வியாழன், 29 செப்டம்பர், 2011

215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கு

தர்மபுரி: வாச்சாத்தி மலை கிராமத்தில் போலீசார், வருவாய்த்துறையினர், வனத்துறையினரால் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் நான்கு இந்திய வனப்பணி அதிகாரிகள் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்களில் உயிருடன் உள்ள 215 பேருமே குற்றவாளிகள் என்று தர்மபுரி கோர்ட் இன்று பரபரப்புத் தீர்ப்பை வழங்கியது.
இவர்களுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தர்மபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி குமரகுரு தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு உரிய நேரத்தில் நடத்தி முடிக்கப்படாமல், பெரும் இழுத்தடிப்புக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் 54 பேர் விசாரணையின்போதே இறந்து விட்டனர். உயிருடன் உள்ள 215 பேர் மீதான தீர்ப்பை இன்று நீதிபதி குமரகுரு அறிவித்தார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பை அறிவதற்காக வாச்சாத்தி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்ட கிராமத்தினர் நூற்றுக்கணக்கில் கோர்ட் வளாகத்தில் திரண்டிருந்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை முதல் நீதிபதி குமரகுரு தீர்ப்பை வாசித்து வந்தார். பிற்கல் ஒன்றரை மணியளவில் அவர் தீர்ப்பை வாசித்து முடித்தார். அதாவது எத்தனை பேர் குற்றவாளிகள் என்பதை சொல்லி முடித்தார்.

யார் யார் குற்றவாளி?

வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட, உயிருடன் உள்ள 215 பேரில் வனத்துறையினர்தான் அதிகம். தீர்ப்பில் ஐஎப்எஸ் எனப்படும் இந்திய வனப் பணி அதிகாரிகள் பாலாஜி, ஹரிகிருஷ்ணன், முத்தையன், நாதன் ஆகியோர் உள்ளிட்ட 126 வனத்துறையினர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு ஐஎப்எஸ் அதிகாரியான சிங்காரவேலு ஏற்கனவே இறந்து விட்டார்.

மேலும் 5 வனத்துறை ரேஞ்சர்களும் குற்றவாளிகள் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

காவல்துறையிலிருந்து 84 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் இன்ஸ்பெக்டர்கள், 6 பேர் சப் இன்ஸ்பெக்டர்கள். மற்றவர்கள் காவலர்கள்.

வருவாய்த்துறையிலிருந்து தாசில்தார் ஆவுடையப்பன், வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம், கிராம நிர்வாக அதிகாரிகள் பொன்னுச்சாமி, ராஜு உள்ளிட்ட ஐந்து பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்துள்ளார். அதன்படி அருணாச்சலம், ஆறுமுகம், ராஜகோபால், பெரியநாயகம், ராஜமாணிக்கம், பச்சியப்பன், வேடியப்பன், சிதம்பரம், பழனி, பெருமாள், காளியப்பன், ஜானகிராமன், ரத்னவேல், அழகிரி, மாதையான் உள்ளிட்ட 17 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

54 பேர் ஏற்கனவே இறந்து விட்டனர்

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 269 பேரில் 29 வனத்துறையினர், 24 போலீசார், ஒரு வருவாய்த்துறை ஊழியர் உள்பட மொத்தம் 54 பேர் இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: