Kalaignar Seithigal - Prem Kumar : திருப்பூரில் தமிழ் இளைஞர்களை வடமாநில இளைஞர்கள் தாக்குவதாக வெளியான வீடியோ உண்மையில்லை என போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.
திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் தமிழ் தொழிலாளர்களை வட மாநில தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் துரத்திச் சென்று தாக்குவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் உண்மை நிலவரம் தெரியாமல் வடமாநில தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்பலரும் கோரிக்கை வைத்தனர். நகைச்சுவை நடிகர் மதுரை முத்து இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இதனிடையே வட மாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஏராளமான தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்நிலையில் திருப்பூரில் தமிழ் இளைஞர்களை வடமாநில இளைஞர்கள் தாக்குவதாக வெளியான வீடியோ உண்மையில்லை என காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் மாநகர காவல் துறை உண்மை சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “இச்செய்தி சமூக வலைதளங்களில் தவறாக பகிரப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகரம், வடக்கு மாவட்டம், 15வேலம்பாளையம் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட திலகர் நகரில் உள்ள ரியா பேஷன்ஸ் என்ற கம்பெனியில் வேலை செய்யும் நபர் 14.01.2023 அன்று மாலை நேர தேநீர் இடைவேளையின் போது அருகில் உள்ள டீ கடைக்கு டீ குடிக்க சென்றபோது, அங்கு அமர்ந்திருந்த இரண்டு நபர்கள் சிகரெட் பிடிக்கும் புகை பட்டதில் அவர்களுக்கு உள்ளாக சிறிய பிரச்சனை ஏற்பட்டு, அங்கு இருந்த நபர் ரியா ஃபேஷனில் வேலை செய்யும் நபரை தாக்க முற்பட்டுள்ளார்.
அதன் காரணமாக அந்த நபர் ரியா ஃபேஷன் கம்பெனியில் வேலை செய்யும் தனது நண்பர்களை அழைத்துவந்து இரு தரப்பினர்களுக்கும் டையே வாக்குவாதம் ஏற்பட்டு கலைத்து சென்று விட்டதாகவும், எந்த தரப்பிற்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. இது சம்பந்தமாக யாரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை.
இது தொழில் போட்டியோ, வேலைவாய்ப்பு சம்பந்தமாகவோ அல்லது முன்விரோதம் காரணமாகவோ ஏற்பட்ட பிரச்சனை இல்லை என்றும் தற்செயலாக இரண்டு நபர் மற்றும் அவர்களது நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையே என்று தெரியவருகிறது. இருப்பினும் இது சம்பந்தமாக முழுமையாக விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
14.01.2023 அன்று நடந்து முடிந்த மேற்கண்ட நிகழ்வை 26.01.2023 அன்று நடைபெற்றதாகவும், பனியன் கம்பெனியில் வேலை செய்யும் தமிழர்களை வடஇந்தியர்கள் விரட்டுவதாக சமூக வலைதளங்களில் தவறாக பகிரப்பட்டு வருகிறது.” எனத் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக