வெள்ளி, 4 டிசம்பர், 2020

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் தெலுங்கு தேசம் முன்னணியில் ஓவைசியின் கட்சி இரண்டாவது இடத்தில் பாஜக மூன்றாவது இடத்தில்

minnambalam : ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் காலை வரை பாஜக முன்னிலையிலிருந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி, டிஆர்எஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளன.

மொத்தம் 150 வார்டுகளை கொண்ட ஹைதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல், மாநில சட்டமன்றத் தேர்தலைப் போலவும், நாடாளுமன்றத் தேர்தல் போலவும் இந்தியா உற்றுநோக்கும் தேர்தலாக மாறி இருக்கிறது. இதற்குக் காரணம், தென்னிந்தியாவில் பாஜக வேரூன்ற தெலங்கானா மாநிலம் ஒரு சிறந்த வாய்ப்பாக பாஜக கருதுகிறது. அதோடு கடந்த சில மாதங்களாகவே பாஜகவுக்கும் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிரியச் சமிதி கட்சிக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. எனவே மத்திய பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணிகளை முதல்வர் சந்திரசேகர் ராவ் மேற்கொள்ள இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதோடு அண்மையில் தெலங்கானா மாநிலம் துபாக் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜக வெற்றி பெற்றது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் டிஆர்எஸ் வசமிருந்த நான்கு முக்கிய தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.

சமீப தேர்தல் முடிவுகள் இவ்வாறு பாஜகவுக்கு ஆதரவாக இருந்த நிலையில் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலிலும் வெற்றி பெறத் தீவிர முனைப்புக் காட்டியது. இதன் காரணமாக ஒருபக்கம் அமித் ஷா, மறுபக்கம் ஜேபி நட்டா என பாஜகவின் முக்கிய தலைவர்கள் மாநகராட்சி தேர்தலுக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டனர். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் களமிறக்கப்பட்டனர்.

இவ்வாறு பாஜகவுக்கும் டிஆர்எஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 46.6% வாக்குகள் மட்டுமே பதிவாகின. ஹைதராபாத் தேர்தல் வரலாற்றில் மிக குறைந்த வாக்குப்பதிவு இது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், காலை முதலே வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், தேர்தல் முடிவுகளில் நிமிடத்திற்கு நிமிடம் கட்சிகள் மாறி மாறி முன்னிலை வகிக்கின்றன.

காலை 11 நிலவரப்படி பாஜக 88 வார்டுகளிலும், டிஆர்எஸ் 32 வார்டுகளிலும் ஏஐஎம்ஐஎம் கட்சி 13 வார்டுகளிலும் முன்னிலை பெற்றிருந்தது. மதியம் 2 மணி நிலவரப்படி டிஆர்எஸ் கட்சி கூடுதல் இடங்களில் முன்னிலை பெறத் தொடங்கியது. இதையடுத்து டிஆர்எஸ் 57 இடங்களிலும், ஏஐஎம்ஐஎம் 31 இடங்களிலும், பாஜக 22 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாகக் கூறப்பட்டது.

இவ்வாறு மாறுபட்ட, முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தெலங்கானா மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெற்றி பெற்ற வார்டுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 54 வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், டிஆர்எஸ் 28 வார்டுகளிலும், பாஜக 9 வார்டுகளிலும், ஏஐஎம்ஐஎம் 15 வார்டுகளிலும் காங்கிரஸ் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

கருத்துகள் இல்லை: