வெள்ளி, 6 மே, 2011

வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கைத் தமிழர்கள் யாழ்ப்பாணம் செல்ல புதிய நடைமுறை

கொழும்பு, மே.6:  வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கைத் தமிழர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் செய்வதற்குப் பாஸ் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.அதன்படி வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் புலம்பெயர் தமிழர்கள் தாம் வாழும் நாட்டின் பாஸ்போர்ட்டுடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு செல்வதானால் பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியை அல்லது வதிவிட விசாவை ஓமந்தை ராணுவ சோதனைச் சாவடியில் காண்பிக்க வேண்டும்.எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீரென அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறை காரணமாக வெளிநாடுகளில் இருந்து தமது உறவினர்களைப் பார்க்க யாழ்ப்பாணம் செல்வோர் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.கொழும்பிலுள்ள செய்தியாளர் ஒருவர் வெளிநாட்டில் வசிக்கும் தமது உறவினர்களுடன் யாழ்ப்பாணம் சென்றபோது, ஓமந்தை ராணுவச் சோதனைச் சாவடியில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இல்லாத காரணத்தால் மீண்டும் கொழும்பு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டதாக இலங்கை இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: