செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : எந்தெந்த முதலீட்டாளர்களை சந்திக்க திட்டம்?

 Kalaignar Seithigal - Lenin : தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து அதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்படி அவர் அழைப்பு விடுத்துள்ளார்.



மேலும் துபாய் பயணத்தின் வாயிலாக 6,100 கோடி ரூபாய் முதலீடும், 15,100 பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தக்கூடிய வகையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. பின்னர் ஜப்பான் பயணத்தில் மட்டும் 7 நிறுவனங்களோடு ரூ.1,029 கோடியே 90 லட்சத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதனைத் தொடர்ந்து சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடும், முதலீட்டாளர்கள் சந்திப்புகளும் நடத்தப்பட்டு, 9 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களை சந்தித்து சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை கொண்டுவரும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா செல்கிறார்.

நாளை சென்னையில் இருந்து புறப்படும் முதலமைச்சர், சுமார் 17நாட்கள் அமெரிக்காவின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் 28ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை சான்பிரான்சிஸ்கோவில் உள்ள உலகின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார்.

ஆகஸ்ட் 29ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் "இன்வெஸ்டார் கான்கிளேவ்" மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். ஆகஸ்ட் 31ம் தேதி புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்து பேசுகிறார். இந்த நிகழ்வுகளை முடித்த பின்னர், செப்டம்பர் 2ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிக்காகோ செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செப்டம்பர் 12-ம் தேதிவரை அமெரிக்காவில் உள்ள பல்வேறு முக்கிய முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில்களை தொடங்கவும், முதலீடுகளை செய்யவும் அழைப்பு விடுக்கிறார்.

இந்த நிகழ்வுகளுக்கு இடையே செப்டம்பர் 7ம் தேதி அமெரிக்கவாழ் தமிழர்களுடனான நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.

கருத்துகள் இல்லை: