புதன், 22 ஜூன், 2022

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது- மனு தள்ளுபடி சென்னை நீதிமன்றம்!

 மாலை மலர்  : அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வருகிறார்.
எதிர் மனுதாரர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சென்னை: அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரான சி.பாலகிருஷ்ணன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எதிர் மனுதாரர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தது.


அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

அதேசமயம் பொதுக்குழு கூட்டம் நடத்துவது தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இதையும் படியுங்கள்: மண் காப்போம் இயக்கத்தின் அடுத்த கட்டமாக 21 நாடுகளுக்கு சத்குரு பயணம்! இதேபோல், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இன்று இரவு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை நடக்கிறது. இதில் ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு கடிதம் எழுதினார். ஆனால், இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

கருத்துகள் இல்லை: