சனி, 25 ஜூன், 2022

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

மின்னம்பலம் : அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 23 ஆம் தேதி களேபரங்களுடன் முடிந்த நிலையில், அன்று இரவே டெல்லி புறப்பட்டுச் சென்றார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
கட்சியில் இருந்து பன்னீரை ஒதுக்கும் நடவடிக்கைகளை பொதுக்குழுவிலேயே தொடங்கிவிட்ட எடப்பாடி ஆதரவாளர்கள் அதை கட்சி நடவடிக்கைகளிலும் நேற்று தொடர்ந்தனர். விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இருந்து பன்னீரின் படங்கள், பெயர்களை அகற்றினர். மேலும் எடப்பாடி வீட்டு வாசலில் நேற்று நிருபர்களை சந்தித்த முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், “பொதுக்குழு உட்கட்சித் தேர்தல் தீர்மானங்களை ஏற்காததால் இப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டன” என்றார்.



இந்த நிலையில் நேற்று டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பிலான குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்பு மனு தாக்கலில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை திரும்புகிறார். அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக அவர் தேர்தல் ஆணையத்தை நாட இருப்பதாக தகவல்கள் வந்தன. அதற்காகவே அவர் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் டெல்லி சென்றார். ஆனால் நேற்று தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்,

“குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய கூட்டணி கட்சி சார்பில் கலந்து கொள்வதற்காக ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்றார். தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் செல்லவில்லை. அ.தி.மு.க. ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் தரப்பு நம்பிக்கை. மீண்டும் ஜெயலலிதா ஆசைப்படி அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். கட்சியில் ஒற்றுமை வேண்டும். கூட்டு தலைமை வேண்டும் என்பதே எங்களது நோக்கம்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே பன்னீரின் டெல்லி பயணம் குறித்து பாஜக டெல்லி வட்டாரத்தில் விசாரித்தபோது சில புதிய தகவல்கள் கிடைத்தன.

“அதிமுகவில் தற்போது பன்னீர்செல்வத்தின் பலம் என்ன என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அவருடைய தீவிர ஆதரவாளர்கள் ஒரு சிலரைத் தவிர மற்ற மிகப் பெரும்பாலானோர் எடப்பாடி பக்கம் இருக்கிறார்கள். இந்த நிலையில் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட்டு பன்னீரின் பின்னால் நிற்பதை பாஜக சரியான நடவடிக்கையாக கருதவில்லை. ஆனால் பன்னீர்செல்வத்தை விட்டுக் கொடுக்கவும் பாஜக விரும்பவில்லை. பாஜக தலைமையுடன் நல்ல தொடர்பிலும் இணக்கத்தோடும் இருக்கிறார் பன்னீர் செல்வம்.

இந்த நிலையில் அவரை அரசியல் ரீதியாக அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல விரும்புகிறது பாஜக மேலிடம். விரைவில் மாநில ஆளுநர்கள் மாற்றப்பட்டும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவும் இருக்கிறார்கள். அந்த வகையில் நீண்ட கால அரசியல் அனுபவம் மிக்க ஓ.பன்னீர்செல்வத்தை ஏதேனும் ஒரு மாநில ஆளுநராக நியமிக்க பாஜக தலைமை விரும்புகிறது. இதற்காக பன்னீர்செல்வத்திடமும் அவர்கள் பேசியிருக்கிறார்கள். பன்னீர்செல்வத்தின் மகனும் தற்போதைய ஒரே அதிமுக மக்களவை எம்.பி.யுமான ரவீந்திரநாத் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர வேண்டும் என்பதுதான் இதற்கு பாஜக விதிக்கும் நிபந்தனை. இதை ஏற்றால் அரசியலில் இருந்து முழுமையாக விலக வேண்டிய சூழலுக்கு பன்னீர் செல்வம் தள்ளப்படுவார். அப்படி ஒரு மூவ் நடந்தால் எடப்பாடி தரப்புக்கும் அது மகிழ்ச்சியாக இருக்கும்” என்கிறார்கள்.

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான பிசியில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் இருப்பதால்

தனியாக சந்தித்து பேசும் வாய்ப்பு பன்னீருக்கு கிடைக்கவில்லை. இந்த சூழலில், இன்று டெல்லியில் இருந்து திரும்பி சென்னையில் மீண்டும் தனது ஆதரவாளர்களோடு ஆலோசனையைத் தொடர்கிறார் பன்னீர் செல்வம். அதிமுக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் கட்சியில் தனது பிடிமானத்தை முழுமையாக விட்டுவிட்டு பாஜகவின் விருப்பத்தின்படி, ஆளுநராக பன்னீர்செல்வம் சம்மதிப்பாரா, இன்னமும் அவரோடு இருக்கும் பன்னீரின் ஆதரவாளர்கள் இதை ஏற்பார்களா என பல கேள்விகள் எழுகின்றன.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: