திங்கள், 2 மே, 2011

புலிகளை தோற்கடித்த என்மீது போர்க் குற்றமா'? மேதின ஊர்வலத்தில் மஹிந்த கேள்வி

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தமை எவ்வாறு போர்க்குற்றமாகும் என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். தன்னை மின்சார நாற்காலிக்கு அனுப்ப சிலர் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தலைநகர் கொழும்பில் மாநகரசபை மைதானத்தில் நடைபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு அரசாங்கத்தின் மேதின நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். 

தற்கொலை செய்துகொள்ள தயாராக இருந்த ஒரு சந்ததிக்கு வாழ வழி ஏற்படுத்திக்கொடுத்தமை மனித உரிமை மீறலாகுமா என்றும் மகிந்த ராஜபக்ஷ மேதின உரையில் கேள்வியெழுப்பினார். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அறிக்கை தயாரிப்பவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி கூறினார்.

நாட்டில் மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாக பொய்க்குற்றச்சாட்டு கொண்டுவருவதன் மூலம் நாட்டு மக்கள் மத்தியில் மீண்டும் குழப்பம் ஏற்படுத்த முனைய வேண்டாம் என்றும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.  வடக்கு கிழக்கில் மட்டுமன்றி நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளை இதன் மூலம் சீர்குலைக்க வேண்டாம் எனவும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, தனியார் துறையினர் மற்றும் வெளிநாடுகளில் தொழில் புரிவோருக்காக விசேட ஓய்வூதிய திட்டமொன்றைக் கொண்டுவரும் அரசாங்கத்தின் முயற்சியை எந்தத் தடைகள் வந்தாலும் நிறைவேற்றியேத் தீருவேன் என்றும் ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது மே தினச் செய்தியில் சூளுரைத்தார்.

கருத்துகள் இல்லை: