செவ்வாய், 1 டிசம்பர், 2020

ரஜினி : அரசியலுக்கு வர மாட்டேன்.. ஒரு நாளைக்கு 14 மாத்திரை .... வெளிய போகக் கூடாதுனு டாக்டர்கள் சொல்லிட்டாங்க

 டிஜிட்டல் திண்ணை:  அரசியலுக்கு வர மாட்டேன் -தயாராகும் ரஜினி அறிக்கை!

minnambalam :  “நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்தினரிடம் நேற்று (நவம்பர் 30) அன்று சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது தனது நிலைப்பாட்டை அவர் தெள்ளத் தெளிவாக சொல்லியிருக்கிறார்.   இதுபற்றியெல்லாம் மண்டபத்தில் மன்றத்தினரிடம் ரஜினி பேசியது என்ன என்ற தலைப்பில் நேற்றே மின்னம்பலத்தில் விரிவாக வெளியாகியிருக்கிறது. ரஜினி தனது மன்ற நிர்வாகிகளிடம், இப்போதைய தனது உடல் நிலை பற்றித்தான் அதிக அழுத்தம் கொடுத்துப் பேசியிருக்கிறார். ‘அரசியலுக்கு வரணும்னு உங்களை விட எனக்கு அதிக ஆர்வமும் ஈடுபாடும் இருந்துச்சு. கட்சி ஆரம்பிக்கிறது முன்னாடி சமயபுரம் மாரியம்மன் கோயில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி சர்ச்சுக்கு போயிட்டு மக்களை சந்திக்குறதுனு முடிவெடுத்திருந்தேன். ஆனா இந்த கொரோனா எல்லாத்தையுமே மாத்திப் போட்டுருச்சு.

எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது உங்களுக்குத் தெரியும். நான் இப்போ ஒரு நாளைக்கு 14 மாத்திரை சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன். வெளிய போகக் கூடாதுனு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டா என் உடம்புல அதிக நோய் எதிர்ப்பு ஷக்தி கிடைக்கும். மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுநீரகம், அதிக அளவு நோய் எதிர்ப்பு ஷக்தியை தாங்காது. என் கிட்னி தாங்கக் கூடிய அளவு நோய் எதிர்ப்பு ஷக்தியை விட அதிகமா போனா அதுவும் பிரச்சினைஆயிடும்.

இந்த நிலையில நான் கட்சி ஆரம்பிச்சு மக்களை யாரும் சந்திக்க முடியாம நாம வெறும் பத்தோடு பதினொன்னா இன்னொரு கட்சியா இருக்கறதை நான் விரும்பல, நீங்களும் விரும்ப மாட்டீங்க. நான் அரசியலுக்கு வந்து எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் எனக்குக் கவலையில்லை. நாளைக்கு இப்படி வயசானவரை அழைச்சிட்டு வந்து இப்படி ஆக்கிட்டாங்களேனு உங்கள் மீதுதான் பழி வந்துவிடும்’ என்று ரஜினி உருக்கமாக பேசிய பேச்சு மாவட்டச் செயலாளர்களை உலுக்கிவிட்டது, ‘தலைவா உங்க உடல் நலனைப் பாத்துக்கங்க. அதுதான் முக்கியம்’என்று கோரஸாக சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

ரஜினிகாந்த் சுமார் 40 ஆண்டு கால கலையுலகப் பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர். 96 ஆம் ஆண்டு எந்த தனிப்பட்ட ஆலோசகரும் இல்லாமல் பாட்ஷா விழாவில் தமிழகத்தின் குண்டு கலாசாரத்தைப் பற்றி மேடையிலேயே வெடித்தார். அதன் பிறகுதான் அரசியலில் ரஜினி எதிர்பார்க்கப்பட்டார்.

ரஜினி அரசியலுக்கு வர முடியும் என்று அப்போதே ஜி.கே. மூப்பனார் நம்பினார். இதுகுறித்து ரஜினியுடன் பேசினார். அப்போதைய பிரதமர் நரசிம்மராவும் பேசினார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துடனும் ரஜினி அடிக்கடி-பேசுபவர். அப்போதைய திமுக தமாகா கூட்டணிக்கு கலைஞர், மூப்பனார், சிதம்பரம் ஆகியோருடன் இருந்த நெருக்கம் காரணமாகவும் ரஜினி ஆதரவு கொடுத்தார்.

இப்போது சிலர் ரஜினி பாஜக தலைவர்களிடம் பயப்படுகிறார் என்று ஒரு கருத்துருவாக்கத்தைக் கூறி வருகின்றனர். நேற்றைய நிகழ்ச்சியிலேயே, ‘நான் எதிர்பார்க்காத இடத்தில் இருந்தெல்லாம் எனக்கு பிரஷர் வருது’ என்று குறிப்பிட்டிருக்கிறார் ரஜினி. திமுக, அதிமுக ஆகியவை ரஜினியை அரசியலுக்கு வரவேண்டாம் என்றும், பாஜகவோ அரசியலுக்கு வரவேண்டும் என்றும் தொடர்ந்து தத்தமது கோணங்களில் அழுத்தம் கொடுத்து வந்ததை, கேம் சேஞ்சர் ரஜினி: மூவர் ஆடும் ஃபிரண்ட்லி மேட்ச் என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் எழுதியிருந்தோம்,

இந்நிலையில் வெளியே இருந்து பார்க்கப்படும் ரஜினி வேறு, அருகே இருந்து பார்க்கப்படும் ரஜினி வேறு, அதாவது அவரது உடல் நலம் சார்ந்த பிரச்சினைகள் ரீதியாக அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றே அரசியல் தலைவர்கள் நினைக்கிறார்கள்.

அமித் ஷாவின் சமீபத்திய சென்னை விசிட்டுக்குப் பிறகு ரஜினி பற்றி மோடியிடம் பேசியிருக்கிறார். ரஜினி உடல் நிலை தொடர்பான தனது நிலைமையை தனக்குத் தெரிவித்ததாக அமித்ஷா மோடியிடம் கூறியுள்ளார். மருத்துவர்கள் சொல்லும் காரணங்களையும் மோடியிடம் அமித் ஷா தெரியப்படுத்தியுள்ளார். அப்போது மோடி,’ரஜினியின் உடல் நலம் முக்கியம். உடல் நலம் சரியில்லைனு தெரிஞ்ச பிறகும் நாம் அவரை கட்டாயப்படுத்தக் கூடாது. அவர் நன்றாக வாழ வேண்டும்.அதுதான் முக்கியம்’ என சொல்லிவிட்டார்.’

தமிழகத்தில் ரஜினியோடு மிகவும் நெருக்கமானவர் ப. சிதம்பரம். அவரது வட்டாரத்தில் ரஜினியின் அரசியல் வருகை பற்றி சமீபத்தில் விவாதிக்கப்பட்டபோது கூட, ‘ரஜினி ரெஸ்ட்ல இருக்குறதுதான் பெட்டர். அவர் இருக்கும் நிலைமையில் அவர் வெளியே வருவது என்பது vulnerable ஆயிடும்’என்று கூறியதாகச் சொல்கிறார்கள்.

இப்படி ரஜினி அரசியலுக்கு வரவேண்டுமென்று என்று மிகவும் விரும்பிய அவருக்கு நெருக்கமானவர்கள் கூட இப்போது அவர் ஓய்வில் இருப்பதே ரஜினியின் உடல் நலனுக்கு முக்கியம் என்ற ரஜினியின் முடிவை ஆமோதிக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்

கருத்துகள் இல்லை: