புதன், 23 நவம்பர், 2022

மேற்கு வங்கத்தில் ஹிஜாப் பிரச்சினையால் மாணவர்கள் பயங்கர மோதல்.. சூறையாடப்பட்ட பள்ளி.. தேர்வு ரத்து

 tamil.oneindia.com  -  Jackson Singh  :  கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு ஒருதரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் பள்ளி சூறையாடப்பட்டதுடன் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
கர்நாடகாவை தொடர்ந்து தற்போது மேற்கு வங்கத்திலும் ஹிஜாப் பிரச்சினை வெடித்திருப்பது அம்மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, பாஜகவினர் தான் இந்த ஹிஜாப் பிரச்சினையை மேற்கு வங்கத்தில் பரப்பி வருவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்த ஹிஜாப் பிரச்சினை மற்ற பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் பரவாமல் இருப்பதை உறுதி செய்ய காவல்தறைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
திரும்பி பார்க்க வைத்த கர்நாடகா..


கடந்த மார்ச் மாதம் கர்நாடகாவில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு ஒருதரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது நாளடைவில் இரு வேறு மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே மோதலாக வெடித்தது. பின்னர், கர்நாடாகாவில் உள்ள மற்ற பள்ளி, கல்லூரிகளுக்கும் இந்த ஹிஜாப் விவகாரம் பரவி பெரும் கலவரமாக மாறியது. படிக்கும் வயதில் மாணவர்கள் மத்தியில் மத ரீதியிலான மோதல் ஏற்பட்டது நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியது. இதன் தொடர்ச்சியாக, பள்ளி, கல்லூரிகளுக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என கர்நாடகா அரசு உத்தரவிட வேண்டிய சூழலும் ஏற்பட்டது. இந்த சூழலில், மேற்கு வங்கத்திலும் ஹிஜாப் விவகாரம் புயலை கிளப்பியிருக்கிறது.

மேற்கு வங்கத்திலும்..
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள துலாஹர் பகுதியில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆண் - பெண் இருபாலரும் சேர்ந்து பயிலும் இந்தப் பள்ளியில் இன்று 11, 12-ம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தன. இந்நிலையில், 11-ம் வகுப்பு படிக்கும் ஒருதரப்பு மாணவர்கள் சிலர், இன்று காலை காவித் துண்டை அணிந்தபடி பள்ளிக்கு வந்தனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கேட்ட போது, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப்பை கழட்டினால் தாங்களும் துண்டை எடுப்பதாக அவர்கள் கூறினர்.

ரத்தம் சொட்ட சொட்ட சண்டை..
மாணவர்களின் இந்த பதிலால் கோபமடைந்த முஸ்லிம் மாணவிகள், அவர்களை திட்டியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்படவே, முஸ்லிம் மாணவிகளுக்கு ஆதரவாக மற்றொரு தரப்பு மாணவர்கள் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென இரு தரப்பு மாணவர்களும் ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கினர். கல், மரக்கிளைகள், பெல்ட்டுகள் ஆகியவற்றை கொண்டு இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில் சில மாணவர்களுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை தடுக்க வந்த ஆசிரியர்களும் தாக்கப்பட்டதாக தெரிகிறது. பள்ளியில் இருந்த பொருட்களும் சூறையாடப்பட்டது.


மம்தா உத்தரவு..
இதுகுறித்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு வந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கலைந்து போகச் செய்தனர். இதையடுத்து, மோதலை தவிர்க்க வேண்டிய பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த ஹிஜாப் விவகாரம் மேற்கு வங்கத்தில் மற்ற கல்லூரிகளிலும் பரவாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு காவல்துறையினருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
English summary
A clash erupted between two group of students at a school in Howrah over wearing of hijab and saffron scarves following which exams had to be cancelled.
 

கருத்துகள் இல்லை: