வெள்ளி, 4 டிசம்பர், 2020

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் . டிஆர்எஸ் 56.. பாஜக 48, ஓவைசி 44!

tamil.oneindia.com : ஹைதராபாத்: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்தது. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் 150 இடங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆளும் டிஆர்எஸ் 56 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது, பாஜக 48 தொகுதிகளில் வென்றுள்ளது. ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 44 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வென்றுள்ளன. 

தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சியின் 150 வார்டுகளுக்கான தேர்தல் டிசம்பர் 1-ந் தேதி நடைபெற்றது. மாநில சட்டசபை தேர்தலைப் போல ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் களைகட்டி இருந்தது. இந்த தேர்தலில் தெலுங்கானாவின் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகியவை தனித்து களம் கண்டன. 

 
ஹைதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுவதில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டின. பாஜகவின் மூத்த தலைவர்களான உள்துறை அமைச்சர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 1,222 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
டிஆர்எஸ் 150, பாஜக 149, காங்கிரஸ் 146, தெலுங்கு தேசம் 10, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 51 இடங்களில் போட்டியிட்டன.

இந்த தேர்தலில் பதிவான அனைத்து வாக்குகளும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதற்கான விரிவாக ஏற்பாடுகளும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னணியில் இருந்தது. ஆனால் வாக்கு சீட்டுகள் எண்ணிக்கையில் நிலவரம் மாறியது. டி.ஆர்.எஸ். கட்சி முதலிடத்திலும் . பாஜக 2வது இடத்தில் உள்ளது. ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் 3வது இடத்திலும் உள்ளன. கடந்த ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் வெறும் 3 இடங்களை பெற்றிருந்த பாஜக இம்முறை 48 இடங்களில் வென்றுள்ளது.


கருத்துகள் இல்லை: