வியாழன், 24 பிப்ரவரி, 2022

கூட்டணிக் கட்சிகளுக்கு மேயர் உண்டா? திமுகவில் அடுத்த சலசலப்பு!

 மின்னம்பலம் : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்து திமுக கூட்டணி பெரு வெற்றி பெற்றிருக்கிறது. அதிலும் திமுக மிகப் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி தமிழக நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தை முழுமையாக தன் கைக்குள் கொண்டு வந்திருக்கிறது.
வெற்றி பெற்ற ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியையும் அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் அடுத்தகட்டமாக மேயர், துணை மேயர் மற்றும் நகராட்சி - பேரூராட்சிகளுக்கான தலைவர் - துணைத் தலைவர் பதவிகளை குறிவைத்து ரேஸ் தொடங்கிவிட்டது.
குறிப்பாக கூட்டணிக் கட்சியினருக்கு இவற்றில் என்ன பதவி கிடைக்கும் என்ற கேள்வி திமுக கூட்டணிக்குள் இயல்பாகவே எழுந்திருக்கிறது.


தேர்தலுக்கு முன்பு கூட்டணி கட்சியினருக்கு அதிக இடங்கள் கிடைக்காதவாறு முடிந்தவரை பார்த்துக்கொண்ட திமுக நிர்வாகிகள், தற்போது வெற்றிபெற்ற கூட்டணி கட்சி கவுன்சிலர்களுக்கு முக்கிய பதவிகள் சென்று விடக்கூடாது என்பதிலும், அந்த பதவிகள் தங்களுக்கே கிடைக்க வேண்டும் என்பதிலும் தீவிரமாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவரிடம் இதுகுறித்து கேட்டோம்.

“தேர்தலுக்கு முன் கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவதிலேயே திமுக மிக தந்திரமாக செயல்பட்டிருக்கிறது. ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் காங்கிரஸ் கட்சி மேயர் பதவியை வகித்து இருக்கிறது.

ஆனால், இந்த முறை மேயர் பதவியை எதிர்பார்க்காதீர்கள் என்று காங்கிரஸிடம் திமுக மாவட்டச் செயலாளர்களே தெளிவாகக் கூறிவிட்டார்கள். மேயர் எல்லாம் எங்களுக்கு... துணை மேயர், மண்டல தலைவர்கள் பதவிகளுக்கு மட்டும் நீங்கள் கேளுங்கள்... பரிசீலிக்கிறோம் என்று திமுக மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் காங்கிரஸ் கட்சியினரிடம் நேரடியாகவே கூறி வருகிறார்கள்.

மேலும் குறிப்பிட்ட மாநகராட்சிகளில் மேயர் ஒதுக்கீடு யாருக்கு (இட ஒதுக்கீடு) என்பதன் அடிப்படையில் அதைக் கேட்க முடியாத அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு கவுன்சிலர்கள் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அப்படியே மேயர் பதவியைக் கோரும் அளவுக்கு போட்டியிட்டு இருந்தாலும் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள்.

காங்கிரஸ் கட்சியில் திருச்சியில் ஐந்து பேர் போட்டியிட்டு ஐந்து பேரும் ஜெயித்து விட்டார்கள். கோவை மாநகராட்சியில் ஒன்பது பேர் போட்டியிட்டு ஒன்பது பேரும் ஜெயித்து விட்டார்கள். ஆவடி மாநகராட்சியில் மூன்று பேர் போட்டியிட்டு மூன்று பேரும்வெற்றி பெற்று விட்டார்கள்.

மேயர் பதவியை எடுத்த எடுப்பிலேயே திமுக தனக்கானதாக எடுத்து வைத்துக்கொண்டு விட்ட நிலையில் இப்படி முழு வெற்றி பெற்ற மாநகராட்சிகளில் துணை மேயர் பதவியை காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது.

திருச்சி மாநகராட்சியில் தனது ஆதரவாளரான சுஜாதாவுக்கு துணை மேயர் பதவியை சிதம்பரம் கேட்கிறார். இதேபோல கோவை மாநகராட்சியில் அழகு ஜெயபாலுக்கு துணை மேயர் பதவியை கே.எஸ்.அழகிரி வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார். ஆவடி மாநகராட்சியில் விவசாய பிரிவு மாநிலத் தலைவர் பவன் குமாரின் மகனுக்கு துணை மேயர் பதவியை கேட்டு தீவிர முயற்சி நடக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கே இந்த நிலைமை என்றால் திமுகவின் மற்ற கூட்டணிக் கட்சிகளின் நிலையை எண்ணிப்பாருங்கள்" என்கிறார் சென்னை, ஆவடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் களப்பணி ஆற்றிய அந்த காங்கிரஸ் மாநில நிர்வாகி.

மறைமுகத் தேர்தலில் மேயர், துணை மேயர், நகராட்சி - பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் பதவிகள் மற்றும் மண்டலத் தலைவர்கள் பதவிகளை கூட்டணி கட்சியினருக்கு பகிர்வது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு குழு அமைத்திருக்கிறார். அந்தக் குழு விரைவில் தனது பணியைத் தொடங்கும்" என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.

ஆனால், ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளிடம் இன்முகம் காட்டினாலும் மாவட்டச் செயலாளர்கள் இரும்பு முகம் காட்டி திமுகவின் விஸ்வரூபத்தை ஆங்காங்கே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் கூட்டணிக் கட்சியினரின் வெளியில் சொல்ல முடியாத வேதனையாக இருக்கிறது.

- வேந்தன்

கருத்துகள் இல்லை: