திங்கள், 30 நவம்பர், 2020

தமிழ் சேனலில் சம்ஸ்கிருத செய்திகள்: மத்திய அரசின் மொழித் திணிப்பு!

minnambalm :டெல்லி தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தினமும் காலை 7.15 மணி முதல் 7.30 மணி வரை 15 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் சம்ஸ்கிருத செய்திகளை அனைத்து மாநில மொழி செயற்கைக்கோள் ஒளிபரப்பு அலைவரிசைகளும் அதே நேரத்தில் ஒளிபரப்ப வேண்டும். இல்லையெனில் அடுத்த அரை மணி நேரத்துக்குள் ஒளிபரப்ப வேண்டும் என அனைத்து மண்டல தொலைக்காட்சி நிலைய அதிகாரிகளுக்கும் கடந்த 26ஆம் தேதி சுற்றறிக்கை சென்றுள்ளது.

அதேபோல், சனிக்கிழமைதோறும் மாலை 6.00 மணிக்கு டெல்லி தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் வாராந்திர செய்தித் தொகுப்பை அதே நேரத்திலோ, அந்த நாளில் வேறு ஏதேனும் நேரத்திலோ ஒளிபரப்ப வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநிலங்கள் மீது மத்திய அரசு இந்தியைத் திணிப்பதாகவும், புழக்கத்தில் இல்லாத சம்ஸ்கிருத மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு அப்பட்டமான சம்ஸ்கிருத திணிப்பு என எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

இதுகுறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் 15,000 பேர் அளவுக்கே பேசப்படும் - ‘உலக வழக்கழிந்த’ சம்ஸ்கிருத மொழியிலான செய்தி அறிக்கையை 8 கோடிக்கும் அதிகமான தமிழ் பேசும் மக்களிடமும், அதுபோலவே பல கோடி அளவிலான இந்தியாவின் பிற மொழி பேசும் மக்களிடமும் திட்டமிட்டுத் திணிப்பது, அவரவர் தாய்மொழி மீது - மொழி சார்ந்த தேசிய இனத்தின் மீது, தகவல் தொழில்நுட்பத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்ற பகிரங்கப் பண்பாட்டுப் படையெடுப்பாகும் எனச் சாடினார்.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாடு எனும் ஆலமரத்தை, இந்தி - சம்ஸ்கிருதத் திணிப்பு எனும் கோடரி கொண்டு பிளக்கும் பிற்போக்கான செயல்பாட்டை இனியாவது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உடனடியாக நிறுத்திட வேண்டும் என்று வலியுறுத்தினார் ஸ்டாலின். சம்ஸ்கிருதத் திணிப்பைத் திரும்பப் பெறாவிட்டால் உடையப்போவது தொலைக்காட்சிப் பெட்டிகள் அல்ல, தாய்மொழியை உயிரெனக் கருதும் மக்களின் பங்கேற்புடன், மத்தியில் ஆட்சி செய்வோரின் ஆணவப் போக்கும் - அதிகார மமதையும்தான் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் சுமார் 14,000 பேர் மட்டுமே சம்ஸ்கிருதத்தைப் பேசுவதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் கூறுவதாகத் தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “அவர்களுக்காக தூர்தர்ஷனின் தேசிய அலைவரிசையில் தினமும் செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன. அதற்கும் கூடுதலாக அனைத்து மாநில மொழி அலைவரிசைகளும் சம்ஸ்கிருத செய்திகளை ஒளிபரப்ப வேண்டும் என்பது தேவைகளைச் சார்ந்ததாக தெரியவில்லை; மாறாக, சம்ஸ்கிருதம் பேசாத, அம்மொழி செய்திகளைப் பார்க்க விரும்பாத மக்கள் மீது சம்ஸ்கிருதத்தைக் கட்டாயப்படுத்தி திணிக்கும் முயற்சியாகவே பார்க்கப்படும்” என்று சாடினார்.

சம்ஸ்கிருதம் பேசாத மக்கள் மீது நடத்தப்படும் மொழி மற்றும் கலாச்சாரத் தாக்குதல் ஆகும். எதிர்காலத்தில் இந்தியா என்பது ஒற்றை நாடு; அதில் இந்தி, சம்ஸ்கிருதம் மட்டுமே இரட்டை மொழிகள் என்ற நிலையை ஏற்படுத்துவதற்கான மொழி ஆதிக்கத்திற்கான தொடக்கமாகவே இதைப் பார்க்க வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டார் ராமதாஸ். பொதிகை உள்ளிட்ட மாநில மொழி தூர்தர்ஷன் தொலைக்காட்சிகளில் சம்ஸ்கிருத செய்திகளைத் திணிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பொதிகை தொலைக்காட்சியில் சம்ஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒவ்வொரு நாளும் 15 நிமிடங்கள் ஒதுக்க வேண்டுமென்று மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆணையைத் திரும்பப்பெற வேண்டும். மொழித் திணிப்பு வேலையை மத்திய அரசு கைவிடவேண்டும் என விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் வலியுறுத்தினார்.

எழில்

கருத்துகள் இல்லை: