மாலைமலர் : சென்னை: பொதுவாக தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசுப்பள்ளி மாணவர்களால் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என்கிற குறை நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இந்த குறையை போக்க சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில புலமையை அதிகரிக்கவும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் மொத்தம் உள்ள 281 மாநகராட்சி பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் 70 உள்ளது. 92 நடுநிலைப்பள்ளிகள் 119 ஆரம்ப பள்ளிகளும் உள்ளன.
இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில புலமையை அதிகரிக்க வகுப்பறையில் ஆங்கில ஆசிரியர் பாடம் எடுப்பதற்கு முன்பாக 2 மாணவ-மாணவிகள் 2 நிமிடம் ஆங்கிலத்தில் பேச சொல்ல வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இதற்காக மாணவ-மாணவிகள் நூலகத்திற்கு சென்று குறிப்பு எழுதி வந்து அதன்மூலம் பயிற்சி பெறுகின்றனர்.
இதன் அடுத்தக்கட்டமாக இப்போது வகுப்பு தொடங்குவதற்கு முன்பாக நடைபெறும் பிரேயரில் வாரம் ஒரு நாள் (புதன்கிழமை) யாராவது ஒருவர் ஆங்கிலத்தில் பேசி நடத்த வேண்டும். சுழற்சி முறையில் இந்த வாய்ப்பு வழங்கப்படும். இந்த பிரேயர் சுமார் 17 நிமிடங்கள் முதல் 18 நிமிடம் வரை நடைபெறும்.
இதில் திருக்குறளை தவிர மற்றவைகளை ஆங்கிலத்தில் பேசுவதற்காக மாணவ-மாணவிகள் தங்களை தயார்படுத்துவதால் ஆங்கில புலமையும் அதிகரிப்பதாக உதவி கல்வி அலுவலர் முனியன் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வழிகாட்டுதலின்படி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் ஆங்கில புலமையையும் அதிகரிக்க இந்த ஏற்பாடுகளை நடைமுறை படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆங்கில புலமை பயிற்சி முழுமையாக செயல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு பின்லாந்து நாட்டுக்கு மாநகராட்சி சார்பில் ஒரு குழுவினர் கல்வி சார்ந்த பயணம் மேற்கொண்டனர். அப்போது பின்லாந்து நாட்டு இந்திய தூதராக தமிழ்நாட்டை சேர்ந்த மாணிக்கம் என்பவர் இருந்தார்.
அவர் பள்ளிகளின் செயல்பாடுகள், ஆங்கிலத்தில் பாடங்களை சொல்லி கொடுக்கும் முறை, ஸ்மார்ட் வகுப்பறை போன்றவற்றை மாநகராட்சி குழுவினருக்கு எடுத்து கூறினார். அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆரம்பத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.
இதன்பிறகு ஏற்பட்ட படிப்படியான முன்னேற்றம் இன்று மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்தி வருகிறது என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக