ஞாயிறு, 20 நவம்பர், 2022

சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளியே வந்தார்!


tamil.samayam.com :  நீதித்துறையில் ஊழல் நிறைந்து இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் இது தொடர்பாக சில யூடியூப் சேனல்களுக்கும் பேட்டியும் அளித்திருந்தார். இதையடுத்து, அவர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தனர். இதையடுத்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்ட அவர், கடலுார் சிறைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து, தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்தார்.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை விதித்த சிறைத் தண்டனை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. வழக்கு அடுத்த முறை விசாரணைக்கு வரும்வரை வழக்கு தொடர்பாக எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதித்து அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டது.

இதையடுத்து, அவர் சிறையில் இருந்து விடுதலையாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு காவல் துறையில் நிலுவையில் உள்ள 4 வழக்குகளில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அந்த வழக்குகள் கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டவை.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், 4 வழக்குகளில் இருந்தும் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. மேலும் வழக்கு குறித்து வெளியில் எங்கும் பேசக்கூடாது என்றும் எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. இதையடுத்து, கடலூர் சிறையில் இருந்து சவுக்கு சங்கர் நிபந்தனை ஜாமீனில் இன்று விடுவிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை: