சனி, 10 ஏப்ரல், 2021

ஈழத் தமிழர் சமூகம் அறிவார்ந்த தளத்தில் தாழ்ந்த நிலையில் உள்ளதா?

 

Arun Siddharth : அறிவார்ந்த தளத்தில் மிகத் தாழ்ந்த நிலையில் உள்ளது ஈழத் தமிழர் சமூகம். நம் சிந்தனைகள் , மதிப்பீடுகள் , கருதுகோள்கள் 30 வருட காலமாகத் தேக்கமடைந்துள்ளன. வரலாற்றைப் பற்றிய தர்க்கபூர்வமான புரிதலோ, சமகால உலகச் சிந்தனைகள் பற்றிய அறிவோ இல்லாதவர்கள் நாம். இவற்றை நாம் வாழும் சுற்றுச் சூழலுடன் பொருத்திச் சிந்திக்கும் வழக்கமோ பழக்கமோ அற்றவர்கள் நாம். இந்தப் போதாமைகளை நிரப்பவே நாம் எப்போதும் கூச்சலிடுகின்றோம். கும்பலாகச் சேர்ந்து கொண்டு மிகை உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றோம். எந்த ஒரு விடயத்தையும் உச்சகட்ட உணர்ச்சி நிலைகள் வழியாகவே அணுகுகின்றோம்.

இங்கு வாசிப்பு என்பது ஒரு அறிவுச் செயற்பாடு என்பதைப் பல்லாயிரத்தில் ஒரு ஈழத்தமிழர் தெரிந்திருந்தாலே அது ஆச்சர்யமானது. பெரும்பான்மையானவர்கள் புத்தக வாசிப்பால் என்ன பயன் என்றுதான் கேட்பார்கள். உலகியல் சார்ந்த பெளதீக வாழ்க்கையில் வாசிப்பால் கிடைக்கும் உடனடி லாபம் என்ன என்றுதான் கேட்பார்கள்.
வாசிப்பே இந்த லட்சணத்தில் இருக்கையில் நுண் வாசிப்போ நுண் அரசியல் பற்றியோ பேச வேண்டியதேயில்லை.
பிரித்தானியாவில் வாழ்ந்தாலும் நோர்வேயில் வாழ்ந்தாலும் கனடாவில் வாழ்ந்தாலும் இலங்கையில் ஒரு சிறுவனனான அருண் சித்தார்த் ஆகிய நான் தெரிவிக்கும் கருத்துக்களைத் தாங்கிக் கொள்ள முடியாத ஈழத்தமிழர்கள் பெரும்பான்மையானோர் தொலைபேசி எடுத்து தூசன வார்த்தைகளால் என்னை அர்ச்சிப்பதை இதன் நீட்சியாகவே நான் பார்க்கிறேன்.தமிழ் தமிழர் எனக் குத்தி முறியும் பலர் கலாச்சாரத்துக்கும் பண்பாட்டுக்கும் கூட வேறுபாடு தெரியாதவர்கள்.
போராட்டம் என்ற போர்வையில் ஈழத் தமிழர் சமூகம் மொண்ணையாக்கப்பட்டிருக்கின்றது. “சுவருக்கும் வாய் இருக்கு” என்பதை நம்பியது தானே இந்தச் சமூகம் மொண்ணையாக்கப்பட்டிருக்கும் இந்தச் சமூகத்தின் முதிரா மனங்களுக்கு கிளர்ச்சியூட்டும் அரசியலே மணிவண்ணன், பொண்ணம்பலம், கஜேந்திரன் , சுகாசு, சிவாஜிலிங்கம், அனந்தி, விக்னேசுவரன், போன்றவர்கள் முன்னெடுப்பது ஆகவே தான் இவர்களை நான் முழுமையாக எதிர்க்கிறேன்.

கருத்துகள் இல்லை: