வெள்ளி, 4 டிசம்பர், 2020

நடிகை சௌந்தர்யாவுக்கு இருந்த நன்றி உணர்வு கூட ரஜினி காந்துக்கு இல்லையே !

நடிகை சௌந்தர்யா
Manisekaran : · சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! 70 வயது வரையில் திரைத்துறையில் சூப்பர்ஸ்டாராக நிலைத்து நிற்பதே பெரும் சாதனைதான். இனி, இவருடைய சாதனையை முறியடிக்க எவரும் வரப்போவதுமில்லை. தமிழ்த் திரையுலகத்தைத் தாண்டி இந்தியத் திரையுலகம், சீனா,ஜப்பான் என்று பல நாடுகளுக்கு தன்னுடைய சினிமாப் புகழை பரவச் செய்தார். உலகநாயகன் கமல் அவர்கள் ஒவ்வொரு படத்திற்கும் தன்னுடைய

கதாபாத்திரத்திற்காக மிகப் பெரும் உழைப்பை அர்ப்பணிக்கிறார்.சினிமாவில் சம்பாதித்த காசை சினிமாவிற்கே செலவிடுகிறார்.போட்டப் பணம் திரும்பி வருமா என்றெல்லாம் யோசிப்பதில்லை.ஆனால்,கமல் அவர்களால் இந்திய சினிமாவைத் தாண்டி போக முடியவில்லையே! ஒரு முறை முன்னாள் பாரதப் பிரதமர் திரு.மன்மோகன்சிங் அவர்கள் ஜப்பான் பாராளுமன்றத்தில்,

"எங்கள் நாட்டு சூப்பர்ஸ்டாரை உங்கள் நாட்டு மஹாராஜா போல் கொண்டாடுகிறீர்கள். அதற்காக அவரின் சார்பாக என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ",என்று சொன்னார்.
இப்படிப் புகழும் பெருமையும் கொட்டிக் கொடுத்த சினிமாவிற்கு திருப்பி என்ன செய்தார் என்பதுதான் நம்முள் எழும் கேள்வி.
சினிமா எனும் அற்புத சாதனைத்தை சார்லிசாப்ளினைப் போல் மனித சமூகத்திற்காக பயன்படுத்தியவர்கள் எவரும் இல்லை.
அதனால்தான் பெர்னாட்ஷா,'திரையுலகில் பல ஜாம்பவான்கள் இருக்கலாம்.மேதையென்றால் அது சார்லிசாப்ளின் மட்டுமே',என்றார்.
ரஜினிக்குப் பின்னால் வந்த அமீர்கான் கூட சமூகச்சிந்தனையோடு படங்களை தயாரித்தும் நடித்தும் இருக்கிறார்.
லகான்,தாரேஜமீன்பர்,பகவத்சிங்,தங்கல் என்று சில படங்களையாவது சொல்லலாம்.
விமானவிபத்தில் அகால மரணமடைந்த நடிகை சௌந்தர்யா கூட, தனக்கு புகழும் பணமும் சம்பாதித்துக் கொடுத்த சினிமாவிற்கு கைம்மாறாக,'Dweepa',எனும் கன்னட மொழிப் படத்தை தயாரித்து கதாநாயகியாக நடித்தார்.இப்படத்தின் மூலம் இரண்டு தேசியவிருதுகளைப் பெற்றார்.சிறந்த படத்திற்காக தயாரிப்பாளராகிய இவருக்கும்,சிறந்த இயக்குனருக்காக கிரிஷ்கேசரவள்ளிக்கும் வழங்கப்பட்டது.நான்கு கர்நாடக மாநில விருதுகளையும் பெற்றார்.
2004ஆம் ஆண்டு நடிகை சௌந்தர்யா அவர்கள் விமான விபத்தில் மரணம் அடையாமல் இருந்திருந்தால் இந்திய சினிமாவிற்காக மிகச்சிறந்த படங்களை உறுதியாக தயாரித்திருப்பார்.இத் திரைப்படம் பல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டது.நானும் அந்தப் படத்தைப் பார்த்து வியந்து இருக்கிறேன்.இந்தப் படத்தைப் பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுதவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
இத்திரைப்படம் வணிகரீதியான திரைப்படம் கிடையாது.போட்ட முதலீடு திரும்பி வருமா என்ற உத்தரவாதமும் கிடையாது.ஆனாலும் ஏன் செய்தார்.சினிமாவின் மீதான நேசிப்பு.நமக்கு வாரி வாரி வழங்கிய சினிமாவிற்கு,நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நன்றிக்கடன்,அக்கறை என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
ஏன் இந்த உணர்வெல்லாம் ரஜினிக்கு வரவேயில்லை.அவர் சினிமாவை பணம் காய்க்கும் மரமாக மட்டுமே நினைத்து விட்டார்.சினிமா எனும் அற்புத சாதனத்தை வைத்து கலைநோக்குடன் தரமான படங்களை சிறு முதலீட்டில் தயாரித்திருக்கலாம்.ஆனால்,தோணவில்லை;செய்யவில்லை.
தமிழ்சினிமா அவருக்கு எவ்வளவோ கொடுத்தது.அப்படிக் கொடுத்த தமிழ்சினிமாவை, உலகசினிமாவை நோக்கி நகர்த்த வேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட ஏற்படவில்லை என்பதுதான் பெரும் ஆச்சர்யம்.
தனது ரசிகர்களின் எண்ணத்தை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணமே ஏற்படவில்லை.
மாற்று சினிமாவை உருவாக்க எண்ணாதவர்,மாற்று அரசியலை உருவாக்கப் போகிறாராம்.
மக்கள் அவருக்கு கொடுக்கப் போகும் பதிலடியை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

கருத்துகள் இல்லை: