வியாழன், 5 மே, 2011

வலிகாமம், வடமராட்சி: உயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதி

யாழ். மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதிகளில் அடுத்து வரும் ஒரு மாத காலத்துக்குள் சுமார் 2,700 குடும்பங்களைச் சேர்ந்த 10,000 பேர் மீளக் குடியமர்த்தப்படவுள்ளதாக யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். இதற்கான அனுமதியை யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த அத்துருசிங்க வழங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த மீள்குடியேற்ற நடவடிக்கையின் கீழ் வலிகாமத்தில் உள்ள தெல்லிப்பழை, மாவிட்டபுரம் வீமன்காமம், கொல்லன்கழப்பு, தந்தை செல்வாபுரம் மற்றும் விளான் உள்ளிட்ட பிரதேசங்களிலும் வடமராட்சியில் மருதங்கேணியிலும் இவ்வாறு மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் குறிப்பிட்டார்.இது மட்டுமின்றி, தென்மராட்சியில் இராமாவில் மற்றும் வடமராட்சி கிழக்கு, குடத்தனை ஆகிய இடங்களில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்கள் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, முள்ளியான் போக்கறுப்பு உள்ளிட்ட இடங்களில் மீள்குடியேற்றப்ப டவுள்ளதாகவும் யாழ். அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டார். வடக்கில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் துரித மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் கீழ் இந்த மீள்குடியேற்றம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அரச அதிபர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை: