திங்கள், 23 ஜனவரி, 2023

ஹிட்லர் தெரியுமா உங்களுக்கு.. மோடிக்கும் அதே கதிதான்.." சித்தராமையா சொன்னதும்.. கொதித்தெழுந்த பாஜக

 tamil.oneindia.com  -  Vigneshkumar  : பெங்களூர்: கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா பிரதமர் மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்டுக் கூறிய கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு நடந்து வரும் நிலையில், சில மாதங்களில் அங்குத் தேர்தல் நடைபெற உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள நிலையில், அங்கு இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் இப்போதே தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது.
கர்நாடக தேர்தல்


காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடகாவில் பாஜகவுக்கு எதிராகத் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசில் ஊழல் தலைவிரித்து ஆடுவதாகக் கூறி அவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனிடையே அம்மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா பிரதமர் நரேந்திர மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியை ஹிட்லர், பெனிட்டோ முசோலினி ஆட்சியுடன் ஒப்பிட்ட சித்தராமையா, பிரதமர் மோடியின் ஆட்சி இன்னும் சில காலம் மட்டுமே நீட்டிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சித்தராமையா
அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சித்தராமையா, "அவர் நாட்டின் பிரதமர் தானே.. இங்கு வரட்டும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும் என்று 100 முறை சொன்னாலும், அது நடக்காது என்பதை அவரிடமே நான் தெளிவாகக் கூறுவேன்.. இன்னொரு விஷயத்தையும் நான் கூற விரும்புகிறேன். இதை மக்கள் பலரும் நம்ப மாட்டார்கள்.. ஆனால், வரலாற்றில் இதுதான் நடந்துள்ளது.. அதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஹிட்லர்
ஹிட்லருக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்? அவர் கொஞ்சக் காலம் ஆட்டம் போட்டார். முசோலினி மற்றும் பிராங்கோவுக்கு என்ன நடந்தது? அவரும் (பிரதமர் மோடி) சில நாட்கள் மட்டும் இப்படி ஆட்டம் போடலாம். அதன் பிறகு நிச்சயம் நிலைமை மாறும்" என்று அவர் தெரிவித்தார். சித்தராமையாவின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் ஆளுமை முழு நாட்டிற்கும் தெரியும் என்று கூறிய அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, இதுபோன்ற கருத்துகள் பிரதமர் மோடியை எதுவும் செய்யாது என்றார்.

பாஜக கண்டனம்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களுக்கும் மோடியின் ஆளுமை தெரியும். யாரோ எதையாவது உளறுவதால் இங்கு எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது.. குஜராத்திலும் கூட இப்படி தான் அவர்கள் பேசி வந்தார்கள். ஆனால், பாஜகவுக்கு மிக பெரியளவில் வாக்குகள் கிடைத்தன. வேண்டுமென்றால் பாருங்கள். கர்நாடக தேர்தலிலும் அதுவே தான் நடக்கும்" என்றார்.

பிரகலாத் ஜோஷி
அதேபோல மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி காங்கிரசுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், "காங்கிரஸ் கட்சியைப் பாருங்கள்... இன்னும் கார்கேவை அவர்கள் தலைவராக ஏற்கவில்லை. சித்தராமையாவும் கார்கேவை தலைவராக ஏற்கத் தயாராக இல்லை. ராகுல் காந்தியின் சித்தாந்தங்கள் மட்டுமே முன்னிறுத்தப்படும் என்கிறார். ஆனால், பாஜகவில் நிலைமை அப்படியில்லை.. பிரதமராக உள்ள மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.. யாராலும் நியமிக்கப்பட்டவர் இல்லை.. காந்தி பரிவாரத்தைச் சேர்ந்தவரும் இல்லை" என்றார்.

Congress CM Siddaramaiah says compares PM Modi with Hitler: BJP slams Siddaramaiah for his speech about Modi.

கருத்துகள் இல்லை: