சனி, 26 பிப்ரவரி, 2022

ரஷ்ய சரக்கு கப்பலைச் சிறைபிடித்த பிரான்ஸ்!

 நக்கீரன் செய்திப்பிரிவு : ரஷ்யா, உக்ரைன் மீது மூன்றாவது நாளாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
உக்ரைன் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டும், தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன. இந்தச்சூழலில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. கடலிருந்தும், வான்வெளியாகவும் ஏவுகணைகளை ஏவி தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் ரஷ்யா, கீவில் உள்ள கீவ் நீர்மின் நிலையத்தையும், மெலிடோபோல் நகரையும் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் 8 உக்ரைன் போர் கப்பல்களையும் அழித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.



இந்தநிலையில் உக்ரைன் இராணுவம், ரஷ்யாவின் 14விமானங்கள், 8 ஹெலிகாப்டர்கள், 102 டாங்கிகள், 536 கவச வாகனங்கள், 15 பீரங்கிகளை அழித்துள்ளதாகவும், 3500 ரஷ்ய வீரர்களை கொன்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் படையெடுப்பில் இதுவரை 198 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ரஷ்யாவோ, பொதுமக்கள் இறப்பதை தவிர்க்க சத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறியுள்ளது.

இந்த நிலையில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ஆங்கில கால்வாய் வழியாக சென்ற ரஷ்ய சரக்கு கப்பலை பிரான்ஸ் நாடு சிறைபிடித்துள்ளது. அண்மையில் ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார தடைகள் விதித்த நிலையில், தடைகளுக்கு உள்ளான நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த கப்பல் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய கப்பல் சிறை பிடிக்கப்பட்டிருப்பது தொடர்பாக பிரான்ஸிடம், அந்நாட்டிலுள்ள ரஷ்ய தூதரகம் விளக்கம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

கருத்துகள் இல்லை: