வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

போலீசுக்கு சீமான் சவால்! வெளி மாநிலத்துக்கு தப்ப முயன்றாரா?

    மின்னம்பலம் -  Kavi : நாளை போலீஸில் ஆஜராகாத பட்சத்தில் சீமான் கைதுசெய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. seeman in police surveillance
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியாரை கடுமையாக விமர்சித்து வந்தார். அவருக்கு எதிர்க்கட்சியான அதிமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.
திராவிட கழகத்தினர், தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆகியோர் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.



இதனால் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அதற்கு முன்பு திருச்சி சரக டிஐஜியான வருண் குமார் மீது சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் திருச்சி காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது.

முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி , திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி  ஆகியோரையும் சீமான் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நேரத்தில, பெரியாரை விமர்சனம் செய்த வழக்கில் கைது செய்தால் அரசியல் ரீதியாக சீமானுக்கு ஆதரவு பெருகும் என்று கருதி பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் கைது செய்தால்தான் சரியாக இருக்கும் என்று காவல்துறையினரும், ஆட்சியாளர்களும் முடிவெடுத்திருக்கின்றனர்.

இந்தநிலையில் தான் நடிகை விஜயலட்சுமி  கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து, மேஜிஸ்திரேட் முன்பு ஆஜர்ப்படுத்தி 164 ஸ்டேட்மெண்ட் பெற்று மேல் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் இருந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தை நாடினார் சீமான்.

இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி இளந்திரையன் விஜயலட்சுமி புகார் தொடர்பான விசாரணையை 12 வாரங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவின் பேரில் தான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இருந்து, இன்று (பிப்ரவரி 27) சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. அதே நேரத்தில் நேற்று பெங்களூருவில் உள்ள விஜயலட்சுமியிடம் வளசரவாக்கம் பெண் இன்ஸ்பெக்டர் தலைமையில் சென்ற டீம் விசாரணை  மேற்கொண்டது.
போலீஸுக்கு வந்த தகவல் seeman in police surveillance

இதில், விஜயலட்சுமி ஆடியோ வீடியோ ஆதாரம், புகைப்படங்கள் ஆகியவற்றை கொடுத்திருந்தார்.

இதற்கிடையே சீமான் நேற்றும், நேற்று முன்தினமும் ராணிப்பேட்டை, வேலூரில் நிர்வாகிள் கூட்டத்தை நடத்தினார், இன்று கிருஷ்ணகிரி சென்று நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்ததால், நேற்று இரவே கிருஷ்ணகிரி சென்று ஹோட்டலில் தங்கிவிட்டார்.

அதனால் சீமானால் இன்று நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு சென்று வாய்தா கேட்டு மனு கொடுத்தனர்.

அதேசமயம் நேற்றிரவு சீமான் தங்கியிருந்த ஹோட்டலை போலீசார் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

காரணம், கிருஷ்ணகிரியில் இருந்து அண்டை மாநிலமான பெங்களூரு வழியாக சீமான் தப்பித்துவிடலாம் என்று தகவல் கிடைத்ததால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக காவல்துறை வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

இந்தசூழலில் நீலாங்கரை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சீமான் வீட்டுக்கு சென்று போலீசார் சம்மன் கொடுத்தனர். வீட்டில் உள்ளவர்கள் சம்மனை வாங்க மறுத்ததால், கேட்டில் அதை ஒட்டினர்.

அப்போது சீமான் வீட்டின் டிரைவரான சுபாகர் ஆவேசமாக வந்து கேட்டில் ஒட்டிருந்த சம்மனை கிழித்து எறிந்தார். இதை கண்ட அங்கிருந்த போலீசார் தட்டிக்கேட்ட போது, போலீசாருக்கும் சீமான் வீட்டில் இருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அங்கு செக்யூரிட்டியாக இருந்த அமுல்ராஜ் தான் வைத்திருந்த கை துப்பாக்கியை எடுக்க, உடனடியாக அவரை மடக்கி பிடித்து இழுத்து வந்து ஜீப்பில் ஏற்றினார்கள் போலீசார்.

சம்மனை கிழித்த  சுபாகரையும் கைது செய்தனர். இவர் சென்னையை சேர்ந்தவர். செக்யூரிட்டி அமுல்ராஜ் முன்னாள் ராணுவ வீரர் என்பதும் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரிடம் இருந்த கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீசார், இதற்கு லைசென்ஸ் இருக்கிறதா, ரினிவெல் செய்யப்பட்டுள்ளதா என விசாரித்து வருகின்றனர்.
கைதாக வாய்ப்பு? seeman in police surveillance

மேலும் இன்று வழங்கப்பட்ட சம்மனுக்கு சீமான் நாளை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை என்றால் அதிரடியாக கைது செய்யப்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

நீலாங்கரையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக கிருஷண்கிரியில் உள்ள தனது கணவருக்கு தொடர்புகொண்டு  சீமான் மனைவி பதற்றமாக தகவலை தெரிவித்திருக்கிறார்.

இந்தநிலையில், நாளையும் நான் நேரில் ஆஜராகமாட்டேன். என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும், நான் தர்மபுரியில் நடக்கும் கூட்டத்துக்கு செல்கிறேன் என்று பேட்டி அளித்திருக்கிறார் சீமான் .

 

கருத்துகள் இல்லை: