செவ்வாய், 24 ஜனவரி, 2023

தமிழ்நாடு அலங்கார ஊர்தியில் பெண்களுக்கு முக்கியத்துவம்

nakkeeran    டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழக அரசின் சார்பில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்களித்த வீரர்களின் உருவங்கள் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தயார் செய்யப்பட்டிருந்தன.
ஆனால், தமிழக அரசின் ஊர்திக்கு மத்திய அரசு அனுமதியளிக்க மறுத்துவிட்டது.
இதையடுத்து, அந்த அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்றதோடு தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டுக்  காட்சிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு டெல்லி செங்கோட்டையில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் இடம் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி நேற்று டெல்லி கடமை பாதையில் குடியரசு தினவிழா முழு அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.


இதில் முப்படைகளும் கலந்துகொண்டு வீரர்கள் விமான சாகசங்கள் நடத்தினர். அதைப்போல பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் அணிவகுத்தன.
அதில் அந்தந்த மாநில கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் காண்பிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் தமிழ்நாடு அலங்கார ஊர்திகளில் இந்த முறை பெண்களை மையப்படுத்தியே இருந்தது. ஊர்தியின் முகப்பில் ஔவையாரின் உருவம் பிரமாண்டமாக இடம்பெற்றிருந்தது. அடுத்ததாக வீரமங்கை வேலுநாச்சியாரின் சிற்பமும் இருந்தது. எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைக்கருவியுடனும், தஞ்சை பாலசரஸ்வதி பரதம் ஆடுவது போலவும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் மருத்துவப்பையுடனும் இருக்கும்படி சிலைகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், வாழும் இயற்கை விவசாயி பாப்பம்மாள் ஆகியோரின் சிலைகளும் இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை: