செவ்வாய், 22 நவம்பர், 2022

ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு..! கோவையில் இருந்ததாக பகீர் தகவல் - ஜமேஷாவுடன் தொடா்பா..?அடுத்தடுத்த அதிர்ச்சி

n
hindutamil.in  : மங்களூரு குண்டுவெடிப்பு | ஷரீக் தங்கியிருந்த கோவை விடுதிக்கு பூட்டு: போலீஸ் நடவடிக்கை |
மங்களூரு குண்டுவெடிப்பு | ஷரீக் தங்கியிருந்த கோவை விடுதிக்கு பூட்டு: போலீஸ் நடவடிக்கை
கோவை காந்திபுரத்தில் மங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷரீக் தங்கியிருந்த விடுதி
கோவை: மங்களுரு ஆட்டோ குண்டுவெடிப்பில் தொடர்புடைய முகமது ஷரீக் கோவையில் தங்கியிருந்த விடுதிக்கு பூட்டு போடப்பட்டது.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஓட்டுநர் மற்றும் ஆட்டோவில் பயணித்த ஷரீக் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய மங்களூரு போலீஸார், இது தீவிரவாத செயல் என்றும், ஷரீக் வீட்டில் நடத்தப் பட்ட சோதனையில் வெடிகுண்டு தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, என்.ஐ.ஏ அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 23-ம் தேதி கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே நடந்த கார் வெடிப்புச் சம்பவத்தில் ஜமேஷா முபின்(25) என்பவர் உயிரிழந்தார். இவரது வீட்டில் இருந்து வெடிமருந்து தயாரிக்க பயன்படும் வேதிப் பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார், ஜமேஷா முபின் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் என்பதையும் கண்டறிந்தனர்.

மங்களூருவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் சிவன் கோயில் உள்ளது. எனவே, கோயில்களை மையமாக வைத்து கோவை கார் வெடிப்புச் சம்பவம், மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்புச் சம்பவம் திட்டமிடப்பட்டதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக மாநகர காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘மாநகரில் இருந்து காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் மங்களூரு சென்றுள்ளனர்.

அதேபோல, மங்களூருவில் இருந்து காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குழுவினர் கோவைக்கு வந்துள்ளனர். இரு தரப்பினரும் தகவல்களை பரிமாறி கோவை, மங்களூரூ சம்பவங்களுக்கு தொடர்புள்ளதா என விசாரிக்கின்றனர். உயிரிழந்த ஜமேஷாமுபின் மற்றும் ஷரீக் முன்னரே சந்தித்துள்ளனரா, கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கும், ஷரீக்கிற்கும் தொடர்புள்ளதா, கோவைக்கு ஷரீக் வந்தபோது சந்தித்தனரா என்பது குறித்து விசாரணை நடக்கிறது’’ என்றனர்.

இதற்கிடையில், கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள மேன்ஷனில் (விடுதி) ஷரீக் 3 நாட்கள் தங்கியிருந்த தகவலை அறிந்த மாநகர போலீஸார் மேன்ஷனின் மேலாளர் மற்றும் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் ஷரீக் எப்போது வந்து தங்கினார், எத்தனை நாட்கள் தங்கியிருந்தார், அவருடன் தங்கியிருந்தவர்கள் யார், ஷரீக் அடிக்கடி வருவாரா, ஷரீக்கின் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன என்பன போன்ற தகவல்கள் குறித்து காட்டூர் போலீஸார் விசாரணை நடத்தினர்.

ஷரீக் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாலும், மங்களூர் போலீஸார், என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாலும், மேன்ஷனில் உள்ளவர்களை வெளியேறி வேறு மேன்ஷனில் சில நாட்கள் தங்கிக் கொள்ளுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து அங்கு தங்கியிருந்தவர்கள் தங்களது அறையை காலி செய்து விட்டு வெளியேறினர். மேன்ஷனுக்கு போலீஸார் தற்காலிகமாக பூட்டு போட்டனர். விசாரணை நடவடிக்கைகள் முடிந்த பின்னர், மீண்டும் மேன்ஷன் பயன்பாட்டுக்கு திறக்க அனுமதிக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

அல்கொய்தா ஆதரவாளர்கள் யார்? - கோவையில் ரகசிய விசாரணை: மங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷரீக், அல்-கொய்தா தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக ரகசியமாக இயங்கிவந்த ‘பேஸ் மூவ்மென்ட்’ என்ற அமைப்பில் உறுப்பினராக இருப்பதை போலீஸார் கண்டறிந்துள்ளனர். ஷரீக் கோவையில் தங்கிச் சென்றதையடுத்து, அந்த அமைப்பின் ஆதரவாளர்களும் கோவையில் இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனவே, அது தொடர்பான விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

காவல்துறையினர் கூறும்போது, ‘‘கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, கோவையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் இளைஞர்கள் குறித்து ரகசியமாக விசாரிக்கப்பட்டது. இதில் மாநகரில் 50 பேரும், புறநகரில் 3 பேரும் இருப்பது தெரியவந்தது. இவர்களில் சிலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

அந்த இளைஞர்களை கண்காணித்து வருவதோடு, அவர்களை அந்த எண்ணத்திலிருந்து மீட்டு நல்வழிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். இச்சூழலில், ‘பேஸ் மூவ்மென்ட்’ அமைப்பைச் சேர்ந்த ஷரீக் இங்கு ஏன் வர வேண்டும்? அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் கோவையில் உள்ளார்களா என ரகசியமாக விசாரிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

கருத்துகள் இல்லை: