செவ்வாய், 24 ஜனவரி, 2023

இந்தியாவின் உதவியே பயங்கரவாதத்தை நாம் தோற்கடிக்க உதவியது.”- இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி

 தேசம்நெட் - அருண்மொழி :  “இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் 26 வருடங்களாக எங்கள் நாட்டிற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த  பயங்கரவாத அமைப்பை நாங்கள் தோற்கடித்திருக்க மாட்டோம்.”  என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் தெரிவித்துள்ளது
இந்தியாவுடனான உறவுகள் வரலாற்று ரீதியிலானவை, நாங்கள் ஒரு நாகரீகத்தை பகிர்ந்துகொள்கின்றோம். எங்கள் மத கலாச்சார பொருளாதார சமூக பாதுகாப்பு  கரிசனைகள் பொதுவானவை.
கருத்துவேறுபாடுகள் ஏற்பட்ட காலங்களும் உள்ளன. குடும்பங்களில் கூட அது சாத்தியம்,ஆனால் நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளோம். இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருந்துள்ளது,இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் 26 வருடங்களாக எங்கள் நாட்டிற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த  பயங்கரவாத அமைப்பை நாங்கள் தோற்கடித்திருக்க மாட்டோம். அதற்காக நாங்கள் நன்றியுடையவர்களாக உள்ளோம்.


ஆனால் இறைமையுள்ள நாடு என்ற அடிப்படையில் நாங்கள் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படவேண்டும்,உங்கள் நாட்டின் மிகப்பெரிய வர்த்தக பங்காளி உங்களிற்கு விருப்பமில்லாத நாடாகயிருக்கலாம்.ஆனால் நீங்கள் அவ்வாறே செயற்படவேண்டியுள்ளது உலகம் அவ்வாறே மாறிவருகின்றது.

ஆனால் இதன் அர்த்தம் நாங்கள் இந்தியாவின் நலன்களை அலட்சியப்படுத்துகின்றோம் அதற்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றோம் என்பதல்ல,நாங்கள் இந்த விவகாரத்தை வித்தியாசமாக கையாள்கின்றோம்.

இலங்கையை பொறுத்தவரை இந்தியாவுடனான உறவே மிகமுக்கியமானது. ஆனால் முற்றிலும் ஒரு நாட்டையே நம்பியிருப்பது நியாயமற்றது. இலங்கைக்கு ஏனைய நாடுகள் நியாயபூர்வமாக வந்து உதவி செய்வது முதலீடு செய்வது குறித்து எந்த பிரச்சினையும் இல்லை என ஜெய்சங்கரே தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு கரிசனைகள் உள்ளன. ஆனால் நாங்கள் இந்தியாவின் நியாயபூர்வமான பாதுகாப்பு கரிசனைகளிற்கு யாரும் பாதிப்பு ஏற்படுத்த அனுமதிக்கமாட்டோம். எவரும் அதனை செய்யமுயலவில்லை நாங்கள் இந்தியாவின் உணர்வுகளை புரிந்துகொண்டுள்ளோம்.” எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: