவரப்பட்டு எனது கண்களும் கட்டப்பட்டு, அந்த வாகனத்தின் முன்பக்கத்தில் காந்தி, உதயன் ஆகியோருடன் ஏற்றப்பட்டேன். வாகனம் எங்கள் எல்லோரையும் ஏற்றிக்கொண்டு எங்கோ ஓரிடத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது
தொடரும்

கருத்துகள் இல்லை: