சனி, 7 மே, 2011

இந்நாள் உலகத் தமிழர்களின் பொன் நாள்: முதல்வர் கருணாநிதி

சென்னை: "ஜனாதிபதி மாளிகையில் தமிழறிஞர்கள் முதல்முறையாகச் சென்று விருதுகள் பெறும் இந்நாள், உலகத் தமிழர் அனைவருக்கும் பொன் நாள்' என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் சார்பில், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கிடும் செம்மொழி விருதுகளைப் பெறுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழறிஞர்கள், டில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சமஸ்கிருதம், பாலி, ப்ராக்ருதம், அராபிக், பாரசீகம் ஆகிய மொழிகளில் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிஞர்கள் மட்டுமே ஜனாதிபதி மாளிகைக்கு அழைக்கப்பட்டு ஜனாதிபதியால் கவுரவிக்கப்பட்டு வந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, முதல் முறையாக இன்று (நேற்று) காலை 11.30 மணிக்கு, ஜனாதிபதி மாளிகையில் நமது தமிழறிஞர்கள் செவிகளில் இன்பத்தேனாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த 2005, 2006ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது, 100 வயதைக் கடந்தவரும், 65 நூல்களை எழுதியவரும், பல்வேறு நிறுவனங்களின் பரிசுகளையும், விருதுகளையும் பெற்றவருமான பேராசிரியர் அடிகளாசிரியருக்கு வழங்கப்படுகிறது. விருது பெறுவதற்காக சென்னையிலிருந்து டில்லிக்கு ஏர்-இந்தியா விமானத்தில் சென்றிருக்கிறார். அவரது வாழ்நாளிலேயே இதுதான் முதல் விமானப் பயணம். கடந்த 2006, 2007ம் ஆண்டுக்கான குறள்பீடம் விருது, அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரும், கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பல்லாண்டு காலம் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவருமான பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட்க்கு வழங்கப்படுகிறது. உடல்நிலை காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லை.

கடந்த 2006, 2007ம் ஆண்டுக்கான இளம் அறிஞர் விருதுகள், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், கலைமகன், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்க ஆண்டவர், புதுச்சேரியைச் சேர்ந்த பழனிவேலு ஆகியோருக்கும், 2007, 2008ம் ஆண்டுக்கான இளம் அறிஞர் விருதுகள், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணவழகன், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரன், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சைமன் ஜான் ஆகியோருக்கும் ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்படுகின்றன. ஜனாதிபதி மாளிகையில் தமிழறிஞர்கள் முதல்முறையாகச் சென்று விருதுகள் பெறும் நிகழ்ச்சியை எண்ணி, குவலயத் தமிழர்கள் அனைவருமே வாழ்த்துகின்றனர். நீண்ட நாள் கனவு நிறைவேறுகிறது. இந்நாள் உனக்கும் எனக்கும் உலகத் தமிழர் அனைவருக்கும் பொன் நாள். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: