திங்கள், 24 பிப்ரவரி, 2025

மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்த தகுதியான பயனாளிகளையும் நீக்கியதாக புகார் - நடப்பது என்ன? |

 hindutamil.in : சிவகங்கை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்த தகுதியான பயனாளிகளையும் திடீரென நீக்கியதாகப் புகார் எழுந்தது.
இதனால் பாதிக்கப்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியுள்ள 21 வயது பூர்த்தியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
இதில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் உள்ளோர், 5 ஏக்கருக்கு மேல் நன்செய், 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்திருப்போர், கார் வைத்திருப்போர் விண்ணப்பிக்க முடியாது. தற்போது தமிழகம் முழுவதும் 1.15 கோடி பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பலர் மீண்டும் மேல்முறையீடு செய்து ஒன்றரை ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் அதிக வருமானம் போன்ற தகுதியில்லாதோர், இறந்தோரின் பெயர்கள் அவ்வப்போது நீக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



இதில் தகுதியுள்ள பெண்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அவர்கள் கோட்டாட்சியர் அலுவலகங் களுக்கு அலைந்து வருகின்றனர். இதுகுறித்து சிவகங்கையைச் சேர்ந்த செண்பகவல்லி கூறும்போது, “நானும், எனது கணவரும் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்தோம். எனக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கி வந்தனர். இதனிடையே எனது கணவர் இறந்துவிட்டார். தற்போது திடீரென மகளிர் உரிமைத் தொகையையும் நிறுத்திவிட்டனர். காரணம் தெரியவில்லை.இதையடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் விண்ணப்பித்துள்ளேன்” என்றார்.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சென்னையில் இருந்தே சிலருக்கு மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிட்டனர். எதற்காக நிறுத்தினர் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், மேல்முறையீடு செய்தால் நாங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கிறோம்’ என்றனர்.

கருத்துகள் இல்லை: