வெள்ளி, 9 ஏப்ரல், 2021

ஷீர்டி சாயிபாபா சிலையை காவி வெறியர்கள் இடித்து அடாவடி சாயிபாபா முஸ்லிமாம்

.vinavu.com : இந்துமத பக்தர்கள் அனைவரையும் அதிரச் செய்த ஒரு காணொலிக் காட்சி மார்ச் 28-ம் தேதி சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. அந்தக் காணொலியில், ஒரு கோவிலில் உள்ள ‘சீரடி’ சாய்பாபா சிலையை கடப்பாரையைக் கொண்டு ஒருவர் தகர்த்துக் கொண்டிருக்கிறார். உடன் நிற்கும் மற்றொரு நடுத்தர வயது நபரோ அந்த நடவடிக்கைக்கு வழிகாட்டுதல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அருகில் உள்ள ‘பெரிய மனிதர்கள்’ பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நடுத்தர வயது நபர் அந்தக் காணொலியில், “சாய்பாபா கடவுள் அல்ல. அவர் ஒரு முஸ்லீம். அவர் 1918-ல் இறந்துவிட்டார்” என்று கூறுகிறார்.

மற்றொரு காணொலியில் இதே நபர், காசியாபாத்தைச் சேர்ந்த யதி நரசிங்கானந்த் சரஸ்வதி என்ற இந்து சாமியாருடன் அமர்ந்திருக்கிறார். அந்தச் சாமியார் அந்தக் காணொலியில் சாய்பாபாவின் சிலையை உடைத்து தூக்கியெறிந்ததற்காக அதே நடுத்தவயது நபரைப் பாராட்டுகிறார். சாய்பாபாவை “ஏமாற்றுக்கார சாய்” என்று அழைக்கும் இந்தச் சாமியார், “என் வழியில் விட்டிருந்தால் நான் சாய்பாபா போன்ற ஜிகாதிகளை கோவிலுக்குள்ளேயே அனுமதித்திருக்க மாட்டேன்” என்று குறிப்பிடுகிறார்.

இந்தக் காணொலிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாகச் சென்றதை ஒட்டி, ஸ்க்ரால் (Scroll) இணையதளம், எந்தக் கோவிலில் இது நடந்தது என்பதைக் கண்டறிந்து அப்பகுதிக்குச் சென்று இது குறித்து விசாரித்து கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

இடித்து உடைக்கப்படும் சாய்பாபா சிலை

தெற்கு டெல்லியைச் சேர்ந்த ஷாப்பூர் ஜத் எனும் இடத்தில் கோவிலுக்குள் இருந்த சாய்பாபா சிலைதான் உடைக்கப்பட்டிருக்கிறது. சாய்பாபா சிலை உடைக்கப்பட்டு அந்த இடத்தில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார் அந்த செய்தியாளர். இது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்த பத்திரிகையாளருக்கு இதன் பின்னணி குறித்த வேறு சில தகவல்கள் கிடைத்துள்ளன.

சிலை உடைப்பின் போது அருகில் இருந்து வழிகாட்டுதல் கொடுத்துவிட்டு, சிலையை இடித்த பின்னர், சாமியார் யதி நரசிங்கானந்த் சரஸ்வதியைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற அந்த நடுத்தரவயது நபரின் பெயர் பதம் பன்வார்.

பதம் பன்வார் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர். இவரிடம் ஸ்க்ரால் இணையதளம் சாய்பாபா சிலை உடைப்பு பற்றி விசாரித்த போது அந்த வீடியோ போலியானது என்று கூறிவிட்டு, பின்னர் சிலை ஏற்கெனவே உடைந்திருந்ததால் அதனை எடுப்பதற்காகவே உடைத்ததாக முரணாகக் கூறியிருக்கிறார்.

ஆனால் இது குறித்து சாமியார் யதி நரசிங்கானந்த் சரஸ்வதியிடம் ஸ்க்ரால் பத்திரிகையாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, “அவரது (சாய்பாபா) உண்மையான பெயர் சந்த்கான். அவர் ஒரு ஜிகாதி. அவர் ஒரு ஒழுங்கற்றக் கொள்ளைக்காரன். நமது இந்துக்களின் முட்டாள்தனம் காரணமாக அவர் நமது கோவில்களில் இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு திமிர்த்தனமாகப் பேசும் இந்தச் சாமியார் சமீபத்தில் மற்றொரு பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர். சமீபத்தில் ஒரு இந்துக் கோவிலுக்குள் தண்ணீர் குடிக்கச் சென்ற முசுலீம் சிறுவனை, இந்துத்துவக் கிரிமினல்கள் அடித்த சம்பவத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட சாமியார் இவர்.

இந்த இடிப்புச் சம்பவம் அந்தக் கோவிலின் தர்மகர்த்தாக்களின் சம்மதத்தோடுதான் நடந்திருக்கிறது. இது குறித்து அந்தக் கோவிலின் தலைமைப் பூசாரியிடம் கேட்ட போது, விரிசல் விழுந்து உடையும் நிலையில் இருந்ததால்தான் சாய்பாபா சிலை அகற்றப்பட்டதாகவும், சாய்பாபா சிலையை வேறு எதற்காகவும் உடைக்கவில்லை என்றும் தெரிவித்திருகிறார்.

 

அந்தப் பகுதி மக்கள் பலரும் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எதிர்ப்புத் தெரிவித்தவர்களிடம் பதம்பன்வார் போன்ற செல்வாக்கானவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறி வாயடைக்கச் செய்திருக்கிறார் கோவிலின் தலைமைப் பூசாரி.

சாய்பாபா சிலை இடிக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் பலரும் அதிருப்தியாக இருக்கின்றனர். ஆனால் கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த அனைவரும் ஒத்த குரலில், சிலை இடிக்கப்பட்டதற்குக் காரணமாக சிலை ஏற்கெனவே உடைந்ததுதான் எனக் கூறிவதோடு, படம் பன்வாரின் செல்வாக்கைக் காட்டி மிரட்டுவதால் யாரும் இதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து போலீசில் புகார் அளிக்கும் நிலைக்குக் கூடச் செல்லவில்லை.

சாய்பாபாவை முஸ்லீம் என்று அவர்கள் கூறுவது பற்றி கேட்கும்போது, “அதனால் என்ன ? அவர் எங்களின் நம்பிக்கைக்கு உரியவர்” என்று குறிப்பிடுகின்றனர் அந்த மக்கள்.

இந்து மக்களில் பலரும் கடவுளாகவும், கடவுளின் அவதாரமாகவும் கும்பிடும் சாய்பாபாவுக்கே இதுதான் கதி. இது ஏதோ தனிப்பட்ட ஒரு நபரின் நரசிங்கானந்த் சரஸ்வதி என்ற சாமியாரின் கொழுப்பெடுத்த தன்மையிலிருந்து செய்யப்பட்ட செயல் என்று கடந்து போய்விட முடியாது. ஏனெனில் சீரடி சாய்பாபாவை கடவுளாக அங்கீகரிக்க முடியாது எனும் முடிவை எடுத்தது சாமியார்களின் கூட்டமைப்பும், ஆர்.எஸ்.எஸ்.-ன் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்புமான, “தரம் சன்சாத்” எனும் அமைப்பினால் கடந்த 2014-ம் ஆண்டு மோடி ஆட்சியில் அமர்ந்ததும் ஒன்றுகூடி எடுக்கப்பட்ட முடிவு.

பெரும்பாலும் நடுத்தரவர்க்கம் மற்றும் உயர் நடுத்தர வர்க்கம், மேல் தட்டு வர்க்கம் ஆகிய வர்க்கப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே சீரடி சாய்பாபாவை பெருமளவில் கும்பிட்டு வருகின்றனர். அவ்வகையில் ஓரளவுக்கு சமூகச் செல்வாக்குள்ள சீரடி சாய்பாபாவையே ஜிகாதி என்றும் ஏமாற்றுக்கார சாமியார் என்றும் கூறி சிலைகளை உடைத்தெறியத் துவங்கியிருக்கிறது.

சமூகச் செல்வாக்கு உள்ளவர்களின் கடவுளுக்கே இந்துத்துவக் கும்பலிடம் இவ்வளவு தான் மரியாதை என்றால், மாரியாத்தா, அய்யனார், சங்கிலி கருப்பு, முனீஸ்வரன் (முனியன்), கருப்பசாமி போன்ற தமிழக மரபு தெய்வங்கள், அதுவும் மாமிசமும் சாராயமும் உட்கொள்ளும் காவல் தெய்வங்களை என்ன செய்வார்கள் ?

ஏற்கெனவே முனியனை முனீஸ்வரன் என்றும், அய்யனாரை அய்யனார் ஸ்வாமிகள் என்றும், முருகனைக் கந்தன் என்றும் கருப்பனை கருப்பஸ்வாமி என்றும் பார்ப்பனமயப்படுத்தி வைத்திருக்கிறது பார்ப்பனியம். இனி படிப்படியாக மக்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு ஒரே வழிபாட்டு முறை அதுவும் சுத்தமான சைவ வழிபாட்டு முறைதான் என்று நடைமுறைப்படுத்துவதற்கு பெரும் கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளப் போவதில்லை இந்த சஙக பரிவாரக் கும்பல்.

சாய்பாபா சிலை இடிக்கப்பட்டது வழக்கு இல்லாமல் தப்பிக்க முடிந்ததற்கு என்ன காரணம் என்பதைப் பரிசீலித்துப் பார்த்தாலே தெரியும், அந்த கோவிலின் அறங்காவல் கமிட்டியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இதற்கு உடந்தையாக இருப்பதுதான்.

இந்த நிலையை தமிகத்தில் இலகுவாக ஏற்படுத்தத்தான் கோவில்களை தனியார்களின் கையில் ஒப்படையுங்கள் என்கிறது சங்க பரிவாரக் கும்பல். ஆரம்பத்தில் எச். ராஜாவை வைத்து முயற்சித்து செல்ஃப் எடுக்காத இந்த சதித் திட்டத்தை தற்போது ஜக்கி வாசுதேவ் எனும் கார்ப்பரேட் சாமியார் மூலம் துவங்கியிருக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.

இன்று தமிழகத்தில் முக்கியமான கோவில்கள் அனைத்தும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்த வகையில் இந்தக் கோவில்களில் உள்ள வழிபாட்டை முடக்குவதோ, ஒரு கடவுளை இல்லை என்று மறுப்பதோ சாத்தியமில்லை. நாம் மேற்கண்ட “யதி நரசிம்மானந்த சரஸ்வதி”யைப் போன்ற சாமியார்களின் கைக்குச் சென்றால், இனி சீரடி சாய்பாபாவுக்கும், முனியனுக்கும் கோவில்கள் தமிழகத்தில் இல்லாமல் போகும் என்பது மட்டும் உறுதி. அவ்வளவு ஏன் முருகனுக்கும், சிவனுக்குமே அனுமதிப்பார்களா என்பதுதான் கேள்வி!

ஆகவே இது வட இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் மட்டும் நடந்த நிகழ்வு அல்ல, மாறாக இந்துத்துவக் கும்பல் 2014-ம் ஆண்டே எடுத்த முடிவு என்பதையும் அதை செயல்படுத்தும் நிலைக்கு வட இந்தியாவில் வளர்ந்து வந்திருக்கும் காவிக் கும்பல் தமிழகத்தில் அதனைச் செய்யவே ஜக்கி வாசுதேவ் போன்ற சாமியார்களை களத்தில் இறக்கிவிட்டுள்ளது.

இந்தக் கிரிமினல் கும்பலிடமிருந்து மக்களின் பலவகைப்பட்ட வழிபாட்டு உரிமைகளைக் காப்போம் ! சாதாரண மக்களின் பக்திக்கும் சங்க பரிவாரத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை உணர்ந்து கோவில்களை ஆக்கிரமிக்கும் சங்க பரிவாரக் கும்பலின் கனவுக்கு சாவு மணியடிப்போம்.


சரண்
செய்தி ஆதாரம் : Scroll.in

கருத்துகள் இல்லை: