சனி, 1 அக்டோபர், 2011

வங்காரி மாத்தாய் : ஒரு தேன்சிட்டின் மௌனம்

பெரிய பெரிய விலங்குகளும் சின்ன சின்ன விலங்குகளும் உள்ள ரொம்ப பெரிய காடு அது. விதம் விதமான பறவைகள். பற்பல பூச்சிகள். உயர்ந்த மரங்கள். எல்லாவிதமான உயிர்களுக்கும் அந்த காடுதான் வீடு. ஆனால் ஒருநாள் அங்கே எவரோ தீ மூட்டிவிட்டனர். காடு எரிய ஆரம்பித்தது. காட்டில் வாழும் விலங்குகள் பதறின. அங்கும் இங்கும் ஓடின. மரங்களோ ஓட முடியாமல் இறுதி வரை எரிய தங்களை தயார் படுத்திக் கொண்டன. ஓடிய விலங்குகள் எல்லாம் ஒரு தடாகத்தின் அருகே சிறிய குன்றொன்றில் நின்று கொண்டு தம் நல்ல இல்லம் எரிந்து சாம்பலாவதைச் செயலிழந்து பார்த்துக் கொண்டிருந்தன.
அப்போது அங்கு ஒரு விசித்திரம் நடந்தது. ஒரு சின்னஞ்சிறிய தேன் சிட்டு எரியும் காட்டுக்குள் சென்றது. பின் திரும்பியது. தடாகத்துக்குள் மூழ்கியது. பின் மீண்டும் காட்டுக்குள் சென்றது. இப்படி பல முறை.
யானைதான் கேட்டது முதலில். ‘என்ன செய்கிறாய் நீ?’
‘காட்டு நெருப்பை அணைக்கப் பார்க்கிறேன்’ என்று வந்தது பதில். ‘என் வாய் நிறைய தடாக நீரை நிரப்பி காட்டுத் தீயை அணைக்கப் பார்க்கிறேன். நம் வீடல்லவா பற்றி எரிகிறது. பார்த்துக் கொண்டு சும்மா நிற்க முடியுமா?’

யானை சிரித்தது. அதன் நீண்ட தும்பிக்கை முழுவதிலும் அலை அலையாக சிரிப்பு நழுவி நழுவி ஓடியது.
‘என்னா பெரிய வாய்…பாருங்கடா டேய் இன்னுமா தீ அணையலை ஹா ஹா ஹா’.
சிரிப்பு நோயாக பரவியது. எல்லா விலங்குகளும் அவற்றின் பெரிய பெரிய வாய்களை திறந்து சிரிக்க ஆரம்பித்தன. அவற்றைப் பார்த்து காட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த அந்த தேன் சிட்டு சொன்னது. ‘என் வாய் சிறியதுதான். ஆனால் என் வாய் முழுக்க நீரை நிரப்பிக் கொள்கிறேன். என்னால் முடிந்த ஆகச்சிறந்த முயற்சியை செய்கிறேன்.’
அவ்வளவுதான். அதை மட்டும்தான் சொன்னது அந்த சின்னஞ்சிறிய தேன் சிட்டு. ‘ஆனால் நீங்கள்?’ என்று அது கேட்கவில்லை.
அவர் பெயர் வங்காரி மாத்தாய். கென்யாவைச் சேர்ந்த சுற்றுப்புறச் சூழல் போராளி. கென்யாவின் முதல் டாக்டர் பட்டம் பெற்ற பெண். விலங்கியல் உடல் கூறு அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். கென்யாவின் கிக்கியு சமுதாயத்தைச் சார்ந்த இவர் மிஷினரி கல்வி நிலையங்களில் வளர்ந்தவர். அவர்களின் அன்பும் ஆதரவும் அவரது பெயரை மேரி ஜோசப்பைன்  என மாற்ற அனுமதித்தன. அவர்கள் அளித்த விவிலியம் அவரது வாழ்க்கையின் ஒரு அங்கமாயிற்று. அமெரிக்காவில் அவர் பட்டம் பெறச் சென்றார். ஆனால் திரும்ப வரும் போது அவர் தனது பண்பாட்டு இயற்பெயரான வங்காரி என்பதைக் கொண்டிருந்தார். ஆப்பிரிக்காவின் சுய பண்பாட்டில் ஒரு பெருமிதம் அவருக்கு ஏற்பட்டிருந்தது.
அவரது ஆராய்ச்சி வாழ்க்கையில் பெண் என்பதாலும் தன் வேர் அடையாளங்களை துறக்காமல் வாழ துணிந்தவர் என்பதாலும் பல கஷ்டங்களை சந்திக்க வேண்டி இருந்தது. 1977ல் கென்யாவின் தேசியப் பெண்கள் அமைப்பில் அவர் பொறுப்பேற்ற போது ஒரு விஷயத்தை அவதானித்தார். பெண்களின் நல்வாழ்வுக்கு கிராமம் பசுமை அடைய வேண்டும். பசுமையான கிராமம் பெண்களின் பெரும் பேறு. கென்யாவில் ஒரு காலத்தில் 30 விழுக்காடு காடுகள் இருந்தன. பசுமை போர்வை இருந்தது. இன்றைக்கு? இருந்த பசுமைப் போர்வையில் 3 சதவிகிதம் கூட இல்லை. 10 சதவிதமாவது இருக்க வேண்டும். அப்போதுதான் நாடு நாடாக இருக்கும் என்கிறார்கள் சர்வதேச சுற்றுப்புற ஆர்வலர்கள். என்ன செய்யலாம்?
ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு மரத்தை நட வேண்டும். அதை பாதுகாத்து வளர்க்க வேண்டும். அதற்கு ஓர் இயக்கமாக மக்கள் களமிறங்க வேண்டும். இப்படித்தான் பிறந்தது பசுமை வெளிகளை உருவாக்கும் இயக்கம். Green Belt Movement.  ஒரு சமுதாய இயக்கமாக அது வளர வளர சூழலியல் என்பது எப்படி அதிகார பகிர்வுடன் இணைந்தது என்பதை வங்காரி கண்டார். அரசியல் சீர்திருத்தங்கள் அவசியம். மக்களுடன் அதிகார பகிர்வு அவசியம்.  போராட்டங்களும் அவசியம். பசுமைக்கான போராட்டம், மக்கள் உரிமைகளுக்கான போராட்டமாக விரிந்தது. வங்காரியின் வார்த்தைகளில் :
பசுமைக்கான விதைகளை விதைக்க ஆரம்பித்தோம். விரைவில் வேறு சில விதைகளையும் நாங்கள் விதைத்தாக வேண்டும் என்பது புரிந்தது. மக்கள் சமுதாயங்களுக்கு சுய அறிதலையும் சுய சார்பையும் ஏற்படுத்த வேண்டிய விதைகளை நாங்கள் விதைக்க வேண்டும். தங்களுடைய சொந்த குரலில் அவர்கள் தங்களுக்கு உரிமையான அதிகாரங்களை பெற வேண்டும்.
வங்காரி மாத்தாயின் போராட்டத்தால் ஏற்பட்ட சமூக அரசியல் சீர்திருத்தங்களை கென்யாவின் இரண்டாம் விடுதலை என்று குறிப்பிடுகிறார் இன்றைய கென்ய அதிபர். வங்காரி மாத்தாயின் போராட்டம் அவருக்குள் உருவாக்கிய மதிப்பீடு மாற்றங்கள் முக்கியமானவை. அதையும் அவரது வார்த்தைகளிலேயே கேட்கலாம்: ‘என்னுடைய அனுபவங்கள் மூலமாகவும் அவதானிப்புகள் வழியாகவும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். எந்த அளவு பூமியை நாம் அழிவுக்கு ஆட்படுத்துகிறோமோ அந்த அளவு அழிவு நமக்கும் ஏற்படுகிறது. களங்கமான நீர், மாசுபடுத்தப்பட்ட காற்று, கடும் உலோக மாசு ஏறிய உணவு, மாசடைந்த மண்… என நம் சூழல் அமையும் போது நம்மை நாமே அழிவுக்கு ஆட்படுத்துகிறோம். நம்மில் உடல் ரீதியாகவும் மனது ரீதியாகவும் நம் ஆன்மாவிலும் காயங்களை உண்டாக்குகிறோம். மாசுபடுவது சூழல் மட்டுமல்ல கீழ்மை அடைவது நாமும்தான். ‘
இதற்கு நேர் மாறானதும் உண்மைதான். எந்த அளவுக்கு பூமி குணமடைய நாம் உதவுகிறோமோ அந்த அளவுக்கு நாம் நமக்கு நாமே உதவுகிறோம். பூமி அதன் வளமிக்க மேல் மண்ணையும், உயிரி பன்மையையும் இழந்து வருந்தும் போது அதை குணப்படுத்த நாம் முனைகிறோமே – அதற்காக மரங்களை நடுகிறோமே அத்தகைய தருணங்களில் – அப்போது இந்த பூமி நம் அகங்களை குணப்படுத்துகிறாள். அந்த அளவுக்கு நாம் ஜீவித்திருப்பதை உறுதி செய்கிறாள்.
சுற்றுப்புற சூழலியலாளர்கள் சுனிதா நாரயண் (Down to Earth) மற்றும் வந்தனா சிவா ஆகியோருடன் வங்காரி தொடர்பிலிருந்தார். உலகம் முழுவதற்குமான பசுமை சார்ந்த மானுட மேம்பாட்டுக்கான தாயின் குரலாக அவரது குரல் ஒலித்தது. காட்டுத் தீயை அணைக்க முயலும் தேன் சிட்டின் குரல் அவருடையது.
கான்சரை எதிர்த்து போராடிய அவர் கடந்த ஞாயிறு அன்று இயற்கை அடைந்தார். அவரது கிக்கியு சமுதாயத்தின் ஆதார ஆன்மிக நம்பிக்கை புனித மரங்கள் விண்ணையும் மண்ணையும் இணைப்பதாக.
0
அரவிந்தன் நீலகண்டன்
www.tamilpaper.com

கருத்துகள் இல்லை: