செவ்வாய், 22 நவம்பர், 2022

தமிழறிஞர் அவ்வை நடராஜன் காலமானார்

nakkheeran.in தமிழகத்தின் மூத்த தமிழறிஞர்களில் ஒருவரான அவ்வை நடராஜன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் காலமானார். இவர் 1992ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்துள்ளார். மேலும் செம்மொழி தமிழ் உயராய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நெருங்கி நண்பரும் ஆவார். 

மின்னம்பலம் : christopher :  தமிழறிஞர் பத்மஸ்ரீ அவ்வை நடராசன் காலமானார்!
தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மூத்த இலக்கிய சொற்பொழிவாளராக அறியப்பட்டவர் தமிழறிஞர் அவ்வை நடராசன்.


முதிய வயதில் (85) ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு எனும் ஊரில் 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று பிறந்தவர் அவ்வை நடராசன்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் “சங்க காலப் புலமைச் செவ்வியர்” என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

பின்னர் தான் படித்த மதுரை தியாகராசர் கல்லூரி மற்றும் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார் அவ்வை நடராசன்.

எம்ஜிஆரை ஈர்த்த அவ்வை நடராசனின் தமிழ்!

அதன் பிறகு, டெல்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர் எனப் பணியாற்றினார். இவரது தமிழ்ப்புலமையால் ஈர்க்கப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் இவரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் துணை இயக்குநராக நியமித்தார்.

1984 முதல் 1992 வரை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறைச் செயலாளராகப் பணியாற்றினார். ஐஏஎஸ் அதிகாரியாக இல்லாமல் தமிழ்நாடு அரசுத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் அவ்வை நடராசன் ஒருவர்தான்.

அதன் பிறகு, 1992 முதல் 1995ம் ஆண்டுவரை தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பினை வகித்தார். அதன் பிறகு, 2014 ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவராக இருந்தார்.

2015 ஆம் ஆண்டு முதல் சென்னையிலுள்ள பாரத் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

பத்மஸ்ரீ விருது!

கேட்போரை லயிக்கவைக்கும் நடராசனின் தமிழ் சொற்பொழிவுகள் இலக்கியவாதிகள் மத்தியில் இன்றளவும் பாராட்டுகளை பெற்றுள்ளன.

மேலும் அவரது, சொற்பொழிவுகளில் இருந்து வாழ்விக்க வந்த வள்ளலார், பேரறிஞர் அண்ணா, கம்பர் காட்சி, கம்பர் விருந்து, திருப்பாவை விளக்கம், திருவெம்பாவை விளக்கம், அருளுக்கு ஔவை சொன்னது போன்றவை நூல்களாகவும் வெளிவந்துள்ளன.

தமிழுக்கு இவர் செய்த சேவையை பாராட்டி, இந்திய அரசின் சார்பில், பத்மஸ்ரீ விருதும், தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் இலங்கை கம்பர் கழகத்தில் சார்பில், “தன்னேரில்லாத தமிழ் மகன் விருது மற்றும் கம்பன் புகழ் விருது ஆகியவவை பெற்றுள்ளார்.

நாளை இறுதிச்சடங்கு!

இந்நிலையில் அவர் இன்று உயிரிழந்த செய்தியை அவரது மகன்கள் கண்ணன், பரதன், அருள் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அவர்களது பதிவில், ”எந்தையும் இலமே !ஆக்கமும் – ஊக்கமுமாக இருந்த எந்தையார் வையம் போற்றும் பத்மஸ்ரீ முனைவர் ஒளவை நடராசன் எங்களை தத்தளிக்க விட்டு இன்று (21-11-2022) வானில் கலந்தார் !

இனி என்ன செய்வோம்! எந்தையே ! நந்தா விளக்கனைய நாயகனே !! உங்கள் பிரிவு தாங்கொணாப் பிரிவாகும்… எப்பாரும் எப்பதமும் எங்ஙனமும் நாங்கள் சென்று உங்கள் திருப்பெயரை நவின்றே வளர்ந்தோம் – வளர்வோம் !

அப்பா – நாங்கள் கேட்டு அருள் புரிதல் வேண்டும்.” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் அவ்வை நடராசன் இறுதிச்சடங்கு சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நாளை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவரது மறைவுக்கு அரசியல் மற்றும் தமிழ் அறிஞர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை: