வியாழன், 24 பிப்ரவரி, 2022

புலிகள் காப்பகம் எனும் பெயரில் முடக்கப்படும் பர்கூர் மலைப்பகுதி மக்கள்!

வினவு : சிறை பிடிக்கப்பட்டதுபோல் நகர முடியாமல் முடங்கிக் கிடக்கிறது 85 பழங்குடி மற்றும் 120-க்கும் மேற்பட்ட வனக்குடி கிராமங்கள். நீதிமன்றத்தின் உத்தரவால் கிட்டத்தட்ட 1 இலட்சம் மக்களின் வாழ்க்கை ஸ்தம்பித்து போய்விட்டது. வாழ்க்கை பறிபோய்க் கொண்டிருப்பதை தடுக்க கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டியத் தமிழ்ச்சமூகம் தூங்கிகொண்டிருக்கிறது.
சத்தியமங்கலம் வழியாக பெங்களூரு செல்லும் திம்மம் சாலையை வன விலங்குகள் பாதிக்கப்படுகின்றன என்று சொல்லி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரைக்கும் வாகனங்கள் செல்லக்கூடாதென முடக்கியதால்தான் இவ்வளவு விபரீதமும். 

இந்த வழியை பயன்படுத்திதான் மேலே சொன்ன நூற்றுக்கணக்கான கிராம மக்கள் தங்களுடைய காய்கறிகள் மற்றும் மலர் உள்ளிட்ட விளைபொருட்களை மேட்டுப்பாளையம் சந்தைக்கு கொண்டுவர வேண்டும். கோவையின் இயந்திர பாகங்களும் உற்பத்தியும் கூட இப்பாதையில்தான் கருநாடகத்திற்கு சென்றாக வேண்டும். பழங்குடி மற்றும் வனக்குடி மக்கள் அனைவரும் மருத்துவம் பார்ப்பது முதல் நிர்வாக தேவைகளுக்காக இவ்வழியில்தான் சத்தியமங்கலம் வந்தாக வேண்டும். எதைப்பற்றியும் கவலையில்லாமல், மாற்று பாதையும் இல்லாமல் முடக்கியிருக்கிறது அரசாங்கம்.

இனிமேல் அம்மக்களுக்கு இரவில் உடல்நலக்கேடு வரக்கூடாது; இரவில் காவல்துறை உள்ளிட்டவைகளின் அவசியம் ஏற்படக்கூடாது; வெளியூர்களில் வசிக்கும் அவர்களது பிள்ளைகளுக்கு, உறவுகளுக்கு எந்த அவசரமும் இரவில் உருவாகிடக் கூடாது. எல்லாம் பகலிலே ஆட்சியாளர்கள் அனுமதிக்கும் நேரத்திலேதான் நடக்க வேண்டும்.

பகலிலே நடந்தால் மட்டும் என்ன பிடுங்க முடியும்? மாலை முதல் அடுத்த நாள் காலை வரை முடக்கப்பட்ட வாகனங்கள் பன்னாரி செக்போஸ்டிலிருந்து இந்த பக்கம் பல கிலோமீட்டருக்கு அணிவகுத்து நிற்கும். அதுபோல் அந்தப் பக்கம் காரப்பள்ளம் செக்போஸ்டிலிருந்து பல கிலோமீட்டருக்கு வாகனங்கள் காத்துநிற்கும். பயண நேரம் தொடங்கியதும் ஒன்றையொன்று முந்தி செல்ல எதிரும் புதிருமாக வாகனங்கள் எத்தனிக்கும். அந்த போராட்டத்தில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும். 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட அந்த தரமற்ற சாலையில் இயல்பாகவே வாகனங்கள் பழுதாகும். அப்படி ஆகிவிட்டால் அதோகதிதான். அதற்கு மேல் எதுவும் நகராது. உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவரை ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியாது. இப்படித்தான் முட்டாள்த்தனமான உத்தரவால் இப்போது இரவும் பகலும் போக்குவரத்து முடக்கப்பட்டு இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக ஆக்கப்பட்டுள்ளது.
ஏன் பாதையை அடைத்து மக்களின் வாழ்க்கையை பறிக்கிறார்கள்? இது புலிகள் காப்பகம் அமைந்துள்ளப் பகுதி. புலிகள் காப்பகத்தில் மக்கள் வாழக்கூடாது என்பது அரசின் கொள்கை. அப்படி வெளியேற்றுவதற்கு அவர்கள் சொல்லும் பல காரணங்களில் ஒன்றுதான், கடந்த பத்தாண்டுகளில் அதாவது 3650 நாட்களில் வாகன விபத்தால் 152 மயில் உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழந்துள்ளனவாம்! அதாவது 24 நாட்களுக்கு ஒரு விலங்கு விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்த கணக்கின் அபத்தங்களை எல்லாம் பார்ப்பதற்கு முன்னால், இந்த பிரச்சனையில் மக்களோடு நிற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியரான தோழர் மோகன்குமார், “மனிதரற்ற காடுகள் மற்றும் புலிகள் காப்பகம்” என்னும் ஏமாற்றை குறித்து கூறுவதை கேட்டுப்பாருங்கள் ஆளும்வர்க்கத்தின் மோசடி உங்களுக்கு எளிதாக விளங்கும்.
அவர் சொல்கிறார், “உலக அளவில் புலிகளின் எண்ணிக்கை வெறும் 4 ஆயிரம் மட்டுமே. அதில் 70% (2967 என்று ஒரு கணக்கு சொல்கிறது) புலிகள் இந்தியாவில்தான் உள்ளன. அமேசான் உள்ளிட்ட உலகில் செழித்த காடுகள் பலவற்றில் புலிகளே கிடையாது. ஆகையால் புலிகள் அழிந்துவிட்டால் காடுகள் அழிந்துவிடும் என்பது மிகப்பெரிய பொய். அடுத்த விசயம் என்னவென்றால், புலிகள் காப்பகம் வந்ததனால் புலிகள் உருவாகவில்லை, ஏற்கனவே காலாகாலமாக புலிகள் வாழும் இடத்தைதான் புலிகள் காப்பகமாக அறிவித்தார்கள். புலிகள் செழிப்பாக வாழ்ந்த இடங்கள் அனைத்திலும் அவர்களோடு மனிதர்களும் சேர்ந்தே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இருவருக்கும் தங்களது இருத்தலை ஒழுங்குபடுத்தும் அறிவு அவர்களது நீண்டகால வாழ்க்கை அனுபவத்திலிருக்கிறது. ஆகையால் புலிகளால் மனிதர்களும் அழியவில்லை; மனிதர்களால் புலிகளும் அழியவில்லை.
எனவே, இந்த “மனிதரற்ற காடுகள் மற்றும் புலிகள் காப்பகம்” என்பது காட்டின் மூலமாக கொள்ளையடிப்பவர்களின், கொள்ளையடிக்க நினைப்பவர்களின் புனைகதை. அதை ஏதோ பெரிய சங்கதியாக தூக்கித்திரிகிறார்கள் காசுக்கு மாரடிக்கும் என்.ஜி.ஓ-க்கள். இந்த களவாணிகள்தான் பழங்குடி மற்றும் வணக்குடிகளின் வாழ்க்கையை அழிக்கிறார்கள்”.
தோழர் சொல்வது உண்மைதான் என்பதை நிரூபிக்கிறார்கள் இரண்டு வழக்குரைஞர்கள். அவர்கள்தான் “வாகனங்களால் வனவிலங்குகளின் உயிர் போகிறது” என்று பொய் புள்ளி விபரங்களை காட்டி போக்குவரத்தை முடக்க காரணமாக இருந்தவர்கள். இரண்டு கைக்கூலிகள் மக்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள். மக்களுக்கான இயக்கங்களும் சமூக அக்கறையுடைய நாமும் என்ன செய்யப்போகிறோம்? என்கிற கேள்வியோடு உங்களை இந்த பதிவில் இணைக்கிறேன். இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு குரல்கொடுங்கள். விருப்பமில்லாதவர்கள் விடுவித்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து பேசுவேன்.

கருத்துகள் இல்லை: