செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

அறநிலையத்துறை கோவில்களை நிர்வகிக்கதான்.. மத பிரசாரம் செய்ய இல்லை.. வீரமணி பாய்ச்சல்!

 tamil.oneindia.com - Mathivanan Maran  :  சென்னை: இந்து சமய அறநிலையத்துறை என்கிற அமைச்சகமானது கோவில்களின் நிர்வாகத்தை மேற்கொள்ளவும், பாதுகாப்பு வழங்கவும்தானே தவிர..
இந்து மதத்தை பிரசாரம் செய்வதற்கான துறை அல்ல என அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்திய தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு திமுகவின் தோழமை இயக்கமான திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' பழனியில் 24.8.2024 அன்று தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெற்றுள்ளது. காணொலிக் காட்சி வழியாக மாநாட்டைத் தொடங்கி வைத்து வாழ்த்தி உரையாற்றியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.



நீதிக்கட்சி ஆட்சியில் உருவானது: இந்து அறநிலையத் துறை என்பது நீதிக்கட்சி பனகல் அரசரின் ஆட்சியில் பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்புக்கிடையே உருவாக்கப்பட்டு சட்ட மாக்கப்பட்டதாகும். தமிழ் மன்னர்களின் செல்வத்தாலும், தமிழினத் தொழிலாளர்களின் கடும் உழைப்பாலும் உருவாக்கப்பட்ட கோவில்கள் பார்ப்பனர்களின் சுரண்டல் கூடாரமாகவே இருந்தது. நாம் இதைச் சொல்லவில்லை; இந்திய அரசால் சர்.சி.பி.இராமசாமி அய்யர் தலைமையில் அமைந்த குழுவினரே விலாவாரியாகத் தோலுரித்துக் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கோவில் நிர்வாகம்தான் முக்கியம்: இந்து அறநிலையத் துறை என்பது கோவில் சொத்துகளைப் பாதுகாப்பதும், வரவு - செலவுகளை சரி பார்ப்பதுமான துறையே தவிர, பக்தியைப் பரப்புவதற்கான ஒன்றல்ல. இதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைச் சுட்டிக்காட்டுவது நமது கடமையாகும். அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த போது, இந்து அறநிலையத் துறை நாவலர் இரா.நெடுஞ்செழியன்
வசம் ஒப்படைக்கப்பட்டது.ன

அறநிலையத்துறை அமைச்சராக நெடுஞ்செழியன்: அந்த நிலையில் சிதம்பரம் நடராசர் கோவிலுக்குச் சென்ற நிலையில், அவருக்குப் ''பிரசாதங்கள்'' எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர் ஒன்றும் அதனை நெற்றியில் பூசிக்கொள்ளவில்லை. பரிவட்டம் கட்டினார்கள். இதுகுறித்து தந்தை பெரியார் அவர்களே 'விடுதலை' யில் (25.3.1967, பக்கம் 2) தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். ''அங்கே போய் அமைச்சர் நெடுஞ்செழியன் சாமி கும்பிடவில்லை. ''பிரசாதம்'' வாங்கி அணிந்து கொள்ளவில்லை. தலையில் கட்டிய பரிவட்டத்தை எடுத்து, கழுத்தில் வேட்டிபோல் போட்டுக் கொண்டார்.'' ''ஒரு வெள்ளைக்காரன் இங்கு கோவிலுக்கு வந்து விட்டு எப்படிப் போவானோ, அப்படித்தான் நானும் வந்துவிட்டுப் போவேன்'' என்றாராம். நெடுஞ்செழியன் அவர்கள், ''நாங்கள் கொள்கைகளைக் கழுவிக் கொட்டிவிட்டு இங்கு வரவில்லை. குளிக்கப் போகும்போது, வேஷ்டியை அவிழ்த்து மேடையில் வைத்துவிட்டு, குளிக்கப் போய் அழுக்கை தேய்த்துக் கழுவிவிட்டு, மேடையில் ஏறியவுடன், அந்த வேஷ்டியை எடுத்துக் கட்டிக் கொள்வதுபோல, அந்தக் கொள்கையோடுதான் இருக்கிறோம்'' என்று காட்டிக் கொண்டார் என்றுதான் மக்கள் கருதவேண்டும்.

அறநிலையத்துறை அமைச்சகத்தின் பணி என்ன?: தந்தை பெரியார் கூட ஈரோட்டில் தேவஸ்தான கமிட்டி தலைவராக இருந்து, கோவில் வருவாயைப் பெருக்கிக்காட்டி, காங்கிரசில் சேரும்போது, 29 பதவிகளை உதறித் தள்ளியதில், இந்தப் பதவியும் அடங்கும். இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். சிதம்பரம் நடராசன் கோவிலுக்குச் சென்று, வெளியே வந்தபோது, செய்தியாளர்களிடம் அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்கள் சொன்ன கருத்து மிகவும் முக்கியமானதாகும். ''அறநிலையத் துறை அமைச்சரின் பணி என்பது ஆறு மரக்கால் அரிசி என்றால், அதை அளவுப்படி சரியாகப் போடுகிறார்களா என்று பார்ப்பதுதானே தவிர, சாமி கும்பிடுவதோ, ஆன்மிகப் பிரச்சாரம் செய்வதோ அல்ல'' என்று பளிச்சென்று சொன்னதை இந்த இடத்தில் நினைவூட்ட வேண்டியது நமது முக்கிய கடமையாகும்.
பாராட்டவேண்டிய நேரத்தில் மனந்திறந்து பாராட்டுவது போலவே, சறுக்கல் நேரும் நேரத்தில் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டியதும் தாய்க்கழகமான திராவிடர் கழகத்தின் முக்கிய கடமையாகும். இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: