![]() |
![]() |
Pandikumar Subramani மாணவர் விக்னேசு மரணம் தொடரும் போராட்டம்!
துணைசெய்ய கலந்தாய்வுக் கூட்டம்!
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரசினர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுப் பொறியியல் படித்து வந்தவர் விக்னேசு. திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவர் விக்னேசு கடந்த 13.02.25 அன்று மர்மமான முறையில், கல்லூரி விடுதி கழிவறையில் குருதி வெள்ளத்தில் இறந்துகிடந்தார்.
விக்னேசின் இறப்புக்குக் காரணமான குற்றவாளிகளைத் தப்பவைக்கும் நோக்குடன் காவல்துறை செயல்படுவதாக பெற்றோருக்கும் மற்றும் அரசியல் இயக்கங்களுக்கும் ஐயப்பாடுகள் எழுந்தன.
இதன் காரணமாக, விக்னேசின் உடலை கூராய்வு செய்ய மறுத்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டன.
ஒரு கட்டத்தில் கோரிக்கைகளை ஒப்புக்கொள்வதாகச் சொன்ன #அரசு நிர்வாகமும் காவல்துறையும், கோரிக்கைகளை முறையாக நிறைவேற்றாமல், மீண்டும் பெற்றோரின் நம்பிக்கையை இழந்தன.
இதனால் விக்னேசின் உடலை கூராய்வு செய்ய ஒப்புக்கொண்ட பெற்றோர், #காவல்துறை மீதான நம்பிக்கையின்மையின் காரணமாக விக்னேசின் உடலை வாங்க மறுத்து, தங்களது சொந்த ஊரான திருநெல்வேலியில் போராடி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு எவ்வாறு துணைசெய்வது என்று, தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இயக்கத்தவர்கள் ஒருங்கிணைந்து கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இன்று (20.02.25) மாலை 5 மணிக்கு தேனி, #அல்லிநகரம் கருப்பையா மகாலில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு #முடிவுகள் எடுக்கப்பட்டன. #தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ் மக்கள் உரிமை முன்னணி, தமிழ்த் தேச மார்க்சியக் கழகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பாண்டியர்குல வணிகர் சங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கம், புரட்சிகர சோசலிசக் கட்சி, புரட்சித் தமிழர் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், ஆதித் தமிழர் பேரவை, தமிழ்ப் புலிகள் கட்சி, தளபதி நீதிக் குழுமம், எவிடன்ஸ், எழில் கலாசார அறக்கட்டளை ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் - தீர்மானங்களாவன..!
====================
*போடி அரசினர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் விடுதி காப்பாளர்கள் மாணவர் விக்னேசின் மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் ஆவர். இவர்கள் விசாரணையைத் திசை திருப்பும் வண்ணம், விக்னேசின் மரணத்தை தற்கொலை என்று வதந்தியும் பரப்பியுள்ளார்கள். எனவே இவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குற்ற வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்!
*விசாரணைக்கு முன்னரே வதந்திகளை முடிவுகளாக அறிவித்த முன்னாள் விசாரணை அதிகாரி காவல் ஆய்வாளர் உலகநாதன் மற்றும் போடி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் சுனில் ஆகியோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
*தேனி மாவட்ட காவல்துறை மற்றும் அரசு நிர்வாகம் முற்றாக இந்த வழக்கு விசாரணையில் கடைமையச் செய்யத் தவறி தோற்றுவிட்டன. எனவே "வழக்கு விசாரணையை (CB-CID) தமிழ்நாடு குற்றப்பிரிவு - குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும்" என்ற மாணவர் விக்னேசின் பெற்றோர் கோரிக்கையை இந்த கூட்டம் ஆதரிக்கிறது. வழிமொழிகிறது!
*மாணவர் விக்னேசின் மரணத்திற்கு பொறுப்புக்குள்ளாகும், தமிழக அரசின் போடி பொறியியல் கல்லூரி நிர்வாகமும், உயர்கல்வித் துறையும் பொருள்வகை இழப்பீடாக, விக்னேசின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்!
*பெற்ற மகனை, குடும்பத்தில் முதல் பட்டதாரி இளைஞனை பறிகொடுத்துப் போராடிவரும் விக்னேசின் குடும்பத்தினரின் கோரிக்கையான "வழக்கு விசாரணையை (CB-CID) தமிழ்நாடு குற்றப்பிரிவு - குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேனியில் வருகின்ற 24.02.25 திங்கள் கிழமை ஒரு தொடர் முழக்க #ஆர்ப்பாட்டம், பல்வேறு முற்போக்கு சனநாயக கட்சிகள் இயக்கங்கள் சார்பாக நடத்தப்படும்!
*விக்னேசின் மரணத்திற்கு நீதிகேட்கும் தொடர் போராட்டங்களை ஒருங்கிணைக்க ஒரு போராட்டக் குழுவும் உருவாக்கப்படும்!
*விக்னேசின் மரணம் தொடர்பான விசாரணையை (CB CID) தமிழ்நாடு குற்றப்பிரிவு - குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும் என்ற குடும்பத்தார் கோரிக்கை குறித்து, "என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருகிறது" என்று அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று #திருநெல்வேலி மற்றும் தேனி மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களை தேசிய பட்டியல் சாதிகள் ஆணையம் பணித்திருப்பதை வரவேற்கிறோம்!
மதியவன் இரும்பொறை
தமிழ்மக்கள் உரிமை முன்னணி
20.02.25
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக