திங்கள், 30 நவம்பர், 2020

விவசாயிகள் பேரணி - போராட்டத்தை தொடருவதாக எச்சரிக்கை.. பிரதமரின் கருத்தால் அதிருப்தி BBC

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் பற்றி திரித்துக்கூறி, விவசாயிகளை எதிர்கட்சிகள் திசை திருப்ப முயல்வதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். வாரணாசியில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய மோதி, புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகள் தங்களுடைய வருவாயை பெருக்கிக் கொள்ள வழங்கப்பட்ட வாய்ப்பு என்று தெரிவித்தார். அடுத்து வரும் நாட்களில் அந்த சட்டங்களின் பலன்களை விவசாயிகள் காண்பார்கள் என்று அவர் கூறினார். 

கடன் தள்ளுபடி என்பது ஒரு வகை பித்தலாட்டம் என்று கூறிய மோதி, எதிர்கால நலன்கள் என்ற பெயரில் இல்லாத ஒன்றை கூறி விவசாயிகளை முந்தைய அரசுகள் ஏமாற்றி வந்ததாக தெரிவித்தார். சிறிய விவசாயியால் சந்தைக்குச் சென்று நேரடியாக தனது பொருட்களை விற்கக் கூடிய நிலை இல்லை என்றும், அந்த நிலைமையை மாற்றி அவர்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்க தற்போதைய வேளாண் சட்டங்கள் உதவியுள்ளன என்றும் மோதி குறிப்பிட்டார்.

இந்த நிலையில், "நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என்றால் மட்டுமே மத்திய அரசுடன் பேசுவோம், இல்லையென்றால் போராட்டத்தை தொடருவோம்" என்று டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லிக்கு வரும் விவசாயிகளை வெளி மாநில எல்லைகளில் தடுக்கக் கூடாது, நிபந்தனையின்றி பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை போராட்டத்துக்காக டெல்லிக்கு கடும் குளிரை பொருட்படுத்தாமல் வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், உண்மைக்கு ஆதரவாக நீங்கள் இருக்கப் போகிறீர்களா, பொய்க்கு துணை நிற்கப்போகிறீர்களா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார். தவறான கண்ணோட்டங்கள் அடிப்படையில் தற்போதைய விவசாயிகள் போராட்டம் நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், காலம் தாழ்த்தாமல் எவ்வித நிபந்தனைகளுமில்லாத பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்த வேண்டும் என்றும் இதில் பிரதமர் நரேந்திர மோதி தலையிட வேண்டும் என்றும் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு செவி சாய்த்து பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதே கோரிக்கையை வலியுறுத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, "விவசாயிகளை தீவிரவாதிகள் என்று அழைத்த ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் மன்னிப்பு கோர வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

5ஆம் நாளாக தொடரும் போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் புறநகர் பகுதியான புராரி நிரங்காரி மைதானத்தில் ஐந்தாவது நாளாக திங்கட்கிழமை விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

'டெல்லி சலோ' என இந்தியில் அழைக்கப்படும் டெல்லி நோக்கிச் புறப்படு என்ற பெயரில் அவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை கடந்த வாரம் அவர்கள் முன்னெடுத்தனர். இதை பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் வழிநடத்தினர். அவர்களுக்கு ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் அமரிந்தர் சிங் ஆதரவு தெரிவித்தார்.

விவசாயிகள் போராட்டம்

எனினும், ஹரியாணா மாநிலத்தைக் கடந்து டெல்லிக்குள் நுழைய விவசாயிகளுக்கு தொடக்கத்தில் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இருப்பினும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட விவசாயிகள் டெல்லியை அடுத்த குருகிராம் எல்லையில் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறுபுறும் விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுக்க உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்தும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முற்பட்டதால், உத்தர பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்கள் வழியாக டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதை தடுக்க நெடுஞ்சாலைகளிலும், தலைநகரின் எல்லை சாலைகளை இணைக்கும் வெளி மாநில சிறிய சந்துகளிலும் காவல்துறையினர் தடுப்புகள் போட்டு வழியை அடைத்தனர்.

விவசாயிகள் போராட்டம்

பல்வேறு இடங்களில் விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டதில் இரு தரப்புக்கும் இடையே மோதல்கள் நடந்தன.

சில இடங்களில் விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர், குருகிராம் பகுதியில் தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர். சில இடங்களில் கண்ணீர் புகை குண்டுகளும் வீசிய காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

இந்த நிலையில், டெல்லி காவல்துறையின் நடவடிக்கை கடும் விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், விவசாயிகள், டெல்லி ஜந்தர் மந்தரில் திட்டமிட்ட போராட்டத்துக்கு பதிலாக, புறநகர் பகுதியில் உள்ள புராரி மைதானத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட காவல்துறையினர் அனுமதி அளித்தனர்.

அவர்களின் போராட்டத்துக்கு டெல்லியில் ஆளும் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆதரவு தெரிவித்தது. விவசாயிகள் மீது காவல்துறையினர் காட்டும் கெடுபிடிகளை ஏற்க மறுத்த டெல்லி அரசு, போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான குடிநீர், நடமாடும் கழிவறை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்துள்ளது.

விவசாயிகள் போராட்டம்

இந்நிலையில் நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், புராரி மைதானத்தை விட்டு விவசாயிகள் வெளியே செல்வதற்கு காவல்துறையினர் கட்டுப்பாடுகள் விதித்தனர்.

இதனால், புராரி மைதானத்தில் மிகப்பெரிய சிறைச்சாலையில் தாங்கள் அடைக்கப்பட்டதாக விவசாயிகள் கூறி போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.

இந்த நிலையில், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என விவசாயிகள் அறிவித்தனர். இருப்பினும் அரசாங்கம் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும் என்றும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பே கட்டுப்பாடுகளை விதிக்க கூடாது என்றும் அவர்கள் நிபந்தனை விதித்தனர்.

இதேவேளை, டெல்லி - ஹரியாணா எல்லைகளின் பல இடங்களில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக டெல்லியின் கிழக்கு எல்லைப் பகுதியான திக்ரி மற்றும் வடக்கு எல்லைப் பகுதியான சிங்கு ஆகிய இரண்டு இடங்களிலும், விவசாயிகள் போராடி வருவதால், போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாக டெல்லி போக்குவரத்து காவல் துறையினர், திங்கட்கிழமை காலையில் தெரிவித்தனர்.

மேலும் ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு வரும் மாற்றுப் பாதைகளிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்

உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு சாலை வழியாக வர காஸியாபாத் - காஸிபூர் எல்லையைக் கடக்க வேண்டும். இப்போது அந்த எல்லைப் பகுதியிலும், விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இந்த சாலையில் விவசாயிகள் தங்கி இருந்து போராடியதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

டெல்லி புறநகர்ப் பகுதியில் உள்ள புராரி எனும் இடத்தில் போராட்டத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், டெல்லி ஜந்தர் மந்தர் அருகே போராட்டம் நடத்தவே விவசாய சங்கங்கள் விரும்புகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்

டெல்லி எல்லையில் இருப்பவர்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்றால் டிசம்பர் 3ஆம் தேதி அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அமித் ஷா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் புராரி பகுதிக்கு சில விவசாயிகள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வீட்டில் ஆலோசனை நடத்தப்பட்டதாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமர் கலந்து கொண்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லி ஹரியாணா எல்லைப் பகுதியில் உள்ள டிக்ரியில் இன்று குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பிரார்த்தனை செய்து தங்களுக்குள் 'பிரசாதத்தை' பரிமாறிக் கொண்டு, காவல்துறையினருக்கும் அதை விவசாயிகள் வழங்கினார்கள்.

இதேவேளை, டெல்லிக்குள் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படும்வரை புராரியில் போராட்டத்தைத் தொடர முடிவெடுத்துள்ள விவசாயிகளில் பலரும் வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும்வரை மாதக்கணக்கில் போராட்டத்தைத் தொடர முடிவெடுத்துள்ளனர். பலரும் குடும்பங்களுடன் டெல்லி புராரியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் சமையல் பாத்திரங்கள், படுக்கை விரிப்புகள், தற்காலிக கூடாரங்களுடன் அங்கே திரண்டிருக்கிறார்கள்.

டெல்லியில் தற்போது குளிர்காலம் தொடங்கியிருக்கிறது. இதனால் இரவில் கடுமையான பனி நிலவுகிறது. இருந்தபோதும் ஆயிரக்கணக்கில் விவசாயிகள் அங்கே தினமும திரண்டு வருகிறார்கள். இதனால் அங்கு நிலைமை பதற்றம் அடையத் தொடங்கியிருக்கிறது.

கருத்துகள் இல்லை: