திங்கள், 26 ஆகஸ்ட், 2024

"துரைமுருகன் பற்றி ஸ்டாலின் சொல்லிதான் ரஜினி பேசினார்"... கே.பி.முனுசாமி பகீர்!

minnambalam.com :  Selvam :  “நடிகர் ரஜினிகாந்தை பேசவைத்து திமுகவில் உள்ள சீனியர்களை வெளியேற்றுவதற்கு ஸ்டாலின் அச்சாரம் போட்டிருக்கிறார்” என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி இன்று (ஆகஸ்ட் 26) தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழாவில், திமுகவில் அசாத்தியமான சீனியர்களை சாதுரியமாக ஸ்டாலின் கையாண்டு வருகிறார் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கலைஞர் கண்களிலேயே விரல்விட்டு ஆட்டியவர் என்றும் ரஜினி பேசியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த துரைமுருகன், “மூத்த நடிகர்கள் பல் விழுந்து தாடி நரைத்த பின்னரும் நடிப்பதால் இளைஞர்கள் வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று பேசினார். பின்னர் ஸ்டாலின் கடுமையாக எச்சரித்ததால் ரஜினிக்கு போன் போட்டு வருத்தம் தெரிவித்தார் துரைமுருகன். இதுதொடர்பாக மின்னம்பலத்தில் நேற்று (ஆகஸ்ட் 26) நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில், துரைமுருகன் தனக்கு நீண்டநாள் நண்பர் என்றும் அவர் பேசியதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்றும் ரஜினி இன்று பேசியிருக்கிறார். துரைமுருகனும் நான் நகைச்சுவையாக பேசியதை பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தநிலையில், கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமியிடம் துரைமுருகன் குறித்து ரஜினி பேசியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த  கே.பி.முனுசாமி, “தனது கருத்தை நேரடியாக பொதுமேடையில் சொல்ல முடியாத சூழல் இருக்கின்ற காரணத்தினால், ரஜினிகாந்தை வைத்து சீனியர்களை வெளியேற்றுவதற்கு ஒரு அச்சாரத்தை ஸ்டாலின் போட்டிருக்கிறார் என்ற சந்தேகம் எழுகிறது.

அதற்குரிய காரண காரியங்களும் சரியாகவே வந்துகொண்டிருக்கிறது. திமுகவுக்காக கடுமையாக உழைத்தவர் துரைமுருகன். அவரை வளர்த்து ஆளாக்கியவர் எம்.ஜி.ஆர். இருப்பினும், எம்.ஜி.ஆர் எனக்கு அனைத்தும் கொடுத்தார். ஆனால், எனக்கு தலைவர் கலைஞர் தான் என்று துரைமுருகன் சொன்னார்.

அப்படிப்பட்ட திமுகவில் மிகவும் பிடிப்புள்ள இரண்டாம் நிலையில் உள்ள தலைவரை, ஆயிரம் பேருக்கு முன்பாக சம்பந்தமில்லாத மூன்றாம் நபர் அவமானப்படுத்தும் வகையில் ஒரு கருத்தை சொல்கிறார்.

அப்படி பேசும்போது ஸ்டாலின் உள்பட மேடையில் உள்ள அனைவரும் சிரிக்கிறார்கள். கட்சியில் இரண்டாம் இடத்தில் உள்ள ஒரு தலைவரை அவமானப்படுத்துகிற போது ஸ்டாலின் சிரிக்கலாமா? ஸ்டாலின் சொல்லி தான் ரஜினி அப்படி பேசியிருக்கிறார்.

இதை வழிமொழிவது போல அவருடைய மகன் உதயநிதி, மூத்தவர்கள் வழிவிட்டு எங்கள் கையை பிடித்து அழைத்து செல்ல வேண்டும் என்று சொல்கிறார். ஆக, இந்த இயக்கத்திற்கு நீண்ட காலமாக உழைத்த ஒரு நல்ல தலைவரை தந்தையும் மகனும் அவமானப்படுத்துகிறார்கள்.

அது துரைமுருகனை மட்டுமல்ல, அங்குள்ள முன்னணி தலைவர்கள் அனைவரையும் அவமானப்படுத்துவதாக தான் பொருள். திமுகவில் ஸ்டாலினும் ஒரு சீனியர். நீங்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு வெளியே செல்வீர்களா?

அப்படி வெளியே செல்லும் போது, ஒரு திறமை மிக்க இளைஞரை முதல்வர் ஆக்குவீர்களா? உங்கள் தந்தை பாணியில் உதயநிதியை தான் முதல்வர் ஆக்கப்போகிறீர்கள்.

அப்படி உதயநிதி ஸ்டாலினை முதல்வர் ஆக்குவீர்கள் என்றால் இரண்டாம் நிலையில் உள்ள தலைவர்களின் பிள்ளைகளுக்கு அமைச்சர் பதவி கொடுப்பீர்களா? திமுகவில் உள்ள இரண்டாம் நிலை தலைவர்கள் அவமானப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

கே.பி.முனுசாமியின் குற்றச்சாட்டு குறித்து திமுக வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, “ரஜினி எப்போதுமே தனது மனதில் பட்டதை பேசக்கூடியவர். அவர் எந்தவிதமான முன்தயாரிப்புகளோடும் பேசமாட்டார். 1996-ல் இருந்தே அரசியல் தொடர்பாக கருத்துக்களை அப்படி தான் பேசிவருகிறார்.

அந்தகாலகட்டத்தில் சிவாஜி கணேசனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா முன்பே, திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆர் நகர் அல்லது சிவாஜி நகர் என்று தான் பெயர் வைத்திருக்க வேண்டும். ஜெ.ஜெ.நகர் என்று பெயர் வைத்திருக்கக்கூடாது என்று பேசியவர்.

அதேபோல  தான் கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழாவிலும் தனது மனதில் பட்டதையே ரஜினி பேசினார். தற்போது பாஜக – அதிமுக மோதல் போக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த விவகாரத்தை திசைதிருப்புவதற்காகவே, அதிமுக முகாம்களில் இருந்து இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்” என்கின்றனர்.

செல்வம்

கருத்துகள் இல்லை: