செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மனைவி மகன் பேட்டி . கைதின் போது நடந்தது என்ன?

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது, வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் வாக்களிக்கச் சென்ற ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அ.தி.மு.க.வினர் தாக்கியதாக, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வைச் சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


அதன் தொடர்ச்சியாக, சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, காவல்துறையினர் அதிரடி கைது செய்துள்ளனர். மேலும், அவரை எழும்பூர் நீதிமன்ற நீதிபதியின் இல்லத்திற்கு நேரில் அழைத்து சென்று ஆஜர்ப்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்தபோது நடந்தது என்ன என்பது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மனைவி, "கள்ள ஓட்டு போட்டவரைத் தடுத்தது தவறா? எங்கு கொண்டு சென்று என்ன செய்யப் போகிறார்கள் என பயமாக இருக்கிறது. சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை, வீட்டிற்குள் வந்த 30- க்கும் மேற்பட்ட போலீசார் இழுத்துச் சென்றனர். வெளியே நிறைய போலீசார் இருந்தனர்" என்றார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன், " பழி வாங்க வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எனது தந்தை ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். தனது தந்தையை போலீசார் எங்கு அழைத்துச் சென்றார்கள் என்பதே தெரியவில்லை. முன்னாள் அமைச்சருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? ஆளும் தி.மு.க. அரசிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தி.மு.க.விற்கு துளியளவும் இல்லை" என்று குற்றம் சாட்டினார்.

இதனிடையே, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்வது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: