மின்னம்பலம் - vanangamudi : நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், அந்த கட்சியில் இருந்து விலகுவது உறுதியாகிவிட்டது.
அடுத்து அவர் எந்த கட்சிக்கு செல்லப் போகிறார் என்ற விவாதங்கள் அரசியல் வட்டாரங்களில் நடந்து வருகின்றன.
இது தொடர்பாக இன்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘தங்கை காளியம்மாள் கட்சியில் இருப்பதா அல்லது விலகி வேறு இயக்கத்தில் சேர்வதா என்பது அவருடைய சுதந்திரம்’ என தெரிவித்திருக்கிறார்.
காளியம்மாளை திமுகவுக்கு கொண்டு வருவதற்கு பலத்த முயற்சிகள் கடந்த சில வாரங்களாகவே நடைபெற்று வருகின்றன. ஆனாலும் அவர், கடந்த பல ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி மேடைகளில் மறைந்த கலைஞர் முதல் இப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி வரை மிகக் கடுமையான வார்த்தைகளில் சாடி இருக்கிறார்.
அந்த வீடியோக்கள் இன்னமும் நாம் தமிழர் கட்சியிடம் இருக்கின்றன. காளியம்மாள் திமுகவில் சேர்ந்த அடுத்த நிமிடமே அந்த வீடியோக்களை தினம்தோறும் டிரெண்டிங் செய்வதற்கு நாம் தமிழர் கட்சியினர் தயாராக இருக்கின்றனர். இது பற்றிய பெரிய தயக்கம் காளியம்மாளிடம் இருக்கிறது என்கிறார்கள்.
அதேநேரம் வருகிற சட்டமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சீட்டு வேண்டுமென்றும், அப்படி இல்லையென்றால் வருகிற ராஜ்யசபா தேர்தலில் மீனவர் சமுதாய பிரதிநிதித்துவத்தை தனக்கு அளிக்க வேண்டும் என்றும் காளியம்மாள் தரப்பு திமுகவிடம் கோரிக்கைகள் வைத்திருக்கின்றது. இதைக்கேட்டு திமுக ஷாக் ஆகிவிட்டது. இன்று வரை பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
அதே நேரம் தமிழக வெற்றி கழகம் தரப்பிலும், அதிமுக தரப்பிலும் கூட காளியம்மாளிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இன்னொரு பக்கம் காளியம்மாள் திமுக பக்கம் வராவிட்டால்… அவர் விஜய் கட்சிக்கு சென்று விடக்கூடாது என்பதிலும் திமுக கவனமாக இருக்கிறது.
அதனால் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய முக்கியமான நிர்வாகிகள் இணைந்து நாம் தமிழர் கட்சிக்கு எதிரான ஒரு போட்டி அமைப்பை ஏற்படுத்தி அதற்கு காளியம்மாளை தலைமை தாங்க வைக்கும் ஒரு முயற்சியையும் திமுக தலைமை இன்னொரு ஆப்ஷன் ஆக வைத்திருக்கிறது என்கிறார்கள்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலரை தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் காளியம்மாள் எந்த கட்சியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
‘என் முடிவை விரைவில் கூறுவேன்’ என்று காளியம்மாள் இன்று தன்னிடம் தொடர்புகொண்ட செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
இதையும் படிங்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக