வெள்ளி, 25 நவம்பர், 2022

பிறப்புறுப்பை நசுக்கி.. 10ஆம் வகுப்பு மாணவனுக்கு ராகிங் கொடூரம்! சென்னை கேகே நகர் நடேசன் சாலை மத்திய அரசின் கேந்திரிய வித்தியாலயா பள்ளி

 tamil.oneindia.com  -   Vigneshkumar : சென்னை: சென்னை கேகே நகரில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு மாணவன் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்குப் பாடங்கள் சொல்லத் தருவது ஒன்று என்றால், அதைத்தாண்டி மாணவ மாணவிகளுக்கு முக்கியமாக ஒழுக்கம் கற்றுத்தருவதே முக்கியமானதாக இருக்கிறது.
சென்னை பள்ளி
அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் தலைநகர் சென்னையிலேயே அரங்கேறி உள்ளது. சென்னையில் கேகே நகர் பகுதியில் நடேசன் சாலையில் மத்திய அரசின் கேந்திரிய வித்தியாலயா பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். இதற்கிடையே இந்தப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த மாணவரின் தந்தை ஒருவர் கடந்த 21ஆம் தேதி கேகே நகர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மாணவரின் தந்தை அளித்த அந்த புகாரில், "கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் எனது மகன் 10ஆம் வகுப்பு படித்து வருகிறான். அங்குப் படிக்கும் சக மாணவனுடன் கடந்த மாதம் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதில் சக மாணவர்கள் இணைந்து எனது மகனைத் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக அவன் என்னிடம் கூற, நான் பள்ளிக்கு நேரில் சென்று இது தொடர்பாக ஆசிரியரிடமும் பள்ளி நிர்வாகத்திடமும் புகார் கொடுத்தேன். அவர்களும் சம்மந்தப்பட்ட மாணவர்களை நேரில் அழைத்து எச்சரித்தனர்.

பிறப்புறுப்பில் தாக்குதல்
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த 21ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற எனது மகனை வகுப்பு முடிந்த உடன், 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றாக இணைந்து தாக்கியுள்ளனர். 'எங்களை பற்றியே டீச்சரிடம் புகார் தரயா' என்று மிரட்டித் தாக்கியுள்ளனர். அடிவயிற்றில் எட்டி உதைத்தும், பிறப்புறுப்பை கைகளால் கசக்கியும் அடித்து உதைத்து உள்ளனர். மேலும், எனது மகனின் வாயில் அசிங்கமான செயலையும் செய்து துன்புறுத்தி உள்ளனர்.

கொடூர தாக்குதல்
இதன் காரணமாக எனது மகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவன் தற்போது சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். எனது மகனைக் கொடூரமாகத் தாக்கி, பிறப்புறுப்பை நசுக்கிய கொடுமைப்படுத்தி சக மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவரது புகாரில் கூறி இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாகக் குறித்து கமிஷனர் சங்கர் ஜிவால் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன் நேற்று பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

போலீஸ் விசாரணை
ராக்கிங் செய்த மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்களிடம் போலீசார் கேட்டறிந்தனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவன் கொடுத்த புகாரில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்தும் விசாரித்தனர். மேலும், ராக்கிங் செய்ததாகக் கூறப்படும் 10 மாணவர்களை அடையாளம் காணப்பட்டு, அவர்களிடமும் ரகசிய விசாரணையை நடத்தினர். சக மாணவனை அடித்துக் கொடுமைப்படுத்திய மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகம், ராகிங் தடுப்பு குழுவினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Class 10 student allegedly sexually harassed and bullied by classmates in Chennai: Chennai school ragging for 10th student.

கருத்துகள் இல்லை: