திங்கள், 21 பிப்ரவரி, 2022

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு - கைது செய்யப்படுவார்?

 மின்னம்பலம் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்ததற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுகவினர் கள்ள ஓட்டுப் போட்டதாக அதிமுக குற்றம்சாட்டியது.
சென்னை ராயபுரம் பகுதியில் திமுகவினர் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியதாக அன்றைய தினம் மாலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாலை மறியலில் ஈடுபட்டார். அதற்கு முன்னதாக ஜெயக்குமார் தலைமையிலான வழக்கறிஞர்கள் குழு கள்ள ஓட்டுப் போட்டதாக ஒருவரைப் பிடித்து வைத்துக்கொண்டு அவரை தாக்க முயன்றனர்.

ஆனால் ஜெயக்குமார், அடிக்காதீங்க என்று அதிமுகவினரைத் தடுத்துவிட்டு சட்டையைக் கழட்ரா என்று அந்த நபரை நோக்கி சத்தம் போட்டார்.

இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்த சூழலில் திமுகவைச் சேர்ந்தவரை தாக்கியதாக ஜெயக்குமார் உட்பட 40க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது சட்டவிரோதமாகக் கூடி கலகம் செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதிய மடலிலும் குறிப்பிட்டுள்ளார். அதில், “முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் சட்டத்தைத் தன் கையிலே எடுத்துக்கொண்டு, தி.மு.கழக நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்தியிருக்கிறார். கழகம் இதனைச் சட்டரீதியாக நிச்சயம் எதிர்கொள்ளும். அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள் என்பது நிச்சயம். சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று கூறியுள்ளார்.

இதற்குக் கண்டனம் தெரிவித்து, சேலம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. முதல்வரே குற்றவாளிகளுக்குத் துணை போவது வேடிக்கையாக உள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரைச் சட்ட ரீதியாக எதையும் சந்திக்கத் தயாராக உள்ளோம்.

குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுத்தது தவறா?. குற்றவாளியைக் கண்டுபிடித்துக் கொடுத்ததற்கு முதல்வர் கொடுத்த பரிசு தான் வழக்குப்பதிவு செய்திருப்பது” என்றார்.

இந்தசூழலில், ‘இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவின் மேற்பார்வையில் உள்ள ராயபுரம் பகுதியில், ஜெயக்குமார், சட்டத்தைக் கையில் எடுத்துச் செயல்பட்டிருக்கிறார். எனவே வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு ஜெயக்குமார் கைது செய்யப்படலாம்’ என சேகர்பாபு ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள்.

-பிரியா

கருத்துகள் இல்லை: