வியாழன், 29 செப்டம்பர், 2011

Broker சுப்பிரமணிய சாமிக்கு கிடைக்கும் உதவி

டில்லி அரசியலை எப்போதும் பரபரப்பாகவே வைத்துக் கொண்டிருப்பதில் பெரும் பங்கு சுப்பிரமணியசாமிக்கு தான். எந்த நேரத்தில் எந்த குண்டைத் தூக்கிப் போடுவார் சாமி என்று சொல்ல முடியாது.தற்போது, இவர் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார். "எப்படியாவது சிதம்பரத்தை, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்க வைத்து விடுவேன்' என்று அடித்துச் சொல்கிறார். சமீபத்தில், இவர் சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த நிதியமைச்சக குறிப்பு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரத்தையடுத்து, இன்னொரு அரசியல் புள்ளியை குறி வைத்துள்ளார். அது யார் என்பதை சொல்ல மறுக்கிறார் சாமி.சாமிக்கு அரசு ஆவணங்கள் எப்படி கிடைக்கின்றன என்று மத்திய அமைச்சர்களும், காங்கிரஸ் தலைவர்களும் ஆச்சர்யப்படுகின்றனர். ஒரு சில ஆவணங்களை சாமி தேடிப் போகிறார்; மற்றவை இவரைத் தேடி வருகின்றன.
ஆமாம். ஊழல் விவகாரங்களைக் கண்டு வெறுத்துப் போயுள்ள மத்திய அரசு அதிகாரிகள் சாமிக்கு உதவுகின்றனர். எப்படி? முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் தங்களுக்கு நெருங்கிய பத்திரிகை நண்பர்களிடம் கொடுத்து, "இதை சாமியிடம் கொடுத்து விடுங்கள்' என்கின்றனர்.

சிதம்பரம் - பிரணாப் பிரச்னை

தற்போது, டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுவது நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கும் இடையே நடக்கும் சண்டை தான். இந்த பனிப்போர் உள்ளுக்குள்ளாகவே நடந்து கொண்டிருந்தாலும் வெளியே வரக்காரணம், நம்ம சுப்பிரமணிய சாமி தான். திடீரென சுப்ரீம் கோர்ட்டில், ஒரு ஆவணத்தைக் கொடுத்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டார் சாமி.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என, பா.ஜ., கோஷமிட்டிக் கொண்டிருக்கிறது. காங்கிரசிலோ அதிர்ச்சி. சிதம்பரத்திற்கு எதிரான கோஷ்டியினர் மகிழ்ச்சியில் உள்ளனர். தி.மு.க.,வினருக்கு பெரும் மகிழ்ச்சி. ராஜாவையும், கனிமொழியையும் சிறைக்குள் அடைத்த இந்த காங்கிரசுக்கு, சாமி சரியான பாடம் புகட்டுகிறார் என்று கிசுகிசுக்கின்றனர்.எதற்கு பிரணாப் இப்படி ஒரு கடிதத்தை எழுத வேண்டும்; அதற்கு என்ன அவசியம்? சில மாதங்களுக்கு முன், பிரணாப் அலுவலகத்தில் மேஜைக்கு அடியில் பபுள் கம் ஒட்டி வைக்கப்பட்டிருந்தது. தன்னை வேவு பார்க்க உளவுத் துறை செயல்படுகிறது என்று சிதம்பரம் அமைச்சகத்தின் மீது, பிரணாப் குற்றம் சாட்டியிருந்தார். ஒரு வேளை அதனுடைய பழி வாங்கலோ? என்றெல்லாம் டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன. பிரதமரும், பிரணாபும், சிதம்பரத்திடம் இது குறித்து போனில் பேசியுள்ளனர். எது எப்படியோ... பிரச்னைக்கு மேல் பிரச்னை மத்திய அரசை தாக்கிக் கொண்டிருக்கிறது.

பாக்., பயங்கரவாதிக்கு ஆஜராகும் தமிழர்

மும்பை ரயில் நிலையம், தாஜ் ஓட்டல் உட்பட பல இடங்களில், 2008ல் பாக்., பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் பலர் பலியாகினர். அதில் உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப், தற்போது மும்பை சிறையில் உள்ளான். அவனுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் எழுதியுள்ளான் கசாப். அவனுக்கு ஆதரவாக வாதாட எந்த வழக்கறிஞரும் முன்வரவில்லை. எனவே, சுப்ரீம் கோர்ட்டே, ஒரு சீனியர் வழக்கறிஞரை நியமித்தது.அவர் ராஜு ராமச்சந்திரன். நம்ம ஊர்க்காரர்; தஞ்சாவூரைச் சார்ந்தவர். டில்லியிலேயே செட்டில் ஆகிவிட்டார். காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் நட்வர் சிங் தொடர்பான ஈராக் எண்ணெய் ஊழல், குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிரான வழக்கு என, பல முக்கிய வழக்குகளில் ஆஜரானவர் ராமச்சந்திரன்.இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். கசாபை எதிர்த்து, மகாராஷ்டிர அரசுக்காக ஆஜராகும் வழக்கறிஞரும் ஒரு தமிழர் தான். அவர் கோபால் சுப்ரமணியம்; மன்னார்குடியைச் சார்ந்தவர். மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி, கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தவர். கசாபை எதிர்த்து வாதாட இவரை மகாராஷ்டிர அரசு நியமித்துள்ளது.கோபால், ராமச்சந்திரன் இருவருமே சீனியர் வழக்கறிஞர்கள், வழக்கு விசாரணைக்கு வரும்போது சரியான போட்டி இருக்கும்.

டில்லியில் தமிழில் கையெழுத்திடும் அதிகாரி

பொதுவாக கையெழுத்து போடுவது என்றாலே நாம் அனைவருமே, ஆங்கிலத்தில் தான் கையெழுத்திடுவோம். ஒரு சிலர் தமிழிலும் கையெழுத்திடுகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் உள்ளவர்களும், தமிழக அரசு பணியில் உள்ளவர்களும், தமிழில் கையெழுத்திடலாம். ஆனால், டில்லியில் மத்திய அரசு பணியில் உள்ள ஒருவர், தமிழில் கையெழுத்திடுவது ஆச்சர்யமான விஷயம்.மத்திய அரசு தொடர்பான கடிதம், மற்ற குறிப்புகளில், அதிகபட்சம் கையெழுத்து இந்தியில் தான் இருக்கும். ஆனால், மத்திய பணியாளர் துறையில் பணிபுரியும் சீனுவாச ராகவன், தமிழில் தான் கையெழுத்திடுகிறார். அரசு வெளியிடும் அறிக்கை மற்றும் ஆர்டர்கள் அனைத்திலுமே இவர் கையெழுத்தை தமிழில் பார்க்கலாம்."தமிழ்ப் பற்று அதிகம். இங்குள்ளவர்கள் அவர்களுடைய தாய் மொழி இந்தியில் கையெழுத்திடும் போது, நான் என் தாய் மொழியான தமிழில் கையெழுத்திடக் கூடாதா?' என்கிறார் சீனுவாச ராகவன். இவர் தமிழில் கையெழுத்திடும் சில பைல்கள் பிரதமருக்கும் செல்கிறதாம்.

கருத்துகள் இல்லை: