வியாழன், 23 ஜூன், 2022

எடப்பாடியின் பொதுச்செயலாளர் கனவு தகர்ந்தது .. உயர்நீதிமன்ற தீர்ப்பால் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

Noorul Ahamed Jahaber Ali  -   Oneindia Tamil News  : சென்னை: அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்களை நிறைவேற்ற உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் ஓ.பன்னீர்செல்வம் வீடு முன் அவரது ஆதரவாளர்கள் இடிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை வானகரத்தில் இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விவாதிக்க மாவட்டச் செயலாளார்கள் கூட்டம் கடந்த சில நாட்கள் முன் அதிமுக தலைமையகத்தில் கூட்டப்பட்டது.
அப்போது ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் எழுந்ததால் ஓ.பி.எஸ் - இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம் செய்துகொண்டனர். அடுத்தடுத்த நாட்களில் இரு தரப்பினரும் கைகலப்பிலும் ஈடுபட்டனர்.

தொடர் ஆலோசனை
அதனை தொடர்ந்து நடைபெற்ற சர்ச்சைகளுக்கு பின்னர் இரு தலைவர்களையும் அவரவர் தரப்பு ஆதரவாளர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மூத்த நிர்வாகிகள் என பலர் எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

பொதுக்குழுவை தடுக்க முயற்சி
கடந்த 16 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஒற்றைத் தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம், இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்று கூறினார். மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே அதிகம் இருப்பதால் எப்படியாவது பொதுக்குழு கூட்டத்தை நடக்கவிடாமல் தடுத்துவிட வேண்டும் என்பதை மனதில் வைத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு காய் நகர்த்தி வந்தது.

ஓ.பி.எஸ். மனு
தற்போதைய சூழலில் அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கும் கடிதம் எழுதினார். ஆனால், அந்த கடிதம் தங்களுக்கு கிடைக்கவில்லை என இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் தொண்டர்கள் பொதுக்குழுவில் கலந்துகொள்ளக்கூடாது என்று ஓ.பி.எஸ் நேற்று கடிதம் எழுதினார்.

உயர்நீதிமன்றம் உத்தரவு
இதற்கிடையே அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. காரசாமாக நடந்த வாத பிரதிவாதங்களின் முடிவில் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கிறது.

மேல்முறையீடு
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவை நடத்த தடை விதிக்க முடியாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்திருக்கிறது. அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த இந்த மனு மீது நீதிபதிகள் துரைசாமி மற்றும் சந்திரமோகன் அமர்வு நள்ளிரவில் மனுவை விசாரித்தது.

நீதிபதி வீடு முன்போலீஸ் குவிப்பு
மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரிக்க தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியும் அனுமதி வழங்கினார். இதனை தொடர்ந்து நீதிபதி துரைசாமி வீட்டில் வழக்கு விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி சந்திரமோகன், இருதரப்பு வழக்கறிஞர்கள் சென்னை அண்ணாநகரில் உள்ள துரைசாமி வீட்டுக்கு வருகை தந்தனர்ர். வழக்கு விசாரணை காரணமாக துரைசாமி வீடு முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஓபிஎஸுக்கு ஆறுதல்
விடிய விடிய நடைபெற்ற விசாரணையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் காரசார வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், பொதுக்குழுவை நடத்தலாம் என்றும் 23 தீர்மானங்களை தவிர்த்து வேறு புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது எனவும் உத்தரவிட்டு உள்ளனர். இதன் காரணமாக ஒற்றைத் தலைமை தீர்மானம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படாது என்பதால் ஓபிஎஸ் தரப்பு ஆறுதல் அடைந்து இருக்கிறது.

விடிய விடிய விசாரணை
இன்று பொதுக்குழுவில் அதிமுக சார்பில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்களுக்கு நேற்று காலையிலேயே ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் வழங்கிவிட்டார். காரணம், அதில் ஒற்றைத் தலைமை குறித்த எந்த அம்சமும் இல்லை. அதே நேரம் பொதுக்குழு நடக்கும்போது சிறப்புத் தீர்மானமாக ஒற்றைத் தலைமை விவகாரம் கொண்டு வரப்படும் என அஞ்சியே ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றப்படி ஏறியது.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
தனி நீதிபதி அது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்காததால், மேல்முறையீடு செய்து விடிய விடிய வழக்கை நடத்திய ஓ.பன்னீர்செல்வத்துக்கு கைமேல் பலனாக வந்துள்ளது இந்த தீர்ப்பு. ஒற்றைத் தலைமை கனவோடு உறங்கச்சென்ற எடப்பாடி தரப்புக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்ததால் ஓ.பன்னீர்செல்வம் வீடு முன் அவரது ஆதரவாளர்கள் இடிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: