வெள்ளி, 30 செப்டம்பர், 2011

ராசாவுக்கு ஒரு நியாயம், சிதம்பரத்திற்கு ஒரு நியாயமா?: பாஜக

ஆதாரங்கள் இருந்தும், சிதம்பரத்தை வெளியே விட்டுவைப்பதா? பாஜக


டெல்லி: 2ஜி விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருக்கின்றது. அதனால் அவரை திஹார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று பாஜக தெரிவித்துள்ளது.
பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் துவங்கியது. அதில் பாஜக தலைவர் நிதின் கட்காரி கூறியதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்ததாவது,

2ஜி விவகாரத்தில் ப. சிதம்பரத்திற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருந்தும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் மூலம் காங்கிரஸ் ஆளுக்கொரு விதமாக நடந்து கொள்வது தெரிய வந்துள்ளது.

2ஜி ஊழல் விவகாரத்தில் முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாவுக்கு எதிரான ஆதாரங்கள் சிதம்பரத்திற்கும் பொருந்தும். அவ்வாறு இருந்தும் சிதம்பரம் வெளியே இருக்கையில் ஆ. ராசா மட்டும் ஏன் சிறையில் இருக்க வேண்டும்? சிதம்பரத்தையும் திஹாருக்கு அனுப்ப வேண்டும்.

சிபிஐ அதிகாரிகளை சிதம்பரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவிடாமல் மத்திய அரசு தடுத்து வருகிறது என்றார்.

2ஜி விவகாரத்தில் பிரதமரின் பங்கு பற்றி கேட்டதற்கு அவர், ஸ்பெக்ட்ரம் விலையைப் பற்றி ஏன் அமைச்சர்கள் குழுவுக்கு அறிவிக்கப்படாமல் இருந்தது என்று பிரதமர் பதில் அளிக்க வேண்டும். ராசா உள்ளிட்ட பல பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதாரங்கள் கிடைத்தால் பிரதமரையும் விசாரிக்க வேண்டி வரும் என்றார்.

கருத்துகள் இல்லை: