புதன், 23 பிப்ரவரி, 2022

வடமாவட்டங்களில் திமுகவின் வெற்றி.. பாமக சரிந்தது எப்படி?

  Shyamsundar -  Oneindia Tamil : s தருமபுரி: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. முக்கியமாக வடக்கு மாவட்டங்களில் திமுக நல்ல வெற்றியை பெற்று இருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளி வந்தன.
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணிதான் கைப்பற்றி உள்ளது. அதேபோல் நகராட்சி வார்டுகள், பேரூராட்சி வார்டுகளிலும் திமுகதான் பெரும்பான்மை பெற்றுள்ளது.
 952 மாநகராட்சி வார்டுகளை திமுக வென்றுள்ளது.
2360 நகராட்சி வார்டுகளை திமுக கைப்பற்றி உள்ளது.
அதேபோல் 4388 பேரூராட்சி வார்டுகளை திமுக மொத்தமாக கைப்பற்றி வென்றுள்ளது.
வட மாவட்டங்களில் வெற்றி விவரம்
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர் உள்ளடங்கிய வடமாவட்டங்கள் அனைத்திலும் திமுகதான் வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி அரியலூர் - நகராட்சி வார்டுகளில் திமுக 17, அதிமுக 11. பேரூராட்சி வார்டுகளில் திமுக 14, அதிமுக 1.


கள்ளக்குறிச்சியில் - நகராட்சி வார்டுகளில் திமுக 51 , அதிமுக 14. பேரூராட்சி வார்டுகளில் திமுக 61, அதிமுக 10. காஞ்சிபுரம் - மாநகராட்சி வார்டுகளில் திமுக 31, அதிமுக 9, நகராட்சி வார்டுகளில் திமுக 36, அதிமுக 11. பேரூராட்சி வார்டுகளில் திமுக 30, அதிமுக 11.

தருமபுரி - நகராட்சி வார்டுகளில் திமுக 18, அதிமுக 13. பேரூராட்சி வார்டுகளில் திமுக 102, அதிமுக 21. திருவண்ணாமலை - நகராட்சி வார்டுகளில் திமுக 69, அதிமுக 27. பேரூராட்சி வார்டுகளில் திமுக 85, அதிமுக 31. வேலூர் - மாநகராட்சி வார்டுகளில் திமுக 44, அதிமுக 7, நகராட்சி வார்டுகளில் திமுக 36, அதிமுக 10. பேரூராட்சி வார்டுகளில் திமுக 44, அதிமுக 10.
விழுப்புரம் - நகராட்சி வார்டுகளில் திமுக 64, அதிமுக 14. பேரூராட்சி வார்டுகளில் திமுக 66, அதிமுக 19. இப்படி மொத்தமாக வட மாவட்டங்களை திமுக ஸ்வீப் செய்துள்ளது.

முக்கியமாக தர்மபுரியில் திமுக மிக சிறப்பாக வெற்றியை பெற்றுள்ளது. தர்மபுரியில் திமுக எம்பி செந்தில் குமார் உள்ள நிலையில் அங்கு எம்எல்ஏக்கள் யாரும் இல்லை. பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய தொகுதிகளில் அதிமுக கூட்டணிதான் வெற்றிபெற்றது. இப்படிப்பட்ட நிலையில்தான் அங்கு திமுக இந்த முறை மொத்தமாக நகராட்சி மற்றும் பேரூராட்சி இரண்டையும் ஸ்வீப் செய்துள்ளது.

சட்டசபை தேர்தலில் தர்மபுரியில் மட்டும் திமுக பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. மற்றபடி வன்னியர்கள் அதிகம் உள்ள வடமாவட்டங்களில் நன்றாகவே செயல்பட்டது. இந்த முறை தர்மபுரியும் சேர்த்து வடமாவட்டங்களில் திமுக சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. பாமக + அதிமுக கூட்டணியில் இல்லாதது திமுகவிற்கு பெரிய அளவில் உதவியாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இடஒதுக்கீடு வேலை செய்யவில்லை இடஒதுக்கீடு வேலை செய்யவில்லை மொத்தமாக வடமாவட்டங்களில் பாமக காணாமல் போய் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பாமக தனித்து போட்டியிட்டு 7603 பேரூராட்சி வார்டுகளில் 73ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 3842 நகராட்சி வார்டுகளில் 48ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
1373 மாநகராட்சி வார்டுகளில் 5ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பாமகவுக்கு செல்ல வேண்டிய வன்னியர் வாக்குகள் எல்லாம் தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அப்படியே திமுக பக்கம் வந்துள்ளது.

லோக்சபா தேர்தலில் கிடைத்த வன்னியர் ஆதரவு திமுகவிற்கு தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் ஒன் இந்தியா தமிழுக்கு தருமபுரி வெற்றி குறித்து பேசிய திமுக எம்பி செந்தில் குமார், 20 ஆண்டுகளுக்கு பிறகு தர்மபுரியை திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது.

இது பெரிய சாதனை. சட்டசபை தேர்தலில் தவறவிட்டதை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிடித்துள்ளது. தேர்தலில் வேட்பாளர் முக்கியம். வென்றது எப்படி வென்றது எப்படி அதேபோல் எதிர்க்கட்சிகளின் கூட்டணி முக்கியம். தருமபுரி கொஞ்சம் வித்தியாசமான மாவட்டம். இங்கு தேர்தல் கணக்குகள் அடிக்கடி மாறும். அதிமுக தனித்து நின்றால் ஒரு மாதிரியும், பாமக கூட்டணியோடு நின்றால் ஒரு மாதிரியும் முடிவுகள் வரும். திமுகவின் இந்த வெற்றிக்கு தலைவர் ஸ்டாலின்தான் முழு காரணம்.முதல்வரின் செயல்பாட்டிற்கு கிடைத்த வெற்றி இது. தலைவரை தவிர இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை, என்று செந்தில் குமார் எம்பி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: