hirunews.lk : யாழ்ப்பாணம் பலாலி காணி விடுவிக்கப்படும் திகதி குறித்து தான் பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு பணிக்குழாமின் பிரதானி மற்றும் முப்படை பிரதானிகளுடன் தான் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (26) இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டின் போதே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துவெளியிடுகையில், “பாதுகாப்பு பிரதானிகளின் தீர்மானத்திற்கமையவே நாம் செயற்பட்டோம். காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவொரு விடயத்தையும் நாம் மறுக்கவில்லை.
நான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி. அந்த வகையில் இருக்கும் சட்டத்தை நான் நடைமுறைப்படுத்துவேன்.
எமது அரசியலமைப்பில் கடந்த 37 ஆண்டுகளாக 13ஆவது அரசியல் திருத்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது. நான் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நான் அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் யாராவது 22ஆவது மறுசீரமைப்பைக் கொண்டு வந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும். இங்கு என் மீது குற்றம்சுமத்துவதில் எந்தப் பயனும் இல்லை.
எனவே இரண்டில் ஒன்று நடைபெற வேண்டும். 13ஆவது அரசியல் திருத்தத்தை நீக்குங்கள். அல்லது 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள்.
எமக்கு இடைநடுவில் நின்று கொண்டு செயற்பட முடியாது. ஒன்று அதனை ஒழிக்க வேண்டும் இல்லையேல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தனிப்பட்ட பிரேரணையொன்றைக் கொண்டு வந்து யாருக்கு வேண்டுமானாலும் அதனை நீக்க முடியும். அதற்கு பெரும்பான்மையானோர் தமது விருப்பத்தை தெரிவிக்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அப்படியாயின், 13ஐ நடைமுறைப்படுத்த நேரிடும்.
ஆனால் இதனால் நாடு பிளவுபடாது. விசேடமாக 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவின் தீர்மானத்துக்கமைய நோக்கினால் நாம் ஒற்றையாட்சியில் இருக்கிறோம். அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு நான் உடன்படுகின்றேன்.
நாம் தற்போது உருவாக்கிக் கொண்டுள்ள மாகாண சபைகளுக்கு லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாது.
லண்டன் நகரசபைக்கு இதனை விடவும் அதிகாரங்கள் உள்ளன. எனவே இதனை பெடரல் இராச்சியம் எனக் கூறமுடியுமென நான் நினைக்கவில்லை.
அதனை நடைமுறைப்படுத்தவில்லையாயின் நாம் அதனை நீக்க வேண்டும். அரசியலமைப்பில் வைத்துக் கொண்டு அதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது சரியானதல்ல.
யுத்தம் முடிவடைந்த போது பெருமளவிலான காணிகள் அரசாங்கத்திடம் இருந்தன. பின்னர் அவை முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரினால் பகிர்ந்தளிக்கப்பட்டன.
எனினும் காணிகள் பகிர்ந்தளிக்கும் போது பாதுகாப்பு தொடர்பான முடிவுகளை எடுக்க நாம் பாதுகாப்புத் தரப்பினரிடம் அதனை கையளிக்க வேண்டும். அது தொடர்பான ஆலோசனைகளை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
காணி ஆணைக்குழுவை நாம் விரைவில் நியமிக்க வேண்டும். எதிர்வரும் மார்ச் மாதமளவில் அதற்கான சட்டமூலத்தை நாம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கலாம்.
இதில் 09 பேரை மாகாண மட்டத்திலும் ஏனைய 12 பேரை ஜனாதிபதி சார்பாக நியமிக்கவும் நான் நினைத்துள்ளேன்.
அடுத்ததாக தேசிய காணி கொள்கையொன்றும் அறிமுகம் செய்யப்படும். காணி ஆணைக்குழுவால் தேசிய காணிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
நாட்டின் 30 சதவீதத்திற்கும் அதிகமான காணிகள் வனப்பகுதிகளாக மதிப்பிடப்பட்டுள்ளன. எவ்வித முறையான திட்டமும் இல்லாமலேயே அவசரமாக காணிகள் வனங்களாக உள்வாங்கப்பட்டுள்ளன.
ஆறுகள் ஆரம்பமாகும் இடங்களில் நாம் வனங்களை உருவாக்குவோம். நாம் வனங்களை அதிகரிப்போம்.
எனவே நாம் உருவாக்கும் தேசியக் கொள்கையடிப்படையில் அந்த 30 சதவீதம் எங்கே இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமையை நாம் காணி ஆணைக்குழுவிடம் ஒப்படைப்போம்.
30 சதவீத காடுகளை உருவாக்குவதில் நானும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். மாகாண காவல்துறை ஆணைக்குழுவுக்கு பதிலாக தேசிய காவல்துறை ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும்.
அதற்கான திருத்தமொன்றைக் கொண்டு வந்து வேண்டுமானால் அதனை தோற்கடித்து மாகாண காவல்துறை ஆணைக்குழுவை நடைமுறைப்படுத்தலாம். இரண்டில் ஒன்றை செய்ய வேண்டும். நாம் செய்யக்கூடியவை பற்றிய யோசனைகளை தருகின்றேன்.
அதுபற்றிய உங்கள் கருத்துக்களை என்னிடம் முன்வையுங்கள் நான் இதனை எதிர்வரும் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைப்பேன்.
உங்களிடம் ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால், 04 ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை வழங்கினால், அவற்றையும் உள்ளடக்கி நாங்கள் முன்னோக்கிச் செல்வோம்.
இந்த நாட்டை பிரிக்க நான் தயாராக இல்லை. இலங்கையில் உள்ள தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர் உட்பட ஏனைய குழுக்களுடன் இணைந்து வாழ வேண்டும்.
நமது தேசிய கீதத்தில் "ஒரு தாயின் மக்கள்'' என்பதை நாம் பாதுகாத்தால், நம் நாடு ஒற்றுமையுடன் முன்னேற முடியும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
இன்று தமிழ் மக்களும் முஸ்லிம்களும் இந்த நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இப்போது சிங்கள மக்களும் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.
பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் படிப்படியாக தீர்த்து வைப்போம்.'' என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக