செவ்வாய், 22 நவம்பர், 2022

தமிழ்நாடு பா.ஜ.கவில் - ஆபாச மிரட்டல் ஆடியோ கசிவு, சூர்யா சிவாவுக்கு தடை, காயத்ரி ரகுராம் இடைநீக்கம்

தமிழக பாஜகவில் களேபரம்

bbc.com  : தமிழக பா.ஜ.கவில் களேபரம்- ஆபாச மிரட்டல் ஆடியோ கசிவு, சூர்யா சிவாவுக்கு தடை, காயத்ரி ரகுராம் இடைநீக்கம் - BBC News தமிழ்
தன் கட்சியின் சக நிர்வாகியிடம் தொலைபேசியில் பா.ஜ.கவின் ஓ.பி.சி. பிரிவு செயலர் சூர்யா சிவா ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியானது. அந்த குரல் பதிவின் நம்பகத்தன்மையை பிபிசியால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.
இந்நிலையில், அவர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
காயத்ரி ரகுராமிடமிருந்து அனைத்துப் பொறுப்புகளும் பறிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.கவின் ஓ.பி.சி. பிரிவு மாநிலச் செயலராகச் செயல்பட்டுவருபவர் சூர்யா சிவா.


அதே கட்சியில் சிறுபான்மை பிரிவின் செயலராக இருப்பவர் டெய்சி சரண். இந்த இருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் என்று கூறப்படும் ஒலிப்பதிவு ஒன்று இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் வலம்வந்து கொண்டிருக்கிறது.   இந்த உரையாடலில், டெய்சி சரணிடமிருந்து குரல் பதிவு ஒன்று வெளியானதை அடுத்து அவரை அழைத்ததாகப் பேசுகிறார் சூர்யா சிவா. அதற்குப் பதிலளிக்கும் டெய்சி, தான் இப்போது நேரடியாகவே பேசுவதாகச் சொல்கிறார்.

இந்த உரையாடலில் சிவாவின் குரல் என்று கூறப்படும் குரலில் பேசுபவர் பல ஆபாசமான சொற்கள் மற்றும் வசைச்சொற்களை எதிர்முனையில் பேசும் டெய்சி சரண் என்று கூறப்படும் நபரிடம் பயன்படுத்தியுள்ளார்.

தமது ஓ.பி.சி அணியில் 68 சதவிகிதம் பேர் இருப்பதாகவும், தமது சாதிக்காரர்களை டெய்சி மீது ஏவி விடுவதாகவும், ஊருக்கு கிளம்ப முடியாது என்றும் மிரட்டும் தொணியில் சிவா என்று கூறப்படும் குரல் சொல்வதுடன், இந்த உரையாடலை பதிவு செய்து பத்திரிகையாளர்களிடம் கூடக் கொடுக்கலாம் என்கிறது.

வேறு ஒரு பாஜக நிர்வாகியுடன் டெய்சி சரணை இணைத்து ஆபாசமான கருத்துகளைத் தெரிவிப்பதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலான சில சொற்களையும் அந்த நபர் கூறுவதைக் கேட்க முடிகிறது.

டெய்ஸி சரண்

பட மூலாதாரம், Daisy Saran/Facebook

படக்குறிப்பு,

பாஜக சிறுபான்மை பிரிவின் மாநில செயலராக இருப்பவர் டெய்சி சரண்

ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்த சூர்யாவை எப்படி சிறுபான்மையினர் பிரிவில் எடுக்க முடியும் என்று கோபமாகக் கேட்கும் டெய்சி சரண் என்று கூறப்படும் குரல், சூர்யாவின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக சூர்யா கூறியவாறே அவதூறான ஆபாசச் சொற்களைப் பயன்படுத்தி விமர்சிக்கிறது.

ஒரு மாதத்துக்குள் சென்னையில் வாழ முடியாது என்றும், அண்ணாமலை, நரேந்திர மோதி, அமித் ஷா, ஜெ.பி. நட்டா என யாரிடம் வேண்டுமானாலும் புகார் சொல்லிக் கொள்ளலாம் என்று கூறும் சூர்யாவின் குரல் எனக் கூறப்படும் குரல், தாம் திமுகவிலேயே ரவுடிசம் செய்துவிட்டு வந்ததாகக் கூறுகிறது.

''நீ அனுபவிப்ப... இதுவரைக்கும் என்னை தம்பியாதான பார்த்திருக்க.. இனிமே எதிரியா பார்ப்ப,'' என்று சூர்யா என்று கூறப்படும் குரல் சொன்னதற்கு ''நான் எப்ப உன்னை தம்பியா பார்த்தேன்,'' என டெய்சி என்று கூறப்படும் குரல் எதிர்க்கேள்வி கேட்டது.

பட மூலாதாரம், Surya Siva/Twitter

இந்த உரையாடலை முன்வைத்து காலை முதல் சமூக வலைதளங்களில் பா.ஜ.க. மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, இந்த விவகாரத்தை விசாரிக்க மாநில துணைத் தலைவரும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவருமான கனகசபாபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்திருக்கிறார் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை.

மேலும், அந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்வரை, சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த விவகாரத்தை அடிப்படையாக வைத்து இந்த மோதல் வெடித்தது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

காயத்ரி ரகுராம் இடைநீக்கம்

பட மூலாதாரம், Gayathri Raguram/Twitter

இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக, தமிழ்நாடு பா.ஜ.கவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.

காயத்ரி ரகுராம் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் கட்சி மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்துவருகிறார்.

தன்னைக் கேலி செய்தோ, விமர்சித்தோ எழுதப்படும் ட்வீட்களுக்கு கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமான சிலர் விருப்பக் குறி இட்டதையடுத்து இந்த மோதல் ஆரம்பித்தது.

மேலும், "கடந்த இரண்டு ஆண்டுகளில் தான் பாஜக உருவானது போலவும் சித்தரிக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் தான் வளர்ச்சி அடைந்துள்ளது போலவும் பேசுகின்றனர். ஏன் இப்படி தவறான செய்தி அனுமதிக்கப்படுகிறது?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இன்று காலையில் டெய்சிக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் ஒன்றையும் அவர் பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பிறகு, அவர்கட்சியிலிருந்து இடை நீக்கம்செய்யப்பட்ட அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இந்த சம்பவம் குறித்துபேசுவதற்கு சூர்யா சிவாவிடம் பல முறை முயற்சித்தும், அது பலனளிக்கவில்லை.

கருத்துகள் இல்லை: