வியாழன், 26 ஜனவரி, 2023

தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்படத்தை கேரளாவில் திரையிட்டது காங்கிரஸ்

மாலை மலர்  :  திருவனந்தபுரம் கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தோடு, அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியை தொடர்புபடுத்தி பிபிசி ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. 'இந்தியா: மோடிக்கான கேள்விகள்' எனும் தலைப்பிலான இந்த ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில், ''இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்தியாவின் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் இடையே இருக்கும் பதற்றங்களை பாருங்கள்.
ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட 2002 குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு உள்ள பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், ஆவணப்படத்தை டுவிட்டர் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட தடை விதித்துள்ளது. மேலும் ஆவணப்படம் தொடர்பான லிங்க்குகளுடன் பகிரப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ட்வீட்களை நீக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ், இன்று அந்த ஆவணப்படத்தை கேரளாவில் மக்களுக்கு திரையிட்டு காட்டி உள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள சங்குமுகம் கடற்கரையில், மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று இரவு ஆவணப்படம் திரையிடப்பட்டது.

ஆவணப்படத்தை மத்திய அரசு தடை செய்தாலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான டெல்லி, தெலுங்கனா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ஆவணப்படம் திரையிடப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான என்எஸ்யுஐ சார்பில் சண்டிகரில் திரையிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கேரளாவில் இன்று திரையிடப்பட்டிருக்கிறது.

இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆவணப்படம் மீதான தடை குறித்து கேள்வி எழுப்பினார். "உண்மை பிரகாசமாக ஒளிர்கிறது. தடையோ, அடக்குமுறை மற்றும் மக்களை பயமுறுத்தினாலும் உண்மை வெளிவருவதைத் தடுக்க முடியாது" என்றார் ராகுல் காந்தி.

கேரளாவில், மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் கே.அந்தோணி, காங்கிரசின் நிலைப்பாட்டை மீறி, ஆவணப்படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

கருத்துகள் இல்லை: