புதன், 23 நவம்பர், 2022

ஸ்கெட்ச் போட்டு வாழ்ந்த ஊராட்சி தலைவரை ஸ்கெட்ச் போட்டு கொலை?

scetch venkatesanvikatan.com  -  எஸ்.மகேஷ்  :  கொலை நடப்பதற்கு முன்பு வந்த போன் அழைப்பு - ஊராட்சி மன்றத் தலைவர் நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலை!
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகேயுள்ள மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்கெட்ச் (எ) சி.வெங்கடேசன் (48). இவர் புரட்சி பாரத கட்சிப் பிரமுகர். மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத்தின் தலைவர் பதவிக்கு பூட்டு சாவி சின்னத்தில் வெங்கடேசன் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்த நிலையில் ஆதனூர், ராகவேந்திரா நகரில் வைத்து வெங்கடேசன் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் நிலை தடுமாறிய அவரை, மர்மக் கும்பல் ஒன்று சுற்றி வளைத்து வெட்டிச் சாய்த்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து மணிமங்கலம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், வெங்கடேசனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். போலீஸார் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக வெங்கடேசன் கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது. அதனால் கொலையாளிகளை போலீஸார் தேடிவருகின்றனர். ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் கொலைசெய்யப்பட்ட சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து போலீஸாரிடம் கேட்டதற்கு, ``ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை மோதல் தொடர்பாக வெங்கடேசனைக் கொலைசெய்ய ஒரு கும்பல் திட்டமிட்டிருக்கிறது. அதில் வெங்கடேசன், காயங்களுடன் உயிர்தப்பிவிட்டார். தற்போது, நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெங்கடேசன் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். அதனால் பிளான் போட்டு இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. வெங்கடேசனின் எதிரிகள் யார் என்று விசாரித்து பட்டியலை தயாரித்திருக்கிறோம். மேலும் சம்பவம் நடந்த பகுதியிலுள்ள செல்போன் சிக்னல்கள், சிசிடிவி காட்சிகளை சேகரித்துவருகிறோம். கொலை நடப்பதற்கு முன்பு வெங்கடேசனுக்கு ஒரு போன் அழைப்பு வந்ததாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அது தொடர்பாகவும் விசாரித்துக்கொண்டிருக்கிறோம்" என்றனர்.

கருத்துகள் இல்லை: