வெள்ளி, 30 செப்டம்பர், 2011

கொழும்பு - பரு. பஸ்சில் பயணித்த இருவருக்கு நஞ்சு கலந்த பால் கொடுத்து

கொழும்பு - பரு. பஸ்சில் பயணித்த இருவருக்கு நஞ்சு கலந்த பால் கொடுத்து பணம் நகை திருடியவர் நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைப்பு


கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற பஸ்ஸில் பயணித்த இருவருக்கு, நஞ்சு கலந்த பால் அருந்தக் கொடுத்து மயக்கி, அவர்களிடம் இருந்த 7,500 ரூபா பணம், கைத் தொலைபேசி, சங்கிலி என்பவற்றை அபகரித்துக் கொண்டு தப்ப முயன்ற காலியைச் சேர்ந்த ஒருவர் கையும் மெய்யுமாகப் பிடிபட்டு நீர்கொழும்புப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.மயக்கமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த இருவரும் உனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவ்விருவரும் தேறி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்றைச் சேர்ந்த உறவினர்களான முதியவர்கள் இருவரே இவ்வாறு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:

பிரஸ்தாப இருவரும் களுத்துறையில் உள்ள தமது உறவினர் ஒருவரைப் பார்ப்பதற்காக கடந்த திங்கட்கிழமை இரவு பருத்தித்துறை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸில் புறப்பட்டனர். மறுநாள் சந்திப்பை முடித்துக் கொண்டு அன்றிரவே அதே பஸ்ஸில் யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டனர்.

இந்நிலையில் புறக்கோட்டை பஸ் நிலையத்தில் அவர்கள் பஸ்ஸுக்காக நின்றவேளை அவர்களுடன் காலியைச் சேர்ந்த ஒருவர் நெருங்கிப் பழகினார். தான் வியாபார நோக்கம் கருதி யாழ்ப்பாணம் வந்து போவதாக அவர்களிடம் அவர் கூறியுள்ளார்.

இரவு 9 மணியளவில் பஸ் புறப்பட்ட போது மூவரும் ஒரே பகுதி ஆசனத்தில் அமர்ந்து கொண்டனர். பஸ் புறப்பட முன்னர் பிரஸ்தாப நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவருக்கும் பால் பக்கற்றுக்கள் இரண்டைக் கொடுத்துள்ளார். பஸ் புறப்பட்டதும் இருவரும் பால் பக்கற்றுக்களை அருந்தியுள்ளனர். இதனை அரைவாசி அருந்தியதும் இருவரும் மயக்க மடைந்து விட்டனர்.

பஸ் நீர்கொழும்பை அண்மித்ததும் அவ்விருவரினது 7,500 ரூபா பணம், கைத் தொலைபேசி, சங்கிலி என்பவற்றை திருடிய இந்த நபர் பஸ்ஸில் இருந்து இறங்க முற்பட்டார்.

ஏற்கனவே அவர் பருத்தித்துறைக்கென ரிக்கெற் எடுத்திருந்தார். இவரது நடவடிக்கையை பின் இருக்கையில் இருந்து அவதானித்துக் கொண்டிருந்த பயணிகள் இதுபற்றி பஸ் சாரதியிடம் தெரிவித்தனர்.

அவர்களும் சந்தேகத்தில் விசாரித்த போது அவரது திருட்டு வெளிப்பட்டது.

பஸ் உடனடியாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் போய் நின்றது. பிரஸ்தாப நபரை பஸ் சாரதி பொலிஸாரிடம் ஒப்படைத்தார் என பருத்தித்துறை பஸ் டிப்போவினர் தெரிவித்தனர்.

திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டன.

மயங்கிய இருவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பரிசோதனையின் போது பாலில் அதிகளவு நச்சுப் பொருள் கலந்திருந்தமை கண்டறியப்பட்டது. அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவ்விருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: